வியூகம் 07: எந்த வாய்ப்பையும் இழக்கவேண்டாம்! - குரூப் 2 முதன்மைத் தேர்வு

By செல்வ புவியரசன்

எதுவுமே நிலையில்லை, என்கிறபோது எதன்பொருட்டும் எதையும் இழப்பது அறிவுடைமை ஆகாது என்றொரு சொல்வழக்கு உண்டு. அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை எழுதுபவர்களுக்கு அது மிகவும் பொருந்தும்.

பதவி உயர்வு பெறலாம்!

பொதுவாக டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்கள், அந்தத் தேர்வுகளுக்கு மட்டுமே சிறப்பு கவனம் கொடுத்துப் படிப்பார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் குரூப் 2 தேர்வுகளை எழுதினாலும்கூட அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கவனம் பிசகும் என்பது ஒரு காரணம் என்றாலும், அது எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடியது அல்ல. ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1 தேர்வுகளுக்கு அறிவிக்கப்படும் பணியிடங்களையும் அவற்றுக்குப் போட்டியிடும் மாணவர்களின் எண்ணிக்கையையும் வைத்துப் பார்க்கும்போது, தேர்வுக்குத் தயாராகும் தகுதியான மாணவர்கள