கேள்வி நேரம் 20: ஜனவரி 31 - ஒரு வானியல் அற்புதம்

By ஆதி

வா

னியல் ஆர்வலர்களுக்கு உற்சாகம் தரும் வானியல் அற்புதம் ஜனவரி 31அன்று நிகழ இருக்கிறது. அன்றைக்கு முழுநிலவு நாள். ஆனால், இந்த முழுநிலவு மற்றவற்றிலிருந்து வேறுபட்டது. ஆங்கிலத்தில் Super Blue Blood Moon என்றழைக்கப்படுகிறது இந்த அரிய வானியல் நிகழ்வு.

ஜனவரி 31 அன்று சந்திர கிரகணம் நடக்கப்போவதை அறிந்திருப்பீர்கள். இந்தச் சந்திர கிரகணம் தனிச்சிறப்பு மிக்கது. ஆங்கிலத்தில் சந்திர கிரகணம் Blood moon என்றழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் சாதாரணமாக வெள்ளி நிறத்திலிருக்கும் நிலவு, கிரகணம் பிடிக்கும்போது கொஞ்ச நேரத்துக்குச் சிவப்பு நிறத்தில் தோன்றும்.

அடுத்ததாக வரப்போகும் முழுநிலவு, நீல நிலவு (Blue moon) என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே மாதத்துக்குள் இரண்டுமுறை முழுநிலவு தோன்றுவதையே இப்படி அழைக்கிறார்கள். அரிதாக இதுபோல நிகழ்வதை ‘Once in a Blue moon’ என்ற சொற்றொடரிலிருந்து அறியலாம். அத்துடன் இந்த முறை வரப்போகும் முழுநிலவு ஒரு சூப்பர் மூனும் (Super Moon) கூட. நிலவு எப்போதும் ஒரே அளவில்தான் இருக்கிறது என்றாலும், அரிதாக அது பெரிதாகத் தோன்றுவதையே சூப்பர் மூன் என்கிறார்கள். இந்த மூன்று அரிய நிகழ்வுகளும் ஜன. 31 அன்று ஒரே நாளில் நடக்க இருப்பது தனிச்சிறப்பு.

இந்த அரிய வானியல் அற்புதத்தை ஜன. 31 அன்று மறக்காமல் கண்டு மகிழுங்கள். அதற்குமுன் அதன் சிறப்புகளை இந்த வாரக் கேள்வி நேரத்தில் விரிவான பதில்களுடன் தெரிந்துகொள்ளலாம்:

நீல நிலவு என்றால் என்ன?

2018 ஜனவரி 1அன்று முழுநிலவு வந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். ஆங்கில நாட்காட்டியின்படி ஒரு மாதத்தில் வழக்கமாக ஒரு முழுநிலவுதான் வரும். அரிதாக ஒரே மாதத்துக்குள் இரண்டுமுறை முழுநிலவு வருவது உண்டு. அந்த வகையில் இந்த மாதத்தின் இரண்டாவது முழுநிலவு ஜன. 31 அன்று வருகிறது. ஒரே மாதத்தில் இரண்டாவதாக வரும் முழுநிலவு நீல நிலவு எனப்படுகிறது.

இரண்டு முழு நிலவுகளுக்கு இடையிலான இடைவெளி 29.53 நாட்கள். இந்த இடைவெளி இந்த முறை ஒரே மாதத்துக்குள் நிகழ்வதுதான் ஆச்சரியம். அந்த வகையில் 31 நாட்களைக் கொண்ட ஜனவரி, மார்ச், மே, ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மட்டுமே நீல நிலவு நிகழ்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

அதே நேரம் இந்த நீல நிலவு கிழக்கு ஆசியா, கிழக்கு ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் தோன்றாது. இந்தப் பகுதிகளில்தான் சூரியன் முதலில் உதிக்கும் என்பதால், மற்ற நாடுகளில் ஜனவரி 31 ஆக இருக்கும்போது, இந்தப் பகுதிகளில் அடுத்த நாளான பிப்ரவரி 1-ம் தேதி வந்துவிடும்.

நீல நிலவுக்கும் நீல நிறத்துக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் முழுநிலவை அடிப்படையாகக்கொண்டு முன்பு விரதம் இருந்தார்கள். நாட்காட்டிகளும் அறிவியல் வளர்ச்சிகளும் பெரிதாக இல்லாத அந்தக் காலத்தில் ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவையும் கணக்கில்கொண்டு தவக்காலத்தை இடைவெளி இல்லாமல் தொடர நேரிட்டது. இதுபோலத் தவறாக வழிகாட்டப்பட்டதைக் குறிக்க ‘Belewe’ என்ற சொல் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் அது Blue என்று மருவிவிட்டது.

Super moon எனப்படும் பெருநிலவு எப்படித் தோன்றுகிறது?

நிலவு முட்டை வடிவத்தில் பூமியைச் சுற்றிவருகிறது. இந்தச் சுற்றுவட்டப் பாதையில் பூமிக்கு அருகில் நிலவு வருவது Perigee, நிலவு பூமியிலிருந்து அதிகம் விலகிச் செல்லும் புள்ளி Apogee.

Perigee நிலையில் தோன்றும் முழுநிலவே சூப்பர் மூன் எனப்படுகிறது. அப்போது நிலவு வழக்கமான அளவைவிடப் பெரிதாகத் தோன்றுகிறது. இது மிகவும் அரிதான நிகழ்வு. இதற்கு நிலவு அதன் சுற்றுவட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்க வேண்டும். அத்துடன் முழுநிலவாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் வழக்கத்தைவிட அது பெரிதாகத் தோன்றும். சூப்பர் மூன் நிகழும்போது வழக்கத்தைவிட நிலவு 30 சதவீதம் பிரகாசமாகவும் 14 சதவீதம் பெரிதாகவும் தோன்றும். அதே நேரம், வெறும் கண்ணால் இந்த மாற்றங்களை முழுமையாக உணர முடியாது.

சூப்பர் மூன் நிகழாமலேயே நிலவு சில நேரம் பெரிதாகத் தோன்றுவது ஏன்?

தொடுவானப் பகுதியில் (horizon) நிலவு சில நேரம் பிரம்மாண்டமாகத் தோன்றுவதைப் பார்த்திருக்கிறீர்களா? மாலையில் சூரியன் மறைந்த பிறகு, வெளிவரும்போது இப்படிப் பெரிதாகத் தோன்றும் நிலவு, தலைக்கு மேலே சென்றவுடன் சிறியதாகிவிட்டதைப் போலவும் இருக்கும். இதை ‘நிலவின் காட்சிப்பிழை’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதற்கான திட்டவட்டமான காரணம் தெரியவில்லை. அதே நேரம், நிலவு அது உருவான காலத்திலிருந்து அளவில் பெரிய மாற்றங்களைச் சந்திக்கவில்லை என்பதில் விஞ்ஞானிகள் உறுதியாகவே இருக்கிறார்கள்.

ஜனவரி 31 அரிய வானியல் நிகழ்வு ஏன் முக்கியமானது?

நிலவை மையமிட்ட மூன்று அரிய நிகழ்வுகளையும் உள்ளடக்கிய Super Blue Blood Moon இந்தியாவைப் பொறுத்தவரை 36 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நிகழ்கிறது. கடைசியாக நீல நிலவும் சந்திர கிரகணமும் 1982 டிசம்பர் 30 அன்று சேர்ந்து வந்தன. இந்த இடைவெளி உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடும். அமெரிக்காவில் இந்த மூன்று அரிய நிகழ்வுகளும் கடைசியாக 1866 மார்ச் 31அன்று 152 ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஒன்றாக நிகழ்ந்தன.

அரிய வானில் நிகழ்வை எப்படிப் பார்க்கலாம்?

Super Blue Blood Moon வானியல் நிகழ்வின் ஒரு பகுதியான சந்திர கிரகணம் இந்தியாவில் பிடிப்பதை ஜனவரி 31அன்று மாலை 6.22 மணி முதல் 7.38 மணிவரை பார்க்கலாம்.

சூரிய கிரகணத்தைப் பொதுவாக, நேரடியாகக் கண்களால் பார்க்கக் கூடாது. அதே நேரம், இந்தச் சந்திர கிரகணத்தைச் சாதாரணமாகவே கண்களால் பார்க்கலாம்.

சந்திர கிரகணம் கிழக்குத் திசையில் நிகழும் என்பதால் மொட்டை மாடியில் இருந்தோ உயரமான மரங்கள், கட்டிடங்கள் நம் பார்வையை மறைக்காத பகுதியில் இருந்தோ பார்க்கலாம்.

சந்திர கிரகணம் பிடிப்பதைத் தெளிவாகப் பார்க்க இருநோக்கி (Binocular) உதவும்.

அதே நேரம் நுணுக்கமாகப் பார்க்க தொலைநோக்கியும் டி.எஸ்.எல்.ஆர். எனப்படும் டிஜிட்டல் எஸ்.எல்.ஆர். கேமராவும் கைகொடுக்கும். இரண்டையும் இணைத்து சந்திர கிரகணத்தைப் படமும் எடுக்க முடியும்.

அன்றைக்கு சந்திர கிரகணத்தைப் பார்க்கத்தான் நேரக் கட்டுப்பாடு உண்டே தவிர, நீல நிலவையோ சூப்பர் மூனையோ பார்ப்பதற்கு நேரக் கட்டுப்பாடு கிடையாது. ஜனவரி 31 மாலை தொடங்கி அடுத்தநாள் விடியும்வரை சூப்பர் மூனைப் பார்க்க முயலலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்