சேதி தெரியுமா? - தமிழகத்தின் நிதியைக் குறைக்கக் கூடாது

By கனி

தமிழ்நாட்டின் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஏப்ரல் 19 அன்று டெல்லியில், மத்திய நிதிக் குழு தலைவர், என்.கே.சிங்கை சந்தித்து தமிழ்நாட்டின் நிதியைக் குறைக்கக் கூடாது என்று மனு அளித்தார். 15-வது நிதிக் குழுவில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கும்போது 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கை கருத்தில் கொள்ளக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 1971-ம் ஆண்டு, மக்கள்தொகை கணக்கிலேயே நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அத்துடன், தமிழ்நாடு பெற்றுள்ள முதலீடுகளைக் காரணம் காட்டி நிதி அளவைக் குறைக்கக்கூடாது என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

 

இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் கூடாது!

பள்ளிகளில் இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய பள்ளிக்கல்வித் துறை ஏப்ரல் 19 அன்று தெரிவித்தது. வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தைப் பின்பற்றாமல் பல பாடங்களை சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நடத்தப்படுவதாக மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக என்.சி.இ.ஆர்.டி. தாக்கல் செய்த பதில் மனுவில், இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் கூடாது, மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை வாரத்துக்கு இரண்டு மணி நேரம், நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆறாவது பெரிய பொருளாதார நாடு

இந்தியா, உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ‘வேர்ல்ட் எகானாமிக் அவுட்லுக் - ஏப்ரல் 2018’ ஆய்வு தெரிவிக்கிறது. 2 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் இந்தியா ஆறாவது இடதுக்கு முன்னேறி, பிரான்ஸை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகள் இருக்கின்றன. 2018-ல் இந்தியா 7.4 சதவீதத்திலும், 2019-ல் 7.8 சதவீதத்திலும் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 

24CHGOW_KIM_JONGவடகொரியா: அணு ஆயுத சோதனை இனி இல்லை

அணு ஆயுத சோதனைகளை நிறுத்தப்போவதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்உன் ஏப்ரல் 21 அன்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அமெரிக்காவும் தென் கொரியாவும் வரவேற்பு தெரிவித்துள்ளன. தொடர் ஆணுஆயுத சோதனை காரணமாக தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் கடந்த இரண்டாண்டுகளாக மோதல் வலுத்து வந்தது. இரு நாட்டு அதிபர்களுக்கு இடையில் இன்னும் ஆறு நாட்களில் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அத்துடன், ஜூன் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சந்திக்கவிருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜோங்.

 

வெளிநாட்டு மாணவருக்கு வரவேற்பு

வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும்விதமாக மத்திய அரசு ஏப்ரல் 18 அன்று ‘இந்தியாவில் படிக்கலாம்’ (Study in India) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முயற்சி தற்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களின் வருகை அதிகரிக்கும்போது சர்வதேசத் தரவரிசைப் பட்டியலில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் மதிப்பு உயர வாய்ப்பிருக்கிறது.

தற்போது இந்தியாவில் சர்வதேச மாணவர்கள் 45,000 பேர் படிக்கின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் சர்வதேச மாணவர்களை ஈர்க்க அரசு திட்டமிட்டிருக்கிறது. நேபாளம், வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, எகிப்து, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் திட்டத்தின் இலக்காக இருக்கிறார்கள்.

தாமதமாகும் சந்திரயான்-2

ஏப்ரல் 2018-ல் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான்-2 திட்டம், இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் ஏப்ரல் 18 அன்று தெரிவித்தார். தேசிய அளவிலான குழு, சந்திரயான்-2-ல் மதிப்பாய்வுக்காகக் கூடுதல் சோதனைகளை மேற்கொள்ளவிருப்பது இந்தத் தாமதத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சந்திரயான் 2- இந்தியா சந்திரனுக்கு அனுப்பும் இரண்டாவது திட்டம். சந்திரயான்-1 திட்டம் 2008-ம் ஆண்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. தற்போது சந்திரயான்-2, ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்10’ மூலம் விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு ரூ. 800 கோடி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 

24CHGOW_LOYAright

நீதிபதி லோயா மரணம்: விசாரணை மனு தள்ளுபடி

நீதிபதி லோயாவின் மரணம் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்திரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 19 அன்று தள்ளுபடிசெய்தது.

பாஜக தலைவர் அமித் ஷாவுக்குத் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்படும் சொராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி லோயா 2014 டிசம்பர் 1 அன்று நாக்பூரில் மரணமடைந்தார்.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால், சிறப்பு விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, லோயாவின் மரணம் இயற்கையானது என்ற தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த வழக்கு நீதிபதிகளையும் நீதித்துறையையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாகத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

கியூபாவின் புதிய அதிபர்

கியூபா நாட்டின் புதிய அதிபராக மிக்வேல் டியாஸ்-கானெல் (Miguel Diaz-Canel) ஏப்ரல் 19 அன்று அறிவிக்கப்பட்டார். அந்நாட்டின் தேசியச் சட்டப்பேரவையில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்புக்குப் பிறகு அவர் அதிபராக அறிவிக்கப்பட்டார். கியூபாவில் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, காஸ்ட்ரோ குடும்பத்தைச் சேராத ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார். அதிபராக இல்லாவிட்டாலும் தேசியச் சட்டப்பேரவையின் உறுப்பினராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் ரவுல் காஸ்ட்ரோ தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2021-ம் ஆண்டுடன் தன் பதவிக்காலம் முடிந்தவுடன் கட்சியின் தலைமைப் பொறுப்பை மிக்வேல் டியாஸ் வகிப்பார் என்று ரவுல் காஸ்ட்ரோ தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்