இ
தை எழுத ஆரம்பித்த பின் ஏராளமான மின்னஞ்சல்கள் பிசினஸ் ஐடியாக்கள் குறித்து வர ஆரம்பித்தன. “என்ன வியாபாரம் செய்தால் லாபம்? பதில் எழுதுங்கள்” என்ற ரீதியில் ஒருவரிக் கடிதங்கள் எழுதியவர்கள் உண்டு. சிலர் தங்கள் வியாபாரப் பிரச்சினையை நாலைந்து வரிகளில் எழுதித் தீர்வை கேட்கிறார்கள். சிலர் நேரில் வந்து பேசினால் உதவுவீர்களா என்று கேட்டார்கள். அவர்களில் சிலர் வரவும் செய்தார்கள். வந்தவர்களில் பலர் ‘பேசி ஐடியாவை வாங்கிச் சென்றாலேபோதும்’ சமாளித்துவிடலாம் என்று நம்பினார்கள். வெகு சிலர்தான் தொழிலுக்கு நிர்வாக ஆலோசனை தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டார்கள்.
சவால்கள் பல
இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒன்றுதான். நிறுவனங்களின் ஆரோக்கியம் சீர்கெடும்போது, மனிதரைப் போல அவற்றுக்கும் ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்படுகின்றன. சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் முறையான நடவடிக்கைகள் நிறுவனத்தைக் காப்பாற்றும். இதைப் பெரும் நிறுவனங்கள் உணர்ந்து தொடர்ந்து தங்களைப் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றன. சிறு தொழில்கள் பேரபாயம் வரும் வரையில் இதுபோன்ற உதவிகளை நாடுவதில்லை. பல நேரத்தில் இது பேரிடர் மேலாண்மைபோல் பாதிப்புகளைக் குறைக்கச் செய்யும் நடவடிக்கைகளாக மாறிவிடுகின்றன.
புதிதாக வீடு கட்டுவது சுலபம். ஆனால், கட்டிய வீட்டை மாற்றியமைப்பது சற்றுக் கடினம். அது போலத்தான் இதுவும். புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் ஆலோசனைக்கு வரும்போது, மிகச் சிறிய அளவில் செய்யும் பணி நாளடைவில் பெரும் லாபங்களை ஈட்டும். பெங்களூருவில் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதுபோன்ற உதவிகளை வித்தியாசமாகப் பெற்றுவருகின்றன.
சென்ற ஆண்டுஅங்கே சென்று உரையாற்றியபோது, அந்த நிகழ்ச்சிக்குக் கிட்டத்தட்ட 30 புதிய ஸ்டார்ட் அப் இளைஞர்கள் வந்திருந்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் இப்படி ஓர் ஒப்பந்தம் நடந்தது. அவர்களில் ஆறு பேர் என்னிடம் வந்து கேட்டார்கள், “உங்களைப் பணியில் அமர்த்தி ஆலோசனை எல்லாம் கேட்பது இந்தச் சூழலில் எங்களால் இயலாது. இன்னமும் எங்களுக்கு முதலீட்டாளர்கள்கூடக் கிடைக்கவில்லை. ஆனால், எங்களுக்குப் பல சவால்கள் உள்ளன. உங்களைப் போன்ற ஒருவர் எங்களுக்குத் தேவை. எங்கள் ஆறு பேருக்கு ஈ மெயில், ஸ்கைப் மூலம் எங்கள் கேள்விகளுக்கு வாரத்துக்கு அரை நாள் என்ற கணக்கில் ஒரு சிறிய தொகைக்கு உதவ முடியுமா? எங்களில் யாருக்காவது பெரும் தேவை என்றால் பிறகு பிரத்யேகமாக உங்கள் சேவைகளைப் பெறுகிறோம்!”
சந்தை சொல்லித் தந்த பாடம்!
முதல் மூன்று மாதங்கள் இலவசமாகவே செய்தேன். அவர்கள் தொடங்கிய நிறுவனங்களில் ஒன்று பெரும் முதலீடு பெற்று இன்று விஸ்வரூபமாக வளர்ந்து வருகிறது. மற்ற ஸ்டார்ட் அப் நிறு வனங்களும் இன்னமும் உயிரோடு உள்ளன. அவர்களுக்குப் பிதாமகன் போலச் செயல்படும் பெருமையும் அவர்கள் மூலம் நான் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் பெரு வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளன.
இதை எழுதக் காரணம் இது போன்ற கிளஸ்டர் கோச்சிங் எல்லாம் என் வாழ்நாளில் செய்ததில்லை. இப்படி ஒன்று சாத்தியம் என்றுகூட நான் யோசித்ததில்லை. இது முழுக்க முழுக்கச் சந்தை சொல்லித் தந்த பாடம்.
“நாம் மிகச் சிறிய கம்பெனி. நம்மால் இது முடியாது” என்றெல்லாம் நினைக்காமல் என்னை நாடி வந்த அந்த இளைஞர்கள்தாம் தொழில் உலகை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்பவர்கள். முன்பு பணியாளருக்கு, படிப்பு தொழில் அளவும் சொத்து மதிப்பும் முதலாளிக்கு முக்கியமாக இருந்தன. இன்று அப்படி அல்ல. வருங்காலத்தைத் துணிச்சலுடன் கற்பனை செய்து, அதற்கேற்ப மாறும் மனநிலையில் எடுக்கும் தொழில் முடிவுதான் நிஜமான மூலதனம்.
பள்ளி மாணவன் ஒருவன்கூடப் புதிய தொழில் தொடங்கலாம். வெற்றி பெறலாம். நாற்பது வருட அனுபவஸ்தர்கூடத் தன் தொழிலிலேயே தடுமாறலாம். அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் திகைக்கலாம். எதுவும் இங்கு நடக்கும். எல்லாத் தொழில்களுக்கும் ஆயுட்காலம் உண்டு என்று முன்னரே எழுதியிருந்தேன். அதனால் எல்லா முடிவுகளும் உரிய நேரத்தில் எடுப்பது முக்கியம். அதற்கேற்ப முயற்சிகளும் ஆலோசனைகளும் தேவை.
நம்பிக்கை தரும் தகவல்கள்
நிர்வாக ஆலோசனை என்பது பெரும் வியாபாரங்களுக்குத்தான் என்ற நிலை மாறியுள்ளது. சிறுதொழில்களுக்குத்தான் அதிக ஆலோசனையும் ஒருங்கிணைப்பும் அவசியம் என்று கருதுகிறேன். அதற்கான பிசினஸ் மாடல்கள் பற்றி ஆராயும்போது, நம்பிக்கை தரும் தகவல்கள் நிறையக் கிடைத்துள்ளன. கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களைச் சந்தித்ததில் இவர்களின் திறன்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல உதவிகள் தேவை என்பது ஊர்ஜிதமானது. தாங்கள் தயாரித்த பொருட்கள் அயல்நாட்டுச் சந்தையில் பத்து மடங்குக்கு மேல் விலை வைத்து விற்றும் இவர்கள் இன்னமும் வறுமையில் இருக்கக் காரணம் என்ன?
வித்தை தெரிந்த பலருக்கு வியாபாரம் செய்யத் தெரிவதில்லை. சிலருக்கு வியாபாரம் தெரிந்தும் விஸ்தரிக்கத் திட்டமில்லை. இன்னும் சிலருக்கு எல்லாத் திட்டங்களும் இருந்தும் செயல்படுத்த, வழிகாட்ட ஆளில்லை. இத்தனை வங்கிகள், இத்தனை நிர்வாக அமைப்புகள், இத்தனை தன்னார்வக் குழுக்கள் இருந்தும் ஒரு சிறுதொழில் செய்பவர் தன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எங்கே செல்வது என்று தெரியாமல் நிற்பது துரதிர்ஷ்டம்.
தகுந்த நேரத்தில் எல்லா வகை உதவிகளையும் பெற்று முன்னேறி வருவதும் ஒரு வியாபாரியின் திறன்தான்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago