தொழில் தொடங்கலாம் வாங்க!- 47: என் தொழில் எந்தப் பிரச்சினையைத் தீர்க்கிறது?

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

ஒரு ரசாயனத் தொழிற்சாலையைச் சிறிய அளவில் நடத்திவருகிறேன். வரும் ஆர்டர்களுக்கு உரிய வேலையை மட்டும் செய்துவருகிறேன். புதிய ஆர்டர்கள் பிடிக்கத் தயக்கமாக இருக்கிறது. ஒரு பக்கம் பெரிய அளவில் வந்தால் சமாளிக்க முடியுமா என்ற பயம். மறுபுறம் இதே நிலையில் இருக்கவும் சலிப்பாக உள்ளது. தொழில் விரிவடைய முதலில் பணம் வேண்டுமா, மார்க்கெட்டிங் செய்யணுமா உற்பத்தித் திறனைப் பெருக்கணுமா, முதலில் எதைச் செய்யணும்?

- சண்முகம், கடலூர்.

முதலில் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்பதில் தெளிவும் துணிவும் தேவை. மனதளவில் அது முக்கியம். வெறும் ஆசையாக இல்லாமல் திட்டமாக இருக்க வேண்டும். ஆசை எல்லோருக்கும் இருக்கும். செய்து ஆக வேண்டும் என்று திட்டமிட்டால்தான் அடுத்த கட்டத்துக்குச் செல்லமுடியும். தொழிலை வளர்ப்பது என்பது உடற்பயிற்சி போலதான். அது ஒட்டுமொத்தமாகத்தான் செயல்பட வேண்டும். உடலில் ஒரு உறுப்பு மட்டும் வலிமையாகப் பயிற்சி செய்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் ஒரு துறையை மட்டும் வளர்ப்பது. விற்பனைக்குத் திட்டமிடும்போதே, ஆர்டர் வந்தபின் ஏற்படவிருக்கும் உற்பத்திக்கான கட்டுமான முதலீடுகள், அதனால் ஏற்படும் நிதி நிலைகள், அது நிறுவனத்தில் ஏற்படுத்தும் பிற மாறுதல்கள் என அனைத்தையும் திட்டமிட வேண்டும். சரியான திட்டமும் செயலாக்கமும் கொண்ட விஸ்தார முயற்சிகள் மட்டுமே வெல்லும்.

நான் புதிதாக ஒரு தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறேன். பல ஐடியாக்களில் எதைத் தேர்வு செய்வது என்று தெரியவில்லை. எந்தத் தொழிலுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும் என்று எப்படித் தெரிந்துகொள்வது? இதுதான் முக்கியம் என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?

- வின்சன்ட், மதுரை.

ஒன்றை மட்டும் சொல்லச் சொல்வதால் என் பதில் இதுதான். நீங்கள் ஒரு பொருள் அல்லது சேவையை அளிக்கிறீர்கள் என்றால் அதன் டிமாண்டை அறிய நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி: “வாடிக்கையாளரின் ஒரு பிரச்சினையை இந்தப் பொருள் அல்லது சேவை தீர்க்க வேண்டும் என்றால் என் தொழில் எந்தப் பிரச்சினையைத் தீர்க்கிறது?” உதாரணத்துக்கு ஓட்டல் என்றால் வாடிக்கையாளரின் உணவுத் தேவையைப் போக்குகிறது. கூரியர் சர்வீஸ் என்றால் வாடிக்கையாளரின் கடிதம் அல்லது பொருளின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இப்படி ஒரு பிரச்சினைக்கு இதுவரை இல்லாத புதிய தீர்வை உங்களால் கொடுக்க முடியுமா? அப்படி ஒரு வாடிக்கையாளர் தேவையை உணர முடிந்தால், அந்தத் தேவையின் வீரியத்தை அறிய முடிந்தால், அதற்கு உங்களால் பெரிதும் உதவ முடிந்தால், உங்கள் தொழிலுக்கான நோக்கம் கிடைத்துவிட்டது. அந்த ஐடியாவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லுங்கள்!

நிரந்தர வருமானம் வரும் ஏதாவது பிசினஸ் ஒன்றைச் சொல்லுங்களேன்.

- சீதாராமன், சென்னை.

அது சேமிப்புத் திட்டம். தொழில் அல்ல. தொழிலில் வருமானம் வளர வேண்டும். இதுதான் இலக்கு. அது தோல்வி அடையும் போது குறையலாம். மறையலாம். நிரந்தரத்தன்மை தேடுபவர்கள் தொழில் செய்யக் கூடாது. மாற்றத்தைத் தொடர்ந்து கையாள்வதுதான் தொழில் வாழ்க்கை.

சூரிய சக்தி அல்லது காற்றாலை சார்ந்து , சுற்றுப்புறச்சூழலை ஆதரிக்கும் தொழில் ஒன்று தொடங்க ஆசை. யாரை அணுகுவது?

பசுமைத் தொழில்கள்தான் இனி வருங்காலத்தைக் காப்பாற்ற உதவும். உங்கள் முதலீடு பற்றித் தெரியாவிட்டாலும் ஒன்றை உறுதியாகச் சொல்வேன். அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களைப் படியுங்கள். உங்கள் தகுதிக்கேற்ப, திறனுக்கேற்ப ஒரு தொழிலைத் தேர்வுசெய்துகொள்ளுங்கள். எவ்வளவு கடன், எவ்வளவு மானியத் தொகை, எவ்வளவு முதலீடு என்று கணக்கிடுவது போலச் சந்தை நிலவரங்கள், இந்தத் தொழில்களின் பிரத்யேகப் பிரச்சினைகள் போன்றவற்றையும் அறிந்துகொள்ளுங்கள். அதேபோலப் பல முதலீட்டாளர்கள் பசுமைத் தொழில்களில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். அதனால் நிறைய ஆராய்ச்சி செய்தபின் ஒரு தொழிலைத் தேர்வு செய்யுங்கள்.

நாங்கள் நடத்தும் ஒரு பிளே ஸ்கூலில் என் மனைவி, மகள், மகன், மருமகன் என அனைவரும் பணியாற்றியும் பெரிய லாபம் இல்லை. இதனால் வீட்டிலும் பள்ளியிலும் தொடர்ந்து பிரச்சினைகள். தொழிலை மூடவும் மனமில்லை. பள்ளியைக் காப்பாற்ற என்ன செய்யலாம்?

எந்த நல்ல தொழிலும் ஸ்திரப்பட லாபம் அவசியம். பல நல்ல நோக்கம் கொண்ட நிறுவனங்கள் தங்கள் லட்சியத்தையும் காப்பாற்ற முடியாமல் பணமும் சம்பாதிக்க முடியாமல் வீழ்ந்ததைக் கண்டிருக்கிறேன். உங்கள் வருமானம் குறைவா நிதி மேலாண்மை மோசமா என்று தெரியவில்லை. உங்கள் பள்ளிக்கு நல்ல ஆதரவு இருந்து தொடர்ந்து வருமானம் பெருகிவந்தால், அதற்கு வருங்காலம் இருக்கிறது. நிதி மேலாண்மையில்தான் சிக்கல். வருமானமே குறைவு என்றால் யோசிக்க வேண்டிய விஷயம்.

இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது உங்கள் குடும்பத்தில் நான்கு பேரும்சம்பளம் எடுத்துக்கொள்கிறீர்களா? அப்படி எடுக்காமல் இருந்தால் இன்னொரு கணக்கும் போடுங்கள். இந்த நாலு பேரில் வெளியே வேலைக்குப் போகக்கூடியவர்கள் அப்படிச் சென்று சம்பாதித்தால் எவ்வளவு கிடைக்கும் என்றும் கணக்குப் போடுங்கள். தொடர்ந்து நஷ்டமடைந்தும் வலிந்து நடத்தப்படும் தொழில்கள் குடும்பத்தின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். நீங்கள் தகுந்த நிர்வாக ஆலோசனை பெறுவது நல்லது.

‘தொழில் தொடங்கலாம் வாங்க!’

கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் டாக்டர். ஆர். கார்த்திகேயன் வாசகர்கள் தங்களுடைய தொழில் முயற்சிகள் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம். முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002,

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்