தொ
ழில் ஆலோசனைக்கு வந்த அன்பர் தன் கடந்த காலத்தைப் பற்றிச் சொல்கையில், “நேரம் சரியில்லை அப்போ. ஆரம்பித்தது எல்லாம் தோல்வி. நான் உப்பு விக்கப் போனா மழை வரும். உமி விக்கப் போனா காத்தடிக்கும்” என்றார். நான் சிரித்தவாறு கேட்டேன், “வானிலை அறிக்கை கேட்டு விட்டுப் போயிருக்கலாமே?” அவரும் சில நிமிடங்கள் சிரித்துவிட்டுப் பின்பு சீரியசாக “அப்ப நேரம் காலம் எல்லாம் பொய்யா?” என்று கேட்டார்.
சந்தை புரிந்த இசைப் புயல்
நம்மை மீறிய சக்திகள் நம் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும் என்பதை நம்புகிறவன்தான் நான். ஆனால் விதியை மதியால் வெல்லலாம் என்பதிலும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பதிலும் அதிகப் பற்று கொண்டவன். மழை வரலாம் என்று வானிலை அறிக்கை சொல்லும். குடை எடுத்துக் கொண்டு வெளியே போகலாமா அல்லது இன்று போகாமல் இருக்கலாமா என்ற முடிவு நம் கையில் தானே உள்ளது! இது தொழிலுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும்.
“டைம் நல்லா இருக்கிறதா என்று பார்ப்பதைப்போல டைமிங் சரியாக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.” என்றேன். 80-களில் தொடங்கப்பட்ட இன்ஃபோஸில் நிறுவனம் இதற்கு நல்ல உதாரணம். சினிமாவில் சொல்வதென்றால் ஏ.ஆர்.ரஹ்மானைச் சொல்லலாம். உலகமயமாக்கம் எல்லைகளை உடைக்க ஆரம்பித்த 92-ல் இவர் பிரவேசிக்கிறார். முதல் படமே காஷ்மீர் பயங்கரவாதத்தில் சிக்கிய தமிழர் பற்றியது. ஒரு தேசியப் பிரபல்யம் கிடைக்கிறது. இதுவரை கூட அதிர்ஷ்டம் என்று சொல்லலாம். ஆனால், அதற்குப் பிறகு அவர் எடுத்த முடிவுகள் முக்கியம். படங்களின் எண்ணிக்கையை விட எல்லை தாண்டும் மொழிகளுக்கு முக்கியத்துவம் தந்தது, ஏர்டெலின் ரிங் டோன் மெட்டமைத்தது, பன்னாட்டு இசை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது, ஒரே டியூனை பல மொழிகளில் பிரபலப்படுத்தி விற்பது, பாடல் இல்லாமல் வெறும் இசையைச் சந்தைப் படுத்தியது என இவர் செய்த அனைத்தும் பன்னாட்டு இசை சந்தையின் பல்ஸ் பார்த்து எடுத்த அறிவார்த்தமான முடிவுகள். அவை மிகப்பெரிய அளவில் அவருக்குப் புகழ், வாய்ப்புகள், வசதிகள் என எல்லாம் கொடுத்தன. ஆஸ்கர்வரை அவரை கொண்டு சென்றன.
வெற்றியாளர்களுடன் கூட்டணி
அதை விட முக்கியமான விஷயம் இதே 90-களில் வந்த பல இசை அமைப்பாளர்களிடம் ரஹ்மானுக்கு ஒப்பாகச் சொல்லக்கூடிய திறமை இருந்தன. ஆனால், ரஹ்மானின் தேர்வுகளும் முடிவுகளும்தான் அவரை வேறுபடுத்திக் காண்பித்தன. மணிரத்னம், ஷங்கர், ராம்கோபால் வர்மா, ராஜீவ் மேனன், சுபாஷ் காய் என வெற்றியாளர்களைத் தேர்வுசெய்து கூட்டணி வைத்துக்கொண்டார். வைரமுத்துவை விடாமல் பிடித்துக்கொண்டார். வைரமுத்துவுக்கும் இளையராஜாவிடமிருந்து பிரிந்து ஏழு ஆண்டுகள் தத்தளிப்பிற்குப் பிறகு ஒரு நல்ல பிடிமானம் கிடைத்தது. இருவரின் ரசவாதத்தில் பல முறை தேசிய விருதுகள் கிடைத்தன.
நான் சொல்ல வருகின்ற விஷயம் இதுதான். இறை அருள், சோதிடப் பலன், நல்ல நேரம் என்பவையெல்லாம் அவரவர் நம்பிக்கையைப் பொருத்தது. ஆனால், நல்ல நேரம் வருகையில் பிடித்துக் கொள்வதும், கெட்ட நேரத்தில் நிதானமான முடிவுகள் எடுப்பதும் நம் கையில்தான் உள்ளது. தவிர உலகத்தைக் கூர்ந்து நோக்கி அதன் போக்கில் எடுக்கப்படும் முடிவுகள் முக்கியமானவை.
2006- 2012-வரை ஸ்டார்ட் அப்களின் பொற்காலம். நீங்கள் ஒரு நல்ல தொழில்நுட்பாளராக இருந்து, ஒரு லாபகரமான தொழில் எண்ணத்தை முன்வைத்தால் அதிகம் யோசிக்காமல் முதலீட்டாளர்கள் பணம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஃபேஸ்புக்கும் கூகுளும் அந்தப் போக்கை உருவாக்கி வைத்திருந்தன. சிலிக்கன் பள்ளத்தாக்கில் ஒரு காபி குடித்துக் கொண்டே காசோலைகளில் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தன. அதன் இந்தியத் தாக்கம்தான் ஃப்லிப்கார்ட், ரெட் பஸ், ஓலா என டெக் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பு.
ஆனால், இந்தப் போக்கு மெள்ள மெள்ள மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக முதலீட்டாளர்களின் மனோபாவம் மாறிவிட்டது. வெறும் ஐடியாவை மட்டும் நம்பிப் பெரிய தொகை தரும் காலம் முடிந்துவிட்டது. உங்களால் பணம் பண்ண முடிகிறதா என்று பார்க்க ஆரம்பித்தனர். கெடுபிடிகள் அதிகமாயின. எல்லாருக்கும் அள்ளி வீசிய நிலைமை மாறி, மிகக் கவனமாகப் பார்த்துப் பார்த்துப் பணம் போடுகிறார்கள் முதலீட்டாளர்கள்.
சரியான நேரத்தில், சரியான முடிவு
இதைத்தான் டைமிங் என்று சொல்கிறேன். இன்றைய காலகட்டத்தில் நிகழும் மாறுதல்களைக் கூர்மையாகக் கவனிப்பதுதான் தொழிலைத் தக்க வைக்க உதவும். பழைய தகவலை, அனுபவமற்றவரின் அறிவுரையை வைத்துக்கொண்டு தொழில் முடிவுகள் எடுப்பது ஆபத்தானது. உங்கள் தொழில் முடிவுகள் நாளைய போக்குகளை எதிர்கொள்வதாக இருக்க வேண்டும்.
இனி வாகனம் தயாரிக்க வேண்டும் என்றால் மாருதியையும் ஹூண்டாயையும் போட்டியாக நினைக்கமாட்டார்கள். டெஸ்லாவையும் ஓலாவையும் நினைத்துத்தான் செயல்பட ஆரம்பிப்பார்கள். எல்லாக் காலத்திலும் தொழில்செய்வதில் ரிஸ்க் உள்ளது. வெற்றி தோல்வியை யாராலும் துல்லியமாகக் கணிக்க முடியாது. ஆனால் சந்தையின் போக்கை அறிந்து சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகள் முக்கியமானவை.
சில ரியல் எஸ்டேட் நண்பர்களைச் சந்தித்தபோது அவர்கள் பேசிக்கொண்டார்கள். இந்தத் தேக்க நிலையில் கட்டிவைத்துவிட்டு விற்க முடியாமல் திணறுவதை விடச் சில காலம் சும்மா இருக்கலாம் என்றார்கள். இதுவும் நல்ல முடிவுதான். இதற்கு நேர் எதிராக இன்னொரு நிறுவனம் யோசித்தது. தொழில் தேக்கம் மத்திய வர்க்கத்தைதான் பாதிக்கிறது. 3 படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மெண்டுகளை விற்பதில் சிரமம் உள்ளது உண்மைதான். ஆனால், 4 படுக்கையறைகள் கொண்ட விலை உயர்ந்த அபார்ட்மெண்ட்கள் உடனடியாக விற்றுப்போகின்றன. அதனால் அவர்கள் 4 படுக்கையறைகள் கொண்டவைகளிலும் வில்லா வீடுகளிலும் மட்டுமே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். இதுதான் டைமிங்கில் எடுக்கும் முடிவு என்பது.
உங்களுக்கு டைம் நன்றாக இருக்கிறதா என்று சிந்திப்பதைப்போல உங்கள் முடிவுகளின் டைமிங் சரியாக இருக்கிறதா என்றும் சிந்திப்பது நல்லது!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago