ஒ
வ்வொருவருக்கும் தான் யார் என்பது குறித்து ஒரு புரிதல் இருக்கும். சுயம் எனச் சொல்லப்படும் அத்தன்மைதான் ஒருவரின் தனித்துவம். நம் பாலினம், பாலியல்விருப்பம், படிப்பில் பெற்ற தேர்ச்சி, விளையாட்டில் பெற்ற வெற்றி இப்படிப் பலவற்றை உள்ளடக்கிய நம்பிக்கைகளின் தொகுப்பே நம்முடைய சுயம்.
நமது மனப்பாங்கையும் செயல்பாடுகளையும் தீர்மானிப்பது சுயம்தான். நம்மை வரையறுப்பதும் அதுவே. மேலும், இதுவே நம்முடைய அடையாளம். இந்த அடையாளத்தைக் கொண்டுதான் உலகத்தோடு இயைந்து வாழ்கிறோம்.
எங்கே இருக்கிறது இந்த சுயம்?
உதாரணத்துக்கு, தேர்வு அறையில் பரீட்சை எழுதிக்கொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்வோம். பாடத்திட்டத்தில் இல்லாத ஒரு கேள்வி வினாத்தாளில் இடம்பெற்றிருக்கிறது. ஆசிரியரும் அதைக் கற்பித்ததில்லை. இந்தச் சூழ்நிலையை நாம் எப்படி எதிர்கொள்வோம்? நம்முடைய சுயத்தை நேர்மறையாக அணுகுபவராக இருந்தால், ஒரு கை பார்ப்போம் என்று அந்த வினாவுக்குப் பதில் அளிக்க முயல்வோம். எதிர்மறையான புரிதல் இருக்குமேயானால், ஆசிரியர் சொல்லித் தராத வினாவுக்கு ஏன் நான் பதில் அளிக்க வேண்டும்? மேலும், இதற்குப் பதில் அளிக்க நம்மால் முடியாது என்று முடிவுசெய்து, முயற்சியே செய்யாமல் இருப்போம். நம்மைப் பற்றியும் நம் சுற்றம் பற்றியும் நாம் கொண்டிருக்கும் அபிப்ராயங்களின் அடிப்படையில் உருவானதுதான் நமது சுயம் என்று இப்போது புரிகிறதா?
அவ்வளவு முக்கியமா?
நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்ற பார்வையைக் கொண்டுதான் நாம் சமூகத்தையும் பார்க்கிறோம். அந்தப் பார்வை நேர்மறையானதாக இருந்தால், நாம் வாழ்வின் நிதர்சனங்களைப் புரிந்துகொண்டு வெற்றியாளர்களாகத் திகழ்வோம் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
அதுவே எதிர்மறையான பார்வையாக இருந்தால், விளைவுகளும் எதிர்மறையாகத்தான் இருக்கும். நம்மைப் பற்றி ஒரு மோசமான பிம்பத்தைக் கொண்டிருந்தால், கண்டிப்பாக அது நம்மைச் சுயமரியாதை அற்ற நிலைக்குத் தள்ளும். மேலும், புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போதும் புதிய மனிதர்களைச் சந்திக்கும்போதும் நம்மை அது பாதுகாப்பற்றவராக உணரச்செய்யும். இதனால், வாழ்வில் ஊக்கம் இன்றித் தவிப்போம்.
ஊக்கமும் பாராட்டும் நம்மை ஒரு மேம்பட்ட இடத்துக்கு அழைத்துச்செல்லும். அந்த இடத்தில் நாம் நம்மை நல்லவிதமாக உணர்வதோடு மட்டும் அல்லாமல் சிறப்பாகவும் செயல்படுவோம். எனவே, நல்ல எண்ணங்களையும் நல்ல வார்த்தைகளையும் ஒருபோதும் நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்தச் சுயம் ஒருவருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இல்லை என்றாலோ தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தாலோ அதைத் தன்வசப்படுத்துவது எப்படி?
சுயத்தை மெருகேற்றல்
கருவில் இருந்தே சுயம் உருவாக ஆரம்பிக்கிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகக் குழந்தைப் பருவத்திலேயே இதற்கான முயற்சியில் ஈடுபடுவது நல்லது. ஆரோக்கியமான சுயத்தைக் குழந்தைப் பருவத்திலேயே மனதில் விதைத்தோம் என்றால் பின்னாளில் அது பெரும் விருட்சகமாக வளர்ந்து அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதற்கும் பயனளிக்கும். சுயத்தை மெருகேற்ற கீழே உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
1. நம் மேல் கவனம் செலுத்துதல்.
2. நம் கருத்துகளை மதிக்கப் பழகுதல்.
3. நம் காதுகளுக்கும் இதயத்துக்கும் செவி கொடுத்தல்.
4. நம்மை நாமே அங்கீகரித்தல்.
5. நம்மை நாமே தாராளமாகப் பாராட்டுதல்.
6. வாழ்வில் நமது விருப்பத் தேர்வுக்கு நாமே பொறுப்பேற்றல்.
7. நேர்மறையான எண்ணத்தை நம்முள் தொடர்ந்து விதைத்தல்.
8. மனதுக்கு இதமான சூழலை அமைத்துக்கொள்ளுதல்.
சுயம் பற்றி நேர்மறையான பார்வையைக் கொள்வதன் மூலம் நம் தன்னம்பிக்கை பெருகி, சுயமரியாதை வளர்ந்து வாழ்வின் தரம் மேம்படும். கவிப் பேரரசர் கண்ணதாசனின் வரிகளில் சொல்வதென்றால், ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்’.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago