நடனம் தெரிந்த மாணவர்கள்

By ஷங்கர்

 

“ந

டனமாடத் தெரிந்தவரைத் தான் நான் கடவுளென்று நம்புவேன்” என்பது தத்துவவாதி நீட்சேயின் புகழ்பெற்ற வாக்கியம். நடனமாடத் தெரியாதவரை வகுப்பாசிரியராக ஏற்றுக்கொள்ளாத ஒரு காலமும் வரலாம். கணிதம், அறிவியல், மொழிக் கல்விக்கு இணையாக நடனத்துக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்கிறார் கல்வி நிபுணர் சர் கென் ராபின்சன்.

நடனப் பயிற்சி செய்யும் பள்ளி மாணவர்கள் பள்ளியிலும் பள்ளிக்கு வெளியிலும் உருவாகும் பதற்றங்களையும் தொந்தரவுகளையும் எளிதாக்கி உற்சாகத்தையும் உரத்தையும் பெற முடியும் என்கிறார் சர் கென் ராபின்சன்.

நடனம் என்பது என்ன? உறவுகள், உணர்வுகள், எண்ணங்கள் ஆகியவற்றை அசைவு, தாளம் வழியாக உடல் வெளிப்படுத்துவதுதான் நடனம். நடனத்தைக் கண்டுபிடித்தவர் ஒரு தனிநபர் அல்ல. எல்லாச் சமூகங்களின் ஆழத்திலும் ஆதியிலிருந்து நடனம் உறைந்திருக்கிறது; மனித குலத்தின் நாடித் துடிப்பாக நடனம் உள்ளது. பல வகைமைகள், பாணிகள், மரபுகளைக்கொண்டு தொடர்ந்து நடன வடிவங்கள் பரிணமிப்பதாகவும் உள்ளன. பொழுதுபோக்கிலிருந்து தெய்விகச் சடங்குகள்வரை நடனம், சமூகச் செயல்பாடுகளின் அங்கமாக உள்ளது.

அறிவுத்திறன் மேம்பாடு

வாழ்க்கையிலும் கல்வியிலும் நடனத்தின் இன்றியமையாத தேவை குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஸ்கார்லட் ஸ்வெண்டலர் நீல்சன், ஸ்டெபானி பர்ரிட்ஜ் ஆகியோர் வெவ்வேறு வாழ்க்கைப் பின்னணிகளில் ஆராய்ந்துவருகின்றனர். பின்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கானா, தைவான், நியூசிலாந்து, அமெரிக்கா எனப் பல நாடுகள் சார்ந்து இவர்களது ஆராய்ச்சி அமைந்து உள்ளது.

எல்லா வயதினரிடத்திலும் அறிவுத் திறன், வெற்றி சார்ந்து நடனம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் மாணவர்களிடையே நிலவும் வன்முறை, வம்பிழுத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு அடியில் இருக்கும் பதற்ற மனநிலைகள் நடனப் பயிற்சியால் களையப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் வன்முறையும் பதற்றமும் அதிகம் நிலவும் மாவட்டங் களைச் சேர்ந்த ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் ‘டான்சிங் க்ளாஸ்ரூம்ஸ்’ என்ற தொண்டு நிறுவனம் ஒரு சோதனையை நடத்தியது. ஆண், பெண் மாணவர்களுக்கு இடையிலான உறவுகள், பொது உறவுகள், மாணவர் களிடையே பரிவுணர்வு, மரியாதை, ஒருங்கிணைவை மேம்படுத்துவதற்கு அவர்கள் பால்ரூம் நடனத்தைப் பள்ளிகளில் அறிமுகம் செய்தனர்.

1994-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டு பத்து வாரங்களில் இருபது வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் இந்த நடனப் பயிற்சிகளில் பங்குபெற்றனர். இந்த வகுப்புகள் முடிந்து அது குறித்த மதிப்பீடுகளை செய்தபோது, 95 சதவீத ஆசிரியர்கள், மாணவர்களின் ஒருங்கிணைப்புத் திறனும் ஒத்துழைப்பும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

புரிதல் மரியாதை ஏற்புணர்வு

வெவ்வேறு வயதினர், வெவ்வேறு பாலினத்தவர்களுக்கு இடையே சமூக உறவுகளை நடனம் மேம்படுத்துகிறது. இரண்டு பேர் சேர்ந்து நடனமாடும்போது, உடல் ரீதியான ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிந்துணர்வும் அவசியம். இந்நிலையில் நடனப் பயிற்சியைத் தொடரும்போது புரிதலும் பிரியமும் ஒருவருக்கொருவர் மீது படியத் தொடங்குகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துப் பள்ளி முதல்வர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், மற்ற மாணவர்களை ஏற்கும் மனநிலை மாணவர்களிடம் அதிகரித்திருப்பதாக 66 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இத்தகைய சிறப்புகளை மாணவர் களிடம் மேம்படுத்தும் நடனத்துக்குப் பொருளாதார வாய்ப்புகளும் உண்டு.

பரஸ்பர மரியாதை, புரிதல், குழுவுணர்வு, அனுசரிக்கும் பண்பு போன்றவை மேம்பட்டவர்களையே பணிக்கு எடுக்கும் நிறுவனங்களும் விரும்புகின்றன. அந்த வகையில் நடனம் தெரிந்தவர்கள் நன்றாகச் சம்பாதிக்கவும் முடியும்.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நடனப் பயிற்சியும் நாடகப் பயிற்சியும் உடற் பயிற்சியும் பள்ளிக் கல்வியில் அத்தியாவசியமாகப் பார்க்கப்படுவதில்லை. குழந்தைகளின் இதயத்தமனி ஆரோக்கியம், ரத்த அழுத்தம், எலும்பு அடர்த்தி நடனம், உடல் பயிற்சியால் மேம்படும் என்கின்றன ஆய்வுகள். அதனால் மாணவர்களின் கல்வித் திறனும் மேம்படும். அத்துடன் மன அழுத்தம், படபடப்பு குறைந்து தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் பாடங்களைப் படிப்பதற்கும் வாரத்துக்கு மூன்று நாட்கள் 30 நிமிடப் பயிற்சி அவசியம் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சவால்களும் ஒரு பின்னணி இசையைப் போன்றவைதான். அதற்கேற்றபடி சமாளித்து நடனமாடப் பள்ளியிலிருந்தே தொடங்கலாமே?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்