சேதி தெரியுமா? - பேருந்துக் கட்டணம் உயர்வு

By கனி

தமிழ்நாட்டின் பொதுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துக் கட்டணம் ஜனவரி 20 முதல் உயர்த்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து இழப்பில் இயங்கிக்கொண்டிருப்பதால் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகத் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. சென்னை மாநகரப் போக்குவரத்து பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 3 லிருந்து ரூ. 5 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சக் கட்டணம் ரூ. 14 லிருந்து ரூ. 23 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. சொகுசுப் பேருந்துகளில், 30 கிலோமீட்டருக்கு 18 ரூபாயாக இருந்த கட்டணம் 27 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

தொடரும் மாணவர்கள் மரணம்

டெல்லியில் யு.சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படித்துக்கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு மர்மமான முறையில் ஜனவரி 17 அன்று உயிரிழந்தார்.

23CHGOW_SHARATH_PRABHUright

அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். சென்னை திரு.வி.க. நகரில் இருக்கும் டான் பாஸ்கோ பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவர் நரேந்தர் (15), பள்ளி மைதானத்தில் மயங்கிவிழுந்தார்.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி ஜனவரி 17 அன்று உயிரிழந்தார். நரேந்தர் தாமதமாக வந்ததால், மைதானத்தை ‘வாத்துநடை’யாகச் சுற்றிவர வேண்டுமென்று உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் தண்டனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், மயங்கி விழுந்த மாணவர் நரேந்தர் மரணமடைந்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங், தலைமை ஆசிரியர் அருள்சாமி ஆகியோரைக் காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

 

ஆளுநரான முன்னாள் முதல்வர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்தியப் பிரதேசத்தின் புதிய ஆளுநராக குஜராத்தின் முதல் பெண் முதல்வரான ஆனந்திபென் பட்டேலை ஜனவரி 19 அன்று அறிவித்திருக்கிறார். தற்போது, மத்தியப் பிரதேசத்தைக் கூடுதல் பொறுப்பு ஆளுநராகக் குஜராத் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி நிர்வகித்துவருகிறார். அவர் விரைவில், ஆனந்திபென் பட்டேலிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் குஜராத் முதல்வரான ஆனந்திபென் பட்டேல், வயதின் காரணமாக, அண்மையில் நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில், அவர் மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

விராட் கோலி: சிறந்த கிரிக்கெட் வீரர்

2017-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலியை ஜனவரி 18 அன்று ஐ.சி.சி. அறிவித்தது. அத்துடன், சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரராகவும் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 21, 2016 முதல் 2017-ம் ஆண்டின் இறுதிவரை நடைபெற்ற ஆட்டங்களில் கோலி 2,203 டெஸ்ட் ரன்கள் குவித்திருக்கிறார். அத்துடன், ஒரு நாள் போட்டிகளில் 1,818 ரன்கள் எடுத்திருக்கிறார். டி20 போட்டிகளில் 299 ரன்களைக் குவித்திருக்கிறார். இந்திய அணி, விராட் கோலியின் தலைமையில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.

உற்பத்தியில் 30-வது இடம்

உலகளாவிய உற்பத்திப் பட்டியலை உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) ஜனவரி 14 அன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியா 30-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. ‘எதிர்கால உற்பத்திக்கான தயார்நிலை அறிக்கை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் 100 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. முதல் பத்து இடங்களை ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சீனா, செக் குடியரசு, அமெரிக்கா, சுவீடன், ஆஸ்திரியா, அயர்லாந்து ஆகிய நாடுகள் பிடித்திருக்கின்றன. இதில் சீனா (25-வது), ரஷ்யா (35-வது), பிரேசில் (41-வது), தென் ஆப்ரிக்கா (45-வது) இடங்களில் இருக்கின்றன.

கிராமப்புற இளைஞர்கள் கல்விகுறித்த ஆய்வு

இந்தியாவின் கிராமப்புற இளைஞர்களைப் பற்றி ‘பிரதம்’ என்னும் தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகள் ஜனவரி 16 அன்று வெளியிடப்பட்டது. ‘2017-ம் ஆண்டின் கல்வி நிலை அறிக்கை’ (ASER) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 36 சதவீதக் கிராமப்புற இளைஞர்களுக்கு இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்பது தெரியவில்லை என்பது தெரியவந்தது. 14 சதவீதக் கிராமப்புற இளைஞர்களால் இந்தியாவின் வரைபடத்தை அடையாளம் காண முடியவில்லை. 25 சதவீத இளைஞர்களால் தங்களுடைய தாய் மொழியில் அடிப்படையான வாக்கியங்களைச் சரளமாக வாசிக்க முடியவில்லை. நாட்டின் கிராமப்புற மாவட்டங்களைச் சேர்ந்த 14 வயதிலிருந்து 18 வயதுவரை உள்ள 6 லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்

திரிபுரா மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 18 அன்றும், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் தேர்தல்கள் பிப்ரவரி 27 அன்றும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி ஜனவரி 18 அன்று அறிவித்தார். இந்த மூன்று மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை மார்ச் 3 அன்று நடைபெறவிருக்கிறது. மூன்று மாநிலச் சட்டமன்றங்களும் தலா 60 உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றன. மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களின் சட்டமன்றங்களின் காலம் முறையே மார்ச் 6, மார்ச் 13, மார்ச் 14 ஆகிய தேதிகளில் முடிவடைகின்றன.

மிகப் பெரிய காற்று சுத்திகரிப்பான்

உலகின் மிகப் பெரிய காற்று சுத்திகரிப்பான் கோபுரம் சீனாவின் ஷான்ஸி மாகாணத்தின் தலைநகர் ஸியானில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோபுரம், சீனாவின் காற்று மாசைக் குறைப்பதற்காக 328 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்டிடியூட் ஆஃப் எர்த் என்விரான்மென்ட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செய்த முதற்கட்ட ஆராய்ச்சியில் இந்தக் கோபுரம், 10 சதுர கிலோமீட்டர் தூரம்வரை காற்றின் தரத்தை மேம்படுத்துவதாகத் தெரிவித்திருக்கின்றனர். 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சோதனை ஓட்டத்தில் வெற்றிபெற்றிருப்பதாக ஜனவரி 16 அன்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்