கேள்வி நேரம் 24: உலகுக்கு இந்திய அறிவியல் கொடை

By ஆதி வள்ளியப்பன்

1. ஒளிபுக வாய்ப்புள்ள ஓர் ஊடகத்தின் உள்ளே ஒளி செல்லும்போது, அது சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இவ்வாறு உட்புகும் ஒளியில் உள்ள போட்டான்களுக்கும் மூலக்கூறுகளுக்கும் இடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போதுதான் ஒளியின் அலைநீளம் மாறுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது. இதைக் கண்டுபிடித்ததற்கு சர் சி.வி. ராமனுக்கு இயற்பியல் பிரிவில் 1930-ல் நோபல் பரிசு கிடைத்தது. 1928-ல் பிப். 28-ல்தான் ராமன் இந்தக் கண்டறிதலை நிகழ்த்தினார். அதன் காரணமாக 1999-ல் இருந்து தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அறிவியல் நாளின் மையக்கருத்து என்ன?

 

2. கம்பியில்லாமல் தொடர்புகொள்ளக்கூடிய அலைகளைக் கண்டறிந்ததற்காக 1909-ல் மார்கோனி நோபல் பரிசு பெற்றார். வானொலியைக் கண்டறிந்தவரும் இவரே. அதேநேரம் 1895-ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சர் ஜகதீச சந்திர போஸ் தொடர்புகொள்வதற்கு ரேடியோ அலைகள் உதவும் என்பதை செயல்முறை விளக்கமாகச் செய்து காண்பித்துவிட்டார். அவரது இந்தக் கண்டுபிடிப்பு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகே அங்கீகாரம் பெற்றது. சரி, ஜகதீச சந்திரபோஸ் செயல்முறை விளக்கம் அளித்து எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னால், இங்கிலாந்தில் இதற்கான செயல்முறை விளக்கத்தை மார்கோனி செய்துகாட்டினார்?

 

3. சர் சி.வி. ராமனின் அண்ணன் மகனான் சுப்ரமணியன் சந்திரசேகர் 1983-ல், தன் சித்தப்பாவைப் போலவே இயற்பியல் பிரிவில் நோபல் பரிசு பெற்றார். இந்திய அளவில் அதிக (இரண்டு) நோபல் பரிசைப் பெற்ற குடும்பம்/உறவினர்கள் இவர்கள். நட்சத்திரங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக அறியப்பட்ட சந்திரசேகர், நட்சத்திரங்களின் எடையைக் குறிப்பதற்கு ஒரு வரையறையை உருவாக்கினார். அந்த வரையறை எந்தப் பெயரில் அறியப்படுகிறது?

4. சூரியனையே கோள்கள் சுற்றுகின்றன, பூமியை சூரியன் சுற்றவில்லை என்பதை இந்திய அறிஞர்கள் நீண்ட காலத்துக்கு முன்னரே கண்டறிந்துவிட்டார்கள். கர்நாடகத்தில் உள்ள பீஜப்பூரைச் சேர்ந்த கணிதவியல்-வானியல் அறிஞர் இரண்டாம் பாஸ்கரர், பூமி சூரியனை முழுமையாகச் சுற்றிவர 365.258756484 நாட்களை எடுத்துக்கொள்கிறது என்பதை 12-ம் நூற்றாண்டிலேயே கணக்கிட்டுக் கூறினார். பிரம்ம குப்தர் உருவாக்கிய வானியல் மாதிரியைக் கொண்டு அவர் இதைக் கண்டறிந்தார். துல்லியமாக எத்தனை நாட்களில் சூரியனை பூமி முழுமையாகச் சுற்றி வருகிறது?

 

5. இந்திய மருத்துவர் சுஸ்ருதர் கண்புரை நீக்க அறுவை சிகிச்சை தொடர்பாக அறிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ‘ஜபமுகி சாலகா' என்கிற வளைந்த ஊசியைக்கொண்டு இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் கண்ணில் உள்ள லென்ஸை நெகிழ்த்தி, கண் புரையை பார்வைப் புலத்திலிருந்து தள்ளி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த அறுவைசிகிச்சையை தங்கள் கண்களில் செய்துகொள்வதற்காக கிரேக்க விஞ்ஞானிகள் இந்தியா வந்ததாகவும் இந்த முறையை கற்றுச் சென்றதாகவும், இது சீனாவுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது. சுஸ்ருதர் என்ன பட்டத்துடன் அழைக்கப்படுகிறார்?

