ஸ்டெர்லைட் தாமிர ஆலை யைச் சுற்றியிருக்கும் பகுதியில் நிலத்தடி நீரில் கடுமையாக மாசபட்டிருப்பதாக மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஜூலை 23 அன்று மாநிலங்களவையில் தெரிவித்தார். மத்திய நிலத்தடி நீர் வாரியம் சமீபத்தில் நடத்திய இந்த ஆய்வில், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியிருக்கும் பகுதி நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான காட்மியம், குரோமியம், மாங்கனீசு, ஆர்செனிக், இரும்பு போன்ற உலோக மாசுக்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது.
மாநிலங்களவையில் இந்த அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கும்போது அர்ஜுன் ராம் இந்தத் தகவலைத் தெரிவித்தார். நிலத்தடி நீர், காற்று மாசுபாட்டை உருவாக்குவதால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே 22 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
சிறந்த நிர்வாகம்: கேரளா முதல் இடம்
இந்தியாவில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் (Public Affairs Index 2018) ஜூலை 21 அன்று வெளியானது. இந்தப் பட்டியலில் கேரளா முதலிடத்தையும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் தெலங்கானா மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. நாட்டில் சிறந்த பொது நிர்வாகம் நடைபெறும் பெரிய மாநிலமாகக் கேரளா மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
பெங்களூருவைச் சேர்ந்த ‘பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர்’ இந்தப் பட்டியலை 2016-ம் ஆண்டிலிருந்து வெளியிட்டுவருகிறது. இந்தப் பட்டியலில் சிறிய மாநிலங்களில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டது. சமூகப் பாதுகாப்பு, மனித வளர்ச்சி, உள்கட்டமைப்பு, பெண்கள் குழந்தைகள் நலன், குற்றம், சட்ட ஒழுங்கு, பொருளாதாரச் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, சுற்றுச்சூழல் போன்ற அம்சங்களை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ராமன் மகசேசே விருது அறிவிப்பு
2018-ம் ஆண்டுக்கான ராமன் மகசேசே விருது பெறுபவர்களைப் பற்றிய அறிவிப்பு ஜூலை 26 அன்று வெளியானது. இந்தியாவிலிருந்து மனநல மருத்துவர் பாரத் வட்வானி, கல்வி சீர்திருத்தவாதி சோனம் வாங்சுக் இருவருக்கும் இந்த ஆண்டுக்கான ராமன் மகசேசே விருது அளிக்கப்படவிருக்கிறது. மனநல மருத்துவர் பாரத் வட்வானி மும்பையின் தெருக்களில் வாழும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்து பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
சோனம் வாங்சுக், லடாக் பகுதியில் கல்வி, கலாச்சார இயக்கத்தை உருவாக்கி அங்கிருக்கும் ஏழை மாணவர்கள் கல்வி பயில காரணமாக இருந்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. ‘3 இடியட்ஸ்’ படத்தில் ஆமிர் கானின் கதாபாத்திரத்துக்கு இவர்தான் தூண்டுகோல். ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படும் இந்த விருதை யூக் சங் (கம்போடியா), மரியா தி லூர்த் மார்டின் க்ருஸ் (கிழக்குத் தைமூர்), ஹோவார்த் தீ (பிலிப்பைன்ஸ்), வோ தி ஹோங் யென் (வியட்நாம்) ஆகியோரும் பெறுகின்றனர்.
வன்முறையைத் தடுக்க அமைச்சர்கள் குழு
நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறைகளைத் தடுப்பதற்கு மத்திய அமைச்சர்கள் குழு அமைத்திருப்பதாக ஜூலை 23 அன்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்தது. உச்ச நீதிமன்றம், கும்பல் வன்முறையைத் தடுப்பதற்காகச் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் இந்த அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குழுவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், சமூக நீதி அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லோட் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். இந்தக் குழு நான்கு வாரங்களுக்குள் தங்கள் பரிந்துரைகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவிருக்கிறது.
ஒடிஷா பழங்குடியினர் வரைபடம் வெளியீடு
நாட்டில் முதன்முறையாக ஒடிஷாவில் பழங்குடியினர் வரைபடத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஜூலை 23 அன்று வெளியிட்டார். பழங்குடி மக்கள் தொகை, கலாச்சார தகவல் அடங்கிய தொகுப்பாக இந்த வரைபடம் அமைந்திருக்கிறது. எஸ்சி, எஸ்டி ஆராய்ச்சி - பயிற்சி மையம், பழங்குடி மொழி, கலாச்சார அகாடமியுடன் இணைந்து இந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறது.
இந்த வரைபடத்தில் பழங்குடி மக்களின் மொழி, பாலின விகிதம், கல்வியறிவு, கலை, கலாச்சாரம் போன்றவை 60 வரைபடங்களில் விளக்கப்பட்டிருக்கின்றன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் மத்தியப் பிரதேசத்தை அடுத்து ஒடிஷாவில்தான் அதிக அளவில் பழங்குடிகள் வசிக்கின்றனர்.
ஊழல் தடுப்பு மசோதா
ஊழல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா 2018 மக்களவையில் ஜூலை 24 அன்று நிறைவேற்றப்பட்டது. ஊழல் வழக்குகளை இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரித்து முடிக்க இந்த மசோதா வழிசெய்திருக்கிறது. மாநிலங்களவையில் ஜூலை 19 அன்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமல்லாமல் லஞ்சம் கொடுப்பவர்களையும் தண்டிக்கும் வகையில் இந்த மசோதாவில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்துடன், அரசு அதிகாரி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் குற்றம் சுமத்தப்படும்போது, அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குமுன் அவரது உயர் அதிகாரியிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்ற அம்சமும் இந்த மசோதாவில் இணைக்கப்பட்டிருக்கிறது.
அதிவேகமாகச் சுழலும் கருவி கண்டுபிடிப்பு
உலகில் அதிவேகமாகச் சுழலும் கருவியை மூன்று பல்கலைக்கழக (பர்டியூ,பெக்கிங், ஷிங்குவா பல்கலைக்கழகங்கள்) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்தக் கருவியின் சுழலி (Rotor) ஒரு நிமிடத்தில் 6,000 கோடி முறை சுழலும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிவேகப் பல் துளைக்கருவியைவிட இந்தக் கருவி 1,00,000 முறை அதிவேகமாக இயங்கக்கூடியது இந்தச் சுழலி. இந்தக் கருவியைப் பயன்படுத்தி ‘குவான்டம் மெக்கானிக்ஸ்’ பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
பாகிஸ்தான் பிரதமராகும் இம்ரான் கான்?
பாகிஸ்தானின் பதினொராவது பொதுத் தேர்தல் ஜூலை 25 அன்று நடைபெற்றது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முதல் கட்ட தேர்தல் முடிவுகளை ஜூலை 28 அன்று வெளியிட்டது. இதில் தேர்தல் நடைபெற்ற 270 தொகுதிகளில் 115 தொகுதிகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக் –இன்சாஃப் (பிடிஐ) கட்சி வெற்றிபெற்றுள்ளது. ‘பாகிஸ்தான் முஸ்லிம் லீக் –என்’ கட்சி 64 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால், 115 தொகுதிகளில் வெற்றிபெற்ற பிடிஐ கட்சித் தலைவர் இம்ரான் கான் , சுயேட்சை வேட்பாளர்களுடன் இணைந்து மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில், பாகிஸ்தான் பொதுத் தேர்தலுக்கான முன் தயாரிப்புகள் நேர்மையாக நடைபெறவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியிருக்கிறது. பாகிஸ்தானின் முக்கிய கட்சிகளும் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டியிருக்கின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago