காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் மத்திய அரசு மாற்றியமைத்த வரைவு செயல்திட்ட அறிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மே 18 அன்று ஒப்புதல் வழங்கியது. தென்மேற்கு பருவ மழைக் காலம் தொடங்கும் முன், பத்து பேர் கொண்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பது பற்றி அரசிதழில் மத்திய அரசு வெளியிடவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கும் வரைவு செயல்திட்டத்தின்படி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் இனி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ‘காவிரி மேலாண்மை ஆணையத்தை’தான் அணுக வேண்டும். இறுதி முடிவை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இந்த ஆணையம் டெல்லியில் அமைக்கப்படவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கர்நாடகா: எடியூரப்பா ராஜினாமா
தேர்தல் ஆணையம் மே 15 அன்று கர்நாடக தேர்தல் முடிவுகளை வெளியிட்டது. இதில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. பாஜக 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆளுநரிடம் உரிமை கோரியது.
ஆனால், இந்த முயற்சியை முறியடித்து பாஜகவின் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக மே 17 அன்று பதவியேற்றுகொண்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மே 19 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்குமுன் எடியூரப்பா தன் பதவியை ராஜினாமா செய்தார்.
நாட்டின் தூய்மையான நகரங்கள்
மத்திய குடியிருப்பு, நகர விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி, ‘ஸ்வச் சர்வேக்ஷ்ன் 2018’ முடிவுகளை மே 16 அன்று வெளியிட்டார். இதில் இரண்டாவது ஆண்டாகத் தொடர்ந்து இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தூரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை போபாலும், மூன்றாவது இடத்தை சண்டிகரும் பிடித்திருக்கின்றன.
இந்தத் தூய்மையான நகரங்களுக்கான ஆய்வில், சென்ற ஆண்டு 11-வது இடத்திலிருந்த சண்டிகர் இந்த ஆண்டு மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. மாநிலங்களில் தூய்மை தொடர்பான செயல்திட்டங்களை நிறைவேற்றுவதில் சிறந்த மாநிலமாக ஜார்கண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
2,39,000 பெண் குழந்தைகள் இறப்பு
இந்தியாவில் பாலினப் பாகுபாட்டால் ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 39 ஆயிரம் பெண் குழந்தைகள் இறப்பதாக மே 14 அன்று லான்செட் மருத்துவ இதழில் அறிக்கை வெளியானது. நாட்டிலுள்ள 29 மாநிலங்களிலும் இத்தகைய பாலினப் பாகுபாட்டு இறப்புகள் நிகழ்ந்துள்ளன. பிரசவத்துக்கு முன் இறந்த குழந்தைகளின் தரவுகள் இதில் சேர்க்கப்படவில்லை. இந்த ஐந்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் வட இந்தியாவின் உத்திர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் அதிகமாக இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
3-வது பெரிய சூரிய ஆற்றல் சந்தை
உலகின் மூன்றாவது பெரிய சூரிய ஆற்றல் சந்தையாக இந்தியா 2017-ம் ஆண்டில் உருவெடுத்திருக்கிறது. சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தைச் சென்ற ஆண்டு பிடித்திருப்பதாக ‘மெர்காம் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2017-ம் ஆண்டில் இந்தியா 9.6 GW சூரிய ஆற்றல் நிறுவல்களைச் செய்திருக்கிறது.
2016-ம் ஆண்டில் நிறுவப்பட்ட 4.3 GW சூரிய ஆற்றலுடன் ஒப்பிடும்போது, சென்ற ஆண்டு சூரிய ஆற்றல் வளர்ச்சி இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இதனால், இந்தியாவின் ஒட்டுமொத்த சூரிய ஆற்றல் திறன் டிசம்பர் 2017-ம் 19.6 GW ஆக அதிகரித்திருக்கிறது.
இஸ்ரோ: சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருள்
இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்கலன்களையும் செயற்கைக்கோள்களையும் செலுத்துவதற்குச் சூழலுக்கு உகந்த எரிபொருளை ‘ஹைட்ரோக்ஸில் அமோனியம் நைட்ரேட்’டைப் (HAN) பயன்படுத்தி தயாரித்திருக்கின்றனர். இஸ்ரோவால் இதுவரை வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டுவந்த ஹைட்ராஸைன் எரிபொருளுக்குப் பதிலாக இனி ஹைட்ரோக்ஸில் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரோவின் ‘எல்பிஎஸ்சி’ (Liquid Propulsion Systems Centre) மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த எரிபொருளை ஆறு மாத சோதனைக்குப் பிறகு வெளியிட்டிருக்கின்றனர். ஹைட்ராஸைன் எரிபொருளைவிட ஹைட்ரோக்ஸில் அமோனியம் நைட்ரேட் குறைவான நச்சுத்தன்மையுடனும் பாதுகாப்பு அம்சங்களுடனும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.
ஷிவாங்கி பதக்: சிகரம் தொட்ட இளம்பெண்
ஹரியாணாவைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஷிவாங்கி பதக், எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் மீது நேபாளம் வழியாக ஏறிய இளம்பெண் என்ற சாதனையை மே 17 அன்று நிகழ்த்தியிருக்கிறார். எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் மீது ஏறிய மாற்றுத்திறனாளி அருணிமா சின்ஹாவால் ஈர்க்கப்பட்டு இந்தச் சாதனையை நிகழ்த்தியதாகத் தெரிவித்திருக்கிறார் ஷிவாங்கி.
இவருக்குமுன், 2014-ம் ஆண்டு, திபெத் வழியாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி 13 வயது மாளவத் பூர்ணா சாதனையைப் படைத்திருக்கிறார்.
அமெரிக்கா: பள்ளி துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சாண்டே ஃபே மேல்நிலைப் பள்ளியில் மே 18 அன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பத்துப் பேர் பலியாகியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான டிமிட்ரியோஸ் பாகார்ட்ஸ் என்ற 17வயது மாணவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் தொடர்ந்து பள்ளிகளில் நடைபெற்றுவரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பினரும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago