பூமியில் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கான பயணத்தை 20-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே எளிதாக்கிவிட்டது மனிதகுலம். அடுத்து என்ன? அறிவியல் புனைகதைகளிலும் திரைப்படங்களிலுமே கற்பனையாக இருந்த விண்வெளிப் பயணங்கள் எதிர்காலத்தில் யதார்த்தமாகப் போகின்றன.
ஸ்பேஸ் எக்ஸ், புளூ ஆரிஜின், விர்ஜின் கேலக்டிக் ஆகிய பயண நிறுவனங்கள் அந்த அசாதாரணத்தை நமது கண் முன்னால் நிகழ்த்தப் போகின்றன. விண்வெளிப் பயணம் மிகவும் பொருட் செலவு மிக்கதாக, சாதாரணப் பயணிகளுக்குக் கட்டுப்படியாகாமல் இருந்தாலும் நமது வாழ்நாள் காலத்துக்குள் நாம் விண்வெளிச் சுற்றுலா சென்றுவரலாம்.
பூமிக் கோளின் வளிமண்டலம் முடியும் வெளிக் கிரகத்தின் வளிமண்டலம் தொடங்கும் கார்மன் கோடு 62 மைல்களில் உள்ளது. அங்கிருந்து செல்ஃபி எடுத்து சமூக வலைத்தலங்களில் பதிய காத்திருக்கிறார்கள் உலகின் பெரும் பணக்காரர்கள்...
விமானப் பயணம் போல விண்வெளிப் பயணம்
ரயில், பேருந்து, விமானப் பயணங்களுக்குக் குறிப்பிட்ட நிறுவனங்களின் இணையதளங்களுக்குச் சென்று பணம் கட்டி, நாள், நேரத்தைக் குறிப்பிட்டுத் தற்போது பதிவுசெய்கிறோம். அதுபோல விண்வெளிப் பயணமும் விரைவில் சாத்தியமென்று அமெரிக்க விண்வெளி நிறுவனங்கள் உத்தரவாதமளித்துள்ளன. தொடக்கத்தில் விமானப் பயணம் போன்றே ராக்கெட் பயணமும் கோடீஸ்வரர்களுக்கே சாத்தியமாக இருக்கும். படிப்படியாக உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் சாத்தியமாகலாம்.
உத்தேசச் செலவு எவ்வளவு?
விண்வெளிப் பயணத்துக்கான கட்டணத்தை எந்த விண்வெளிப் பயண நிறுவனமும் தற்போதுவரை துல்லியமாக அறிவிக்கவில்லை. சோயுஸ் விண்கலத்தை பயன்படுத்த ரஷ்ய விண்வெளி நிலையத்துக்கு ஒரு நபருக்கு 80 மில்லியன் டாலர் பணத்தை நாசா நிறுவனம், வசூலிக்கிறது. பூமிக் கோளுக்கு மேலே விண்வெளியின் வெளிவட்டத்தில் பயணிப்பதற்கு, வெகு தொலைவு பயணிப்பதற்கு இடையிலான கட்டணம் வேறுபடலாம். விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தொடக்கப் பயணத்துக்கான முன்பணமாக 2 லட்சத்து 50 ஆயிரம் டாலரை வசூலிக்கிறது.
நிபுணத்துவம் பெற்ற விண்வெளி வீரர் தேவையா
வானியல் ஆய்வுக்காகச் செல்லும் விண்வெளி வீரர்கள் இரண்டாண்டுகள் கடுமையான பயிற்சிக்குப் பிறகே விண்வெளி விமானங்களைச் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் பொறியியல், கணிதம், அறிவியல், உயிரியல், கணிப்பொறியியல் போன்றவற்றில் இளங்கலைப் படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆனால் சாதாரணப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் விண் கலங்களைத் தானியங்கி தொழில்நுட்பத்தில் இயக்குவதற்கு வர்த்தக விண்வெளிப் பயண நிறுவனங்கள் முயன்று வருகின்றன. ஆனாலும் உடல்தகுதியும் ஆரோக்கியமும் அடிப்படை அளவுகோல்களாக இருக்கும்.
சுகமான அனுபவமா, சிரமங்கள் உண்டா?
விண்கலத்திலிருந்து பூமி ஒரு பந்துபோல மிதப்பதைப் பார்க்கும் அனுபவம் அருமையானதுதான். ஆனால், அது அத்தனை சவுகரியமானது அல்ல. பூமியிலிருந்து அதீதமான உயரங்களுக்குச் செல்லும்போது ஈர்ப்பு விசைகள் உங்கள் உடலை அழுத்தி நரக அனுபவத்தைத் தரும் என்பதே உண்மை. அதைத் தவிர்க்க முன்னணி விண்வெளிச் சுற்றுலா நிறுவனங்கள் நவீனத் தொழில்நுட்ப வசதிகளுக்கு முயன்று வருகின்றன. ஆனால், எடையற்ற வெளியை நீங்கள் அடையும் நிலையில், விண்கலத்தின் ஜன்னல் வழியாகப் பார்த்தால் நீங்கள் பட்ட அத்தனை சிரமங்களும் காணாமல் போகும்.
வாகனம் எப்படி இருக்கும்
தனி வகை விமானம் ஒன்று, இறக்கை கொண்ட ராக்கெட் விமானம் ஒன்றை வானுக்குக் கொண்டு செல்லும். பூமியின் வளிமண்டலத்துக்கு 50 ஆயிரம் அடிகளுக்கு மேல் அது விடப்படும். அரிஸோனாவின் ‘வேர்ல்ட் வியூ’ நிறுவனமும் பயணிகளை ஏற்றுவதற்காகவே ஹீலியம் பலூன் ஒன்றை பூமியின் வளிமண்டலத்துக்கு ஒரு லட்சம் அடிகளுக்கு மேலே நிறுவியுள்ளது. பயணிகள் அதில் இரண்டு மணி நேரம் இருக்கலாம்.
11 நிமிடங்களில் போய்த் திரும்பலாம்
செவ்வாய் போன்ற கோள்களுக்குச் செல்வதற்கு அதிக காலமும் செலவும் பிடிக்கலாம். ஆனால், சென்ற ஆண்டு புளூ ஆரிஜின் நிறுவனம் நடத்திய மாதிரிச் சோதனையில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று வர 11 நிமிடங்களே ஆனது. நேரம் குறையக் குறைய விண்வெளிப் பயணம் இனிமையானது. அத்துடன் எடையின்மையை நாம் அனுபவிக்க இயலும். இதுவரை பூமிக் கோளை மிகச் சிலரே பார்த்த கோணத்திலும் பார்த்துவிடலாம்.
விண்வெளி விடுதிகளில் குளியல் சாத்தியமா
விண்வெளிப் பயண அனுபவத்தை மேலும் சிறப்பானதாக்க ரஷ்ய விண்வெளி அமைப்பு விண்வெளி விடுதி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. பெரிய ஜன்னல்கள் கொண்ட அறைகள், வைஃபை வசதி, உடற்பயிற்சிக் கருவிகள், குளியல் தொட்டிகள் கொண்டதாக இந்த விடுதி இருக்கும். ஆனால், அதற்கான செலவு குறைவாக இருக்காது. ஓரிரண்டு வாரங்கள் தங்க முடிவு செய்திருந்தால் ஒரு நபருக்கு ரூ.4 கோடி டாலர்கள் (ரூ.270 கோடி) செலவாகும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago