மாணவர்களைத் தொழில்செய்ய ஆரம்பித்துவிட்டால் அவர்கள் படிப்பு கெடாதா என்ற நியாயமான கவலை பல பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வரும். என்னிடம் ஆலோசனை கேட்டு வரும் பல பெற்றோர்களின் குறையும் இதுதான். “முதல்ல படிப்பு முடியட்டும். அதற்கப்புறம் இஷ்டப்படி செய்யட்டும்!” என்பதுதான்.
ஆர்வம் இல்லையே!
சமீபத்தில் வந்திருந்த மூன்றாமாண்டு மருத்துவ மாணவர் ஒருவர் மளிகைக் கடை வைக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாகச் சொன்னார். தீர விசாரித்ததில் அவர் பாதி பேப்பர்களில் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரிந்தது. தனியார் கல்லூரி நிர்வாகத்துடன் சண்டை வேறு. வெளியே வீடு எடுத்துத் தங்கிப் படிக்கும்போது நிறைய செலவுகள். அதை ஈடுகட்டத்தான் தனி வியாபாரம் என்று ஆரம்பித்தார். அவருடைய தந்தையிடம் கேட்டேன். “எட்டுப் பத்து வருஷம் ஆனாலும் முதலில் படிப்பை முடிக்கட்டும். என் சொத்தை வித்து மொத்தக் கட்டணத்தையும் காலேஜுக்குக் கட்டியிருக்கேன். என்ன செலவானாலும் அவன் டாக்டராகும்வரை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். (அடுத்த முறை ஆஸ்பத்திரி போனால் உங்கள் டாக்டர் எத்தனை வருடங்களில் படிப்பை முடித்தார் என்றும் கேட்டுவிட்டு வைத்தியம் பார்த்துக்கொள்ளணும்!)
இவரைப் பொறுத்தவரை இது தொழில்முனைவு ஆர்வம் கிடையாது. கையில் பணம் புரள வியாபாரம் ஒரு வழி எனத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மளிகைக் கடை பற்றி எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை. பணம் போட மட்டும் நண்பர் ஒருவர் தயாராக இருக்கிறார், அவ்வளவுதான். எம்.பி.பி.எஸ். படிப்பு பொய்த்துவிட்டால் இது ஒரு தற்காப்பாகவும் சமூகத்தில் சொல்லிக்கொள்வதுபோல ஏதோ ஒன்றாகவும் இருக்கும் அவ்வளவுதான். இவ்வகை முதலீடுகள் அநேகமாகத் தோல்வியில்தான் முடியும்.
அறிவையும் அனுபவத்தையும் கூர்மைப்படுத்தலாம்
நான் சொல்வது இது போன்றது அல்ல. படிக்கும் மாணவருக்கு ஒரு தொழில் எண்ணம் இருக்கிறது. அது படிப்பு சார்ந்தும் இருக்கிறது. அதைக் கல்லூரி வளாகத்திலேயே சோதனை செய்ய முடியும். இதற்காகப் படிப்பை நிறுத்த வேண்டாம். இந்தச் சோதனை வெற்றி பெறாவிட்டாலும், இந்த முயற்சி அவருக்கு அந்தத் துறை சார்ந்த நல்ல வேலையை வாங்கித் தரும். இந்த வியாபார முயற்சியால் சிறப்புத் தகுதி, அனுபவம், சான்றிதழ் என அனைத்தும் கிடைக்கும். அவரை வேலைக்கு எடுத்துக்கொள்ளும் நிறுவனமும் தொழில் உலகம் தெரிந்த, துணிச்சலாக முடிவு எடுக்கத் தெரிந்த, சோதனை ஆர்வம்மிக்க ஒரு ஆள் கிடைப்பதில் பெருமைகொள்வார்கள்.
இத்தகைய முயற்சிகளால் ஆசிரியர்களுக்கும் நல்ல அனுபவம் கிடைக்கும். பலர் ஆசிரியர் தொழில்தான் வேண்டும் என்று தேடி வந்ததில்லை. அவர்களுக்கும் தொழில் ஆர்வம் இருந்திருக்கலாம். செயல் ஆராய்ச்சியில் ஈடுபட நினைக்கலாம். ஆனால், வாய்ப்புகள் இருந்திருக்காது. இத்தகைய முயற்சிகளுக்கு வழிகாட்டுவதால் ஆசிரியர்களும் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் கூர்மைப்படுத்திக்கொள்ள முடியும். சில ஆண்டுகள் தொடர்ந்து ஒரு துறையில் ஆராய்ச்சி செய்கையில் அவர்கள் சிறந்த ஆசிரியர்களாகவோ ஆராய்ச்சியாளர்களாகவோ ஏன் சிறந்த தொழில்முனைவராகவோ ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல, கல்லூரிகளுக்கும் இது நல்ல வாய்ப்பு. இன்று பல பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு வந்துகொண்டிருக்கின்றன. மாணவர் சேர்க்கை முதல் கேம்பஸில் வேலை கிடைப்பதுவரை அனைத்தும் சுருங்கிவிட்டன. அதற்கேற்ப மற்ற முதலீடுகளும் சுருங்கிவிட்டன. என்ன செய்வது என்று தெரியாமல் இன்று வங்கி வேலைக்கும் ஐ.ஏ.எஸ். படிக்கவும் கோச்சிங் கிளாஸ் ஆரம்பித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் இந்த மாணவர்களுக்கு ஏதாவது ஒன்று கிடைக்க வேண்டும் என்பதால்தான். அப்படி ஒரு நல்ல வாய்ப்பாகவும் தொழில்முனைவு மையம் அமையும்.
மாணவர்களின் கம்பெனி
பல நேரங்களில் படிப்பில் சுமாரான மாணவர்கள் செயல்பாடுகளில் துடிப்பாக இருப்பார்கள். புதிதான எண்ணங்கள் இருக்கும். தைரியம் இருக்கும். நிராகரிப்புகளை நிறைய சந்தித்ததில் மனஉறுதி இருக்கும். அவர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக இருக்கும். சின்ன முதலீட்டில் வியாபாரம் செய்வது எப்படி என்று கற்றுத் தரலாம். இது அவர்களின் பொறுப்புணர்ச்சியையும் அதிகரிக்கும். படிப்பில் கெட்டியான மாணவர்களுக்கு இது கூடுதல் வாய்ப்பு. ஆனால், படிப்பில் பிடிமானம் இல்லாமல் இருப்போருக்கு இது பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். தன்னை நிரூபிக்க, தன்னம்பிக்கை கொள்ள இது பெரிய வாய்ப்புகளாக அமையும்.
தொழில்முனைவு பற்றிய உளவியல் சோதனைகள் மூலம் மாணவர்களில் யார் யாருக்குத் தொழில்சார்ந்த ஆர்வமும் அறிவும் உள்ளன என்று அறியவும் முடியும். ஆயிரம் பேர் படிக்கும் கல்லூரியில் ஒரு ஐம்பது பேரைத் தேர்ந்தெடுத்து இந்த வாய்ப்புக் கொடுத்தால் அவர்களில் ஐந்து பேராவது வியாபாரத்தை நல்ல முறையில் அணுக ஒரு வாய்ப்பாக இருக்கும்.
பல நேரம் சிறு குழுக்களாகப் பிரித்தும் தேர்வு செய்யலாம். இன்று பல கல்லூரிகளில் ஸ்டார்ட் அப்களுக்காக நிறையப் போட்டிகள் நடக்கின்றன. அவற்றில் கலந்துகொண்டு பிட்ச் செய்ய இவை பயன்படலாம். அப்படி வெளியே செல்லும்போது அவர்கள் பல தொழிலதிபர்களையும் முதலீட்டாளர்களையும் சந்திக்கலாம். பலரின் தொழில் திட்டங்கள் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கும். பலரின் ஆலோசனைகள் கிடைக்கும். பின்னாட்களில் ஒரு தொழில் தொடங்க யார் யாரைப் பார்க்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பன எல்லாம் தெரிந்துகொள்வார்கள்.
கல்லூரிக்கு என்ன லாபம்? இத்தனை கம்பெனிகளில் வந்து எங்கள் மாணவர்களை வேலைக்கு ஆள் எடுத்தார்கள் என்பது போல இத்தனை கம்பெனிகளை எங்கள் மாணவர்கள் தோற்றுவித்தார்கள் என விளம்பரப்படுத்தலாம். பணியாளர்களைத் தயாரிக்கும் கல்வி நிலையங்கள்போல ஏன் முதலாளிகளைத் தயாரிக்கும் கல்வி நிலையங்கள் உருவாகக் கூடாது?
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago