வேலையில் விரைவில் வளர்ச்சி காண்பவர்கள் யார்?
பாஸ் கடாட்சம் வேண்டும், பாலிடிக்ஸ் பண்ணத் தெரியணும், வேலை செய்வதைவிட வேலை செய்வதைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று எவ்வளவு வேண்டுமானாலும் வம்பு பேசலாம். அதில் உண்மைகூட கொஞ்சம் இருக்கலாம்.
ஆனால், ஆராய்ச்சிகள் கூறுவது ஒன்றைத் தான்: தன் தகுதிகள் மற்றும் திறன்களில் தொடர்ந்து முதலீடு செய்பவர்கள் விரைவில் வளர்கிறார்கள்.
“தகுதி மற்றும் திறன் எல்லாம் வேலையில் சேரும் காலத்தில் தானே தேவைப்படும்?” என்று கேட்கிறீர்களா?
உண்மைதான். பட்டமும் தகுதியும் வேலையில் சேரும்போது மட்டுமே ஆய்வு செய்யப்பட்டது அந்தக் காலம். அது ஓய்வுக்காலம் வரை கை கொடுக்கவும் செய்தது.
இன்று சந்தைச்சூழல், நிறுவனம், வேலைத்திறன் என எல்லாம் மாறி வருகையில் வேலைக்குச் சேரும்போது உள்ள திறன்களும் தகுதிகளும் காலம் முழுவதும் உதவாது. வேலையில் பயிலும் சங்கதிகளும் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் உங்களை உயர்த்தும். அதனால், தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்வதுதான் சிறந்த வழி.
எந்தத் தொழிலிலும் சிறப்பாக உள்ள மனிதர்களைப் பாருங்கள். அவர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருப்பார்கள்.
எவ்வளவு பிஸியான டாக்டராக இருந்தாலும் ஆண்டுதோறும் கருத்தரங்குகள் சென்றால்தான் நவீன சிகிச்சை முறைகளை அறிய முடியும். எழுத்தாளர்கள் எழுதுவதை விட படிப்பது மிக மிக அதிகம். வாசிப்பு இல்லாத எழுத்தாளர்கள் தேங்கிப் போகிறார்கள்.
என்னிடம் பல நாற்பது வயதினர் பணியில் விருப்ப ஓய்வு பெற்று வேறு வேலைக்குச் செல்ல ஆலோசனை கேட்டு வருவார்கள். பெரும்பாலும் அவர்கள் எல்லோரும் தங்கள் பணியில் சிறப்பாக இருந்தவர்கள்தான். ஆனால் அவர்களில் யாருக்கு விரைவில் வேறு வேலை கிடைக்கிறது என்று பார்த்தால் தொடர்ந்து படித்தவர்கள், பயிற்சி பெற்றவர்கள் அல்லது வெளி உலகத் தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டும்தான்.
யார் வந்தாலும் நிலைத்து நிற்கக்கூடிய ஜாம்பவான்கள் தங்களைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். எல்லா நேரமும் போட்டிக்குத் தயாராக இருக்கிறார்கள். எந்த புதிய அலைக்கும் பயப்படுவதில்லை.
எம்.ஜி.ஆர் காலத்தில் நடிக்க ஆரம்பித்து ஜெய்சங்கர், விஜயகுமார், மோகன், பிரபு, கார்த்திக், ராமராஜன், சூர்யா, ஆர்யா வரை போட்டி போடும் கமலஹாசன் தன்னைத் தொடர்ந்துப் புதுப்பித்துக்கொள்வதால்தானே இன்னமும் நிலைக்க முடிகிறது?
எனக்குத் தெரிந்து பல பெரும் பதவிகளில் உள்ளவர்களிடம் வாசிப்புப் பழக்கம் கிடையாது. பயிற்சி வகுப்புகள் கட்டாயம் என்றால்தான் செல்வார்கள். ஆங்கிலம், தமிழ் இரண்டிலுமே சபை முன் பேச வராது. துறை சார்ந்த விஷயங்கள் தவிர பேச எதுவும் இருக்காது. அதிகாரத்தை மட்டும் தவிர்த்துப் பார்த்தால் இவர்களுடன் ஒன்றுமே இல்லை எனத்தோன்றும்.
“படிப்பு, பயிற்சி என்றால் இளையவர்களுக்கு; நமக்கு இல்லை!” என்கிற எண்ணம் தான் நமக்கு விரோதி. அதே போல எல்லா விஷயங்கள் உள்ள் ஒரே புத்தகத்தையோ, எல்லாவற்றையும் சொல்லித்தரும் ஒரே பயிற்சி வகுப்பையோ தேடுவது அறியாமை.
தங்கள் முயற்சியால் மேல் படிப்பு, சிறப்புப் பயிற்சி, பெரிய மனிதர்கள் வழிகாட்டுதல் என்று தயாராக இருப்பவர்கள் வாய்ப்புகள் வருகையில் முந்திச் சென்று விடுகிறார்கள்.
கடைசியாக நீங்கள் படித்த புத்தகம் எது? கடைசியாக நீங்கள் கலந்து கொண்ட பயிற்சி வகுப்பு எது? கடைசியாக நீங்கள் கற்றுக்கொண்ட புதுத்திறன் எது? கடைசியாக சுய வளர்ச்சிக்காக மேற்கொண்ட பயணம் எது?
இந்தக் கேள்விகளின் பதில்கள் தான் உங்களை உயர்த்திப் பிடிக்கும்.
ஊக்க சக்தி நிபுணர் ஜிக் ஜிக்லரிடம் கேட்டார்கள்: “எல்லா பயிற்சி வகுப்பும் முடியும்போது, முடிந்த பிறகு சில காலமும் உத்வேகத்தைக் கொடுக்கின்றன. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மீண்டும் பழைய நிலைக்கே வந்து விடுகிறோம். இதை எப்படித் தக்க வைப்பது?”
அவர் சொன்னார்: “பயிற்சியும் படிப்பும் குளிப்பது போல. அதை தினசரி தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு நாள் குளித்துவிட்டு, ஒரு வாரம் கழித்து நாற்றம் எடுக்கிறது என்று குறை கூறலாமா?!”
தொடர்புக்கு:
gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago