சேதி தெரியுமா? - இந்தியாவுக்கு 100-வது இடம்

By கனி

இந்தியாவுக்கு 100-வது இடம்

லண்டனைச் சேர்ந்த ‘லெகட்டும் இன்ஸ்டிடியூட்’ (Legatum Institute), செழிப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் உலகின் 149 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் இந்தியாவுக்கு 100-வது இடம் கிடைத்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் பொருளாதாரம், சமூக நலன் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த இரண்டு பிரிவுகளிலும் பொருளாதாரத்தின் தரம், ஆளுகை, தொழில் சூழல், தனிப்பட்ட சுதந்திரம், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், இயற்கைச்சூழல் உள்ளிட்ட 104 அம்சங்களை வைத்து இந்தப் பட்டியலின் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. ஆசிய-பசிபிக் பகுதியில் சீனாவும் இந்தியாவும் தொழில் சூழலில் சிறப்பான வளர்ச்சியை எட்டியிருக்கின்றன. ஆனால், இயற்கைச்சூழலைப் பொறுத்தவரை, இந்த இரண்டு நாடுகளும் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தியிருக்கின்றன.

இணையதள வேகம் புதிய பட்டியல்

கைபேசி இணையதள வேகப் பட்டியலில், உலகின் 122 நாடுகளில் இந்தியா 109-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. ‘பிராட்பேண்ட்’ வெளியைப் பொறுத்தவரை, 133 நாடுகளில் இந்தியா 76-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. நவம்பர் 2017, உலகளாவிய வேகச் சோதனைப் பட்டியலைப் பிரபல ‘ஓக்லா’ நிறுவனம் வெளியிட்டது. இதில், வேகமான கைபேசி இணையதளச் சேவைகளை வழங்கும் நாடுகளில் நார்வே முதலிடத்திலும் நெதர்லாந்து இரண்டாவது இடத்திலும் ஐஸ்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன. அண்டை நாடுகளான சீனா 31-வது இடத்திலும் பாகிஸ்தான் 89-வது இடத்திலும் மியான்மர் 94-வது இடத்திலும் நேபாளம் 99-வது இடத்திலும் இருக்கின்றன. வேகமான ‘பிராட்பேண்ட்’ சேவைகளைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கிறது.

நிலத்தடி நீர் மாநாடு

டெல்லியில், 7-வது சர்வதேச நிலத்தடி நீர் மாநாடு டிசம்பர் 11 முதல் 13 வரை நடைபெற்றது. இந்தியா ஒருங்கிணைத்திருந்த இந்த மாநாட்டின் கருப்பொருளாக ‘நீர் பாதுகாப்பு, சவால்கள், பருவநிலை மாற்றத்துக்கான தகவமைத்தல்’ என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. தேசிய நீரியல் மையமும் (NIH) மத்திய நிலத்தடி நீர் வாரியமும் (CGWB) இணைந்து மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்த மாநாட்டை ஒருங்கிணைத்தன. 15 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டார்கள். 250 ஆராய்ச்சி ஆவணங்கள் இதில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தியாவின் நிலத்தடி நீர் பயன்பாட்டைப் பற்றியும் அப்போது விவாதிக்கப்பட்டது.

‘விளையாடு இந்தியா’ திட்டம்

மத்திய அரசு, ரூ. 1,756 கோடியில் ‘விளையாடு இந்தியா’ (கேலோ இந்தியா) திட்டத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் டிசம்பர் 10 அன்று தெரிவித்தார்.

19CHGOW_RAJYAVARDHAN

இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விளையாட்டிலும் 1,000 திறமையான இளம் விளையாட்டு வீரர்கள் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு ‘பான் இந்தியா ஸ்போர்ட்ஸ்’ உதவித்தொகையாக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் எட்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நாட்டில் 150 பள்ளிகள், 20 பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றில் சிறப்பான விளையாட்டு மையங்கள் உருவாக்கப்படவிருக்கின்றன.

வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு

ரஷ்யா-இந்தியா-சீனா முத்தரப்பு நாடுகளின் 15-வது வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பு டெல்லியில் டிசம்பர் 11 அன்று நடைபெற்றது. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரோவ், சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி மூவரும் இந்தச் சந்திப்பில் மூன்று நாடுகளின் வெளியுறவு ஒத்துழைப்பு பற்றிப் பேசினர்.

பாதுகாப்பு, ஆசிய-பசிபிக் பகுதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவை இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தன. 2002-ம் ஆண்டில் தொடங்கிய இந்த மூன்று நாடுகளின் முத்தரப்புச் சந்திப்பு ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது.

ஆசியான்-இந்தியா மாநாடு

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் (ASEAN) – இந்தியா இணைப்பு மாநாடு (AICS) டெல்லியில் டிசம்பர் 11,12 ஆகிய நாட்களில் நடைபெற்றது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ஆசியான் இந்திய மையம், சி.ஐ.ஐ. போன்றவை இணைந்து இம்மாநாட்டை ஒருங்கிணைத்திருந்தன. ‘21-ம் நூற்றாண்டில், ஆசியாவின் டிஜிட்டல் இணைப்புகளை வலுப்படுத்துவது’ என்ற கருப்பொருளில் மாநாடு நடைபெற்றது. தென்கிழக்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் உள்கட்டமைப்பு, சாலை, கப்பல், விமானப் போக்குவரத்து, டிஜிட்டல், நிதி போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.

19CHGOW_DR_LALJIrightகைரேகைத் தந்தை மறைவு

இந்தியாவின் ‘டி.என்.ஏ.’ ரேகை (DNA Fingerprinting) தந்தையாகக் கருதப்படும் டாக்டர் லால்ஜி சிங், மாரடைப்பு காரணமாக டிசம்பர் 10 அன்று மறைந்தார். அவருக்கு வயது 70. இந்தியாவில் ‘டி.என்.ஏ.’ ரேகை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

‘டி.என்.ஏ.’ ரேகைத் துறையில் ஆராய்ச்சி, தடயவியல் பயன்பாடு ஆகிய இரண்டு தளங்களிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. மரபியல் அம்சங்களான மக்கள்தொகை உயிரியல், கட்டமைப்பு உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காகப் பிரத்யேகமான ஆய்வகங்களை உருவாக்கியவர் இவர்.

இந்தியாவில் ‘டி.என்.ஏ.’ ரேகை கண்டறிதல் மையம் அமைப்பதற்கான பணியை இந்திய அரசு 90-களில் இவரிடம்தான் ஒப்படைத்தது.

புதிய சூரியக் குடும்பம்

பூமி உட்பட எட்டுக் கோள்களைக் கொண்ட சூரியக் குடும்பத்துக்கு இணையான புதிய சூரியக் குடும்பத்தை முதன்முறையாக கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலமாக நாசா கண்டறிந்துள்ளது. டிசம்பர் 14 அன்று, ‘கெப்ளர்-90 நட்சத்திரம்’ என்று இதற்குப் பெயர்சூட்டி அறிவித்தது நாசா. இது பூமியிலிருந்து 2,545 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘கெப்ளர் 90’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “நம்முடைய சூரியக் குடும்பத்தின் சிறிய வடிவம் கெப்ளர்-90 நட்சத்திரக் குடும்பம் எனலாம். ஏனென்றால், இதிலும் சிறிய கோள்கள் உள்வட்டத்திலும் பெரிய கோள்கள் வெளிவட்டத்திலும் உள்ளன. ஆனால், அத்தனை கோள்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கின்றன” என்றார் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியரும் நாசா விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ வாண்டர்பர்க்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்