ஆயிரம் வாசல் 12: சுனாமி தந்த பள்ளி!

By சாலை செல்வம்

“சுனாமியால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்துபோன நாகப்பட்டினத்தில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அதே பகுதியில் சில குழந்தைகள் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதைக் கண்டோம். அவர்களைப் பின்தொடர்ந்தபோது அவர்கள் நாடோடிச் சமூகமான பூம்பூம் மாட்டுக்காரர்கள் என்பது தெரியவந்தது.

அவர்களுக்கான சுனாமி உதவிகளைப் பெற்றுத் தந்ததோடு நாங்கள் வீடு திரும்பிவிடவில்லை . தலைமுறை தலைமுறையாக அவர்களைச் சென்றடையாத கல்வியை வழங்குவது என்று தீர்மானித்து ‘வானவில்’ பள்ளியைத் தொடங்கினோம்” என்கிறார் ப்ரேமா ரேவதி.

பொதுவாகப் பள்ளியில் அனுமதி பெற ரேஷன் கார்டு, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. நாடோடிச் சமூகத்தினருக்கு இவை இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளன. இந்நிலையில் பிற சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களைப் போலவே இவர்களையும் பொதுப் பள்ளியான அரசுப் பள்ளியில் படிக்க வைக்க முயற்சிகள் எடுத்துவருகிறார் ப்ரேமா ரேவதி.

நாடோடிச் சமூகமான பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர்கள் ஆகியோரின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்வதிலும் அவர்களைப் பற்றிய தவறான புரிதலிலிருந்து விடுபட்டுச் சக மாணவராக அவர்களைப் பாவிக்கும் பழக்கத்தைப் பள்ளிகளில் ஏற்படுத்துவதிலும் சிக்கல் நீடித்துவருவதையும் சுட்டிக்காட்டுகிறார். இத்தனை சிக்கல்களையும் புரிந்துகொண்டு நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் நலனை மையமாகக்கொண்டு செயல்பட்டுவருகிறது ‘வானவில்’ பள்ளி.

பாசனத்தைப் பற்றிய பாடம்

செயல்வழிக் கற்பித்தல் முறை, வகுப்பறையைக் கடந்த பாடத்திட்டம் என வெவ்வேறு உத்திகளை இணைத்து இங்கே கல்வி கற்பிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, நாகப்பட்டினம் காவிரிப்படுகை என்பதால் காவிரிப் பாசனத்தைப் பற்றிய பாடம் ஒன்று இவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. “அந்தப் பாடப் பகுதியை மாணவர்களுடன் சேர்ந்து உருவாக்கினோம். அது தொடர்பாகப் பள்ளியைச் சுற்றியுள்ள இரண்டு ஊர்களைத் தேர்ந்தெடுத்தோம். அங்குள்ள நீர்ப்பாசனம், அதன்மூலம் நடக்கும் விவசாயம், விவசாயத்தில் ஈடுபடும் சமூகம், காவிரியை மையப்படுத்திய திருவிழாக்கள் எனத் தலைப்புகள் பிரித்தோம். மாணவர்கள் கேள்விகளைத் தயாரித்தனர்.

பின் கேள்விகளைச் செழுமைப்படுத்தினர். ஊர் மக்களிடம் எப்படிக் கேள்விகளைக் கேட்கலாம் என்பதைப் புரிந்துகொள்வது, திரட்டிய தகவல்களைக் குறிப்பெடுப்பது, அதை வகுப்பறையில் உரையாடலுக்குக் கொண்டுவருவது எனத் திட்டமிட்டோம். ஆவணப் பட இயக்குநர் தீபா தன்ராஜ் கல்வி குறித்துத் தயாரித்த ஒரு ஆவணப்படத்தை மாணவர்களுக்குத் திரையிட்டபோது மேலும் விழிப்புணர்வு பெற்றார்கள். அதன் அடிப்படையில் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளைக் கொண்டு ஊர் மக்களிடம் சென்றோம். அவர்களுடன் உரையாடி, திரட்டிய தகவல்களை மாணவர்களே தொகுத்தனர். மாணவர்களே களப்பணியாளர்களாக உருவெடுத்து அறிக்கையை வடிவமைத்தனர்” என்கிறார் ரேவதி.

வகுப்பறைக்கு வெளியே கற்றல் விரிவடைந்த பின்பு பாடப் பகுதியானது வாழ்க்கையின் பகுதியாக உணரப்படும் என்பதை இந்தத் திட்டம் நிரூபித்திருக்கிறது. ஏனென்றால் காவிரிப் பாசனம் குறித்த ப்ராஜெக்டைச் செய்த மாணவர்கள் அதன்மூலம் அவர்களுக்குக் கிடைத்த கருத்துகளை ஒரு சில மாணவர்கள் படங்களாக வரைந்து கண்காட்சி அமைத்தனர். சிலர் குழுக்களாகப் பிரிந்து வில்லுப்பாட்டு பாடுவது, நாடகம் அரங்கேற்றுவது, கூத்து நிகழ்த்துவது எனக் கற்றதைக் கலையாக்கி அரங்கேற்றினர். கதை எழுதுதல், கதைக்கு ஓவியம் வரைதல். கதைக்கேற்ப ஒளிப்படமெடுத்தல் என வெவ்வேறு வகையான தொடர் பயிற்சிகளில் மாணவர்கள் இங்கு ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இப்படிப் பாடத்தைக் கல்வியின் நோக்கத்தோடு இணைத்து விரிவாக்கும்போது மாணவர்களின் அனுபவம் அறிவார்த்தமாக மாற்றப்படுவதையும் அறிவு அனுபவமாக மாற்றப்படுவதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

உணவு, இடம், கல்வி

“இதைச் சாத்தியப்படுத்த ஆசிரியர்களும் உத்வேகமாகச் செயல்பட்டுவருகிறோம். வரலாற்றாசிரியர்களிடம் ஆலோசனை கேட்பது, கருத்தியலைக் கலைநயத்தோடு வெளிப்படுத்த ஓவியர்களின் பயிலரங்குகளில் பங்கேற்பது போன்ற செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறோம்” என்கிறார் இந்தப் பள்ளியின் ஆசிரியை ஷாலினி.

PREMA_REVATHI ப்ரேமா ரேவதி

பூம்பூம் மாட்டுக்காரச் சமூகத்தில் பெரும்பாலான ஆண்களும் பெண்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு இருக்கிறார்கள். குடும்பத்துக்கு ஐந்து குழந்தைகள் வீதம் இருக்கிறார்கள். பாக்கு போடுதல் போன்ற பழக்கங்கள் குழந்தைகளிடமே இருக்கின்றன. மாட்டுடன் சென்று குறி சொல்லும் அவர்களுடைய பாரம்பரியத் தொழிலும் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. புதிதாக மேற்கொள்ளும் தொழிலாகப் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், துணி, இரும்புப் பொருட்களை வாங்கி விற்பதில் ஈடுபடுகின்றனர்.

கடனால் தவிக்கும் குடும்பங்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளை வேலைக்கு அழைத்துச் செல்கிறார்கள். குழந்தைத் திருமண முறை அருகியிருந்தாலும் 18 வயதுக்கு முன்பே காதல், உறவு என்பது வழக்கத்திலுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாகச் சாதிச் சான்றிதழ் பெறவே பெரும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில்தான் பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி அளித்துவருகிறது இந்தப் பள்ளி.

“கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இச்சமூகத்துக் குழந்தைகளுடன் பணியாற்றுவதன் மூலம் என்ன செய்யமுடிந்துள்ளது என்று கேட்டால், ஒரு பாதுகாப்பான இடம், சத்தான உணவு, பள்ளிக் கல்வி ஆகியவற்றை உறுதிப்படுத்தியுள்ளோம். பள்ளிக் கல்வியைத் தாண்டி கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்திருக்கிறார்கள் சிலர். அடுத்து அவர்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு வருகிறோம்” என்கிறார் ப்ரேமா ரேவதி.

வரலாற்றில் புறந்தள்ளப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகளுக்கு சமூக மரியாதையை, கல்வியின் வழியாக மீட்டுத்தந்து அவர்களுடைய வாழ்க்கையை வண்ணமயமாக்க முயன்றுகொண்டிருக்கிறது இந்த ‘வானவில்’ பள்ளி.

நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது வானவில் பள்ளி. செயல்வழிக் கற்பித்தல் முறை, வகுப்பறையைக் கடந்த பாடத்திட்டம் இங்கு பின்பற்றப்பட்டுவருகிறது.

கட்டுரையாளர்: கல்வி செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்