சேதி தெரியுமா? - நீட் கருணை மதிப்பெண் வழங்கத் தடை

By கனி

நீட் தேர்வைத் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் ஜூலை 20 அன்று இடைக்காலத் தடை விதித்தது. நீட் தேர்வில் ஆங்கில வினாத்தாளைத் தமிழில் மொழிபெயர்த்ததில் ஏற்பட்ட பிழைகளுக்குப் பொறுப்பேற்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்குத் தடைவிதித்தது. சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் இந்த வினாத்தாள் மொழிமாற்றக் குளறுபடியால் தமிழில் தேர்வெழுதிய 24,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

புதிய தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான விஜயா தஹில்ரமணி ஜூலை 20 அன்று அறிவிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி செயல்பட்டுவருகிறார். இவர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதனால் மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான விஜயா தஹில்ரமணி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 17 ஆண்டுகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியவர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக கூட்டணி வெற்றி

நாடாளுமன்றத்தில் ஜூலை 20 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 325 வாக்குகளுடன் வெற்றிபெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் 126 வாக்குகள் பெற்றன. ஒடிஷாவின் பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்கள் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை ஆதரித்தனர். ஆந்திரப் பிரதேசத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காததை எதிர்த்து இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது.

80 லட்சம் ‘நவீன அடிமைகள்’

இந்தியாவில் 80 லட்சம் பேர் ‘நவீன அடிமை’களாக இருப்பதாக ஜூலை 19 அன்று வெளியான ‘உலக அடிமைக் குறியீடு 2018’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2016-ம் ஆண்டின் இந்த அறிக்கையை ‘வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன்’ தயாரித்திருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு 1000 பேருக்கும் 6.1 ‘நவீன அடிமை’கள் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ‘நவீன அடிமை’கள் பட்டியலில் 167 நாடுகளில், இந்தியா 53-வது இடத்தில் உள்ளது. வடகொரியா முதல் இடத்திலும் ஜப்பான் கடைசி இடத்திலும் இருக்கின்றன. ‘நவீன அடிமை’ முறையால் உலக அளவில் 4.03 கோடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கைப்பேசி இணைப்பற்ற 52,000 கிராமங்கள்

இந்தியாவில் 52,000 கிராமங்களில் கைப்பேசி இணைப்பு வசதி இல்லை என்ற தகவல் நாடாளுமன்றத்தில் ஜூலை 18 அன்று தெரிவிக்கப்பட்டது. இதில், அதிகபட்சமாக ஒடிஷாவில் 10,000 கிராமங்களில் கைப்பேசி இணைப்பு வசதி வழங்கப்படவில்லை. அத்துடன், அருணாச்சலப் பிரதேசத்திலும் 51 சதவீதக் கிராமங்களில் கைப்பேசி இணைப்பு வசதி வழங்கப்படவில்லை. கைப்பேசி இணைப்பு வசதி வழங்கப்படாத மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, சட்டீஸ்கர், உத்தரகண்ட், பிஹார், குஜராத், மேகாலயா போன்ற மாநிலங்கள் முன்னணியில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 113 கிராமங்கள் இன்னும் கைப்பேசி இணைப்பு வசதி வழங்கப்படாதவையாக இருக்கின்றன.

பல்கலைக்கழக நியமனங்கள் நிறுத்திவைப்பு

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களின் நியமனங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுறுத்தலின்படி ஜூலை 19 அன்று நிறுத்திவைக்கப்பட்டன. அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதால் பல்கலைக்கழக மானியக் குழு இந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது. இந்நிலையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாநிலங்களவையில், அரசு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நிறுவனங்கள் அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழிகாட்டுதலை அரசு ஏற்காது என்று தெரிவித்தார்.

ஏடிஎம் சீரமைப்புக்கு ரூ.100 கோடி

இந்திய ரிசர்வ் வங்கி புதிய 100 ரூபாய் தாள்களை விரைவில் வெளியிடப்போவதாக ஜூலை 19 அன்று தெரிவித்தது. இந்நிலையில், புதிய 100 ரூபாய் தாள்களுக்கு ஏற்ற வகையில் நாட்டிலுள்ள 2 லட்சத்து 40 ஆயிரம் ஏ.டி.எம். இயந்திரங்களை மாற்றி அமைக்க ரூ.100 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஏ.டி.எம். தொழில்நுட்ப வல்லுநர்களைக் கலந்தாலோசிக்காமல் இந்தப் புதிய ரூ.100 தாள்கள் வடிவமைக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது ஏ.டி.எம். கூட்டமைப்பு. 2016 நவம்பர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி புதிய அளவில் வெளியிடும் ஐந்தாவது ரூபாய் தாள் இது.

இஸ்ரேல் யூத நாடாக அறிவிப்பு

இஸ்ரேலை யூத நாடாகப் பிரகடனம் செய்யும் புதிய சட்டம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஜூலை 19 அன்று நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல் நாடு, 1948 மே 14 அன்று உருவானது. அப்போது வெளியிடப்பட்ட பிரகடனத்தில், “மதம், இனம், பாலினப் பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமூக, அரசியல் உரிமைகள் வழங்கப்படும். மத, மொழி சுதந்திரம் பாதுகாக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேலை யூத நாடாகப் பிரகடனம் செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். 55 பேர் எதிராக வாக்களித்தனர். இந்தச் சட்டத்தில், ஒன்றிணைந்த ஜெருசலேம் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தில் ஹீப்ரு மொழிக்கு மட்டுமே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. அரபு மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்