 

6. பூஜ்யம் என்கிற எண் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகே உலக எண் முறைகள் முழுமையடைந்தன. கி.பி. 458 வானியலாளரும் கணிதவியலாளருமான ஆர்யபட்டா பூஜ்யத்துக்கான குறியீட்டைக் கண்டறிந்தார். இதன் காரணமாகவே கூட்டல், கழித்தல் சாத்தியப்பட்டது. கணினிச் செயல்பாட்டின் அடிப்படையாக இருக்கும் இரட்டை எண்கள் 1, 0 என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யபட்டாவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எப்படி கௌரவித்தது?

7. எண்களை தசம முறையில் (Decimal system) எழுதும் இந்து எண் முறைக்கு கி.பி. 7-ம் நூற்றாண்டில் பிரம்மகுப்தர் வித்திட்டார். இந்த எண் முறைக்கான ஆதாரம் கி.பி. 1-6-ம் நூற்றாண்டுகளில் உருவானது. பிரம்மகுப்தரின் எண் முறை பிற்காலத்தில் அரேபிய எண் முறைக்கு ஆதாரமாக அமைந்தது. எந்த அரபி கணிதவியலாளர் மூலமாக தசம எண் முறை உலகெங்கும் பரவலானது?

 

8. கணிதத்தில் சிறப்பு எண்களில் ஒன்றான ‘பை'யின் மதிப்பு பற்றி கணித அறிஞர் பொதயானா என்பவர் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே விளக்கினார். அதை ஆர்யபட்டா 62832/20000 என்று மேம்படுத்தினார். ‘பை'யின் இன்றைய மதிப்பும், பொதயானா விளக்கிய மதிப்பும் என்னென்ன?

 

9. கணிதத்தின் ஒரு பிரிவான டிரிக்னாமெட்ரி (trigonometry) என்கிற முக்கோணவியலின் சில அடிப்படைகள் பண்டைய இந்திய கணித அறிவியல் முறைகளில் இருந்து சென்றவை. திரிகோணமிதியில் புதிய வழக்கமாக ‘சைன்’ என்று பின்னால் வழங்கப்பட்ட ‘ஜ்யா’ முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இந்த ‘சைன்'தான் இன்றைய முக்கோணவியலுக்கு வாசலாக அமைந்தது. ‘ஜ்யா’ என்ற கருத்தை முன்வைத்தவர் யார்?

 

10. நிலவைக் காட்டி சோறு ஊட்டிய காலத்திலிருந்து நம் அனைவருக்கும் பூமியின் துணைக்கோளான நிலவு தெரிந்திருக்கும். உலக நாடுகளை வியக்க வைக்கும் வகையில் நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் 1 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. அந்த விண்கலம் அனுப்பப்படுவதற்கு முன்புவரை நிலவு வறண்ட துணைக்கோள் என்றே நம்பப்பட்டது. அதைத் தகர்க்கும் வகையில் சந்திரயான் 1 கண்டறிந்தது என்ன?

விடைகள்:

1. வளம்குன்றாத எதிர்காலத்துக்கான அறிவியல், தொழில்நுட்பம்

2. 1897-ல்

3. சந்திரசேகர் வரையறை (Chandrasekhar limit)

4. 365.2563. பாஸ்கரர் கண்டறிந்ததற்கும் இதற்கும் 3.5 நிமிடங்கள் வித்தியாசம்

5. அறுவைசிகிச்சைகளின் தந்தை

6. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளின் பெயர் ஆர்யபட்டா

7. அல் கவாரிஸ்மி

8. தோராயமாக 3.14, பொதயானா அதை 3 என்றார்.

9. ஆர்யபட்டா

10. நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிய உதவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்