வரலாறு தந்த வார்த்தை 18: வழி மீது ‘விழி’ வைத்து…

By ந.வினோத் குமார்

மிழ்நாடு அரசின் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்தான் கடந்த வாரத் தலைப்புச் செய்தி. தங்களின் கோரிக்கைகளை, அரசு செவிமடுக்காததால் திடீரென்று போராட்டத்தில் குதித்தார்கள் ஊழியர்கள். அடுத்த ஒரு வாரத்துக்கு, பேருந்துகள் இல்லாமல் மக்கள் அடைந்த கஷ்டத்தைக் கேட்டால் சாலைகூட அழும். ஆனால், அந்தத் தொழிலாளர்களின் கஷ்டத்தைக் கேட்டால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசுப் பேருந்தும் ஆயிரம் கண்ணீர்க் கதைகள் சொல்லும்.

போராட்டம் தொடங்கிய ஒன்றிரண்டு நாட்களிலேயே அரசு அவர்களின் கோரிக்கைகளுக்குக் காதுகொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் பாராமுகம் காட்டியது அரசு. அது சரி… எந்தப் போராட்டம்தான் அரசின் உடனடிப் பார்வைக்குச் சென்றிருக்கிறது?

இவ்வாறு ஒரு விஷயத்துக்குப் பாராமுகம் காட்டுவது, அப்படி ஒரு பிரச்சினை இல்லவே இல்லை என்று காட்டிக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை ஆங்கிலத்தில் ‘turn a Nelson’s eye’ என்று சொல்வார்கள். இந்த நெல்சன் யார்?

பிரச்சினையாகவே பார்க்கவில்லை

ஹொரேஷியோ நெல்சன், பிரிட்டிஷ் கடற்படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி. 1801-ம் ஆண்டு, கோபன்ஹேகனில் நடந்த போர் ஒன்றில் நெதர்லாந்து, நார்வே நாட்டுக் கடற்படைகளை எதிர்த்துப் போரிட்டார். அப்போது, எதிரி நாட்டுப் போர்க் கப்பல்கள் சில, நெல்சன் இருந்த கப்பலின் திசை நோக்கி வந்துகொண்டிருந்தன.

அப்போது, இன்னொரு கப்பலில் இருந்த நெல்சனின் உயர் அதிகாரி ஹைட் பார்க்கர், அந்தச் சண்டையிலிருந்து நெல்சனை உடனடியாகப் பின் வாங்கச் சொன்னார். அன்றெல்லாம், ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்குச் செய்தி அனுப்புவதென்றால், கொடி அசைப்பார்கள். அதைப் பார்த்தவுடன், இன்னொரு கப்பலில் இருப்பவர்கள், ‘ஏதோ பிரச்சினை, ஆபத்து’ என்பதைப் புரிந்துகொள்வார்கள்.

பார்க்கர் இருந்த கப்பலில் இருந்து கொடி அசைவதைப் பார்த்ததும், நெல்சனுக்குக் கீழே பணிபுரியும் வீரர்கள், நெல்சனிடம் விஷயத்தைச் சொன்னார்கள். உடனே நெல்சன், ஒரு டெலஸ்கோப்பால் வீரர்கள் சொன்ன திசையைப் பார்த்தார். பார்த்துவிட்டு, ‘எனக்கு அப்படி ஒண்ணும் ‘சிக்னல்’ தெரியலையே’ என்றார். அவரை எதிர்த்து எந்த வீரரும் வாய் திறக்கவில்லை. எனினும், எதிரி நாட்டுக் கப்பல்களைச் சண்டையிட்டு வென்றார் நெல்சன்.

இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், நெல்சன் டெலஸ்கோப்பை எடுத்துப் பார்த்த கண்ணில் ஒளி இல்லை. ஆம், நெல்சனுக்கு ஒரு கண்ணில் மட்டும்தான் பார்வை இருந்தது. பார்வையில்லாத கண்ணில் டெலஸ்கோப்பை வைத்துப் பார்த்துவிட்டு, ‘சிக்னல்’ தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறார். அதாவது, பிரச்சினையை அவர் பிரச்சினையாகவே பார்க்கவில்லை. அவர் எப்படிப்பட்ட தன்னம்பிக்கை உடையவராக இருந்தார் என்பதைச் சொல்வதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்விலிருந்து பிறந்ததுதான் மேற்கண்ட சொற்றொடர்.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வழி மேல் ‘விழி’ வைத்துக் காத்திருக்கிறார்கள் போக்குவரத்துத் தொழிலாளர்கள். அரசு ஓரப்பார்வையாவது பார்க்கும் நாள் எது?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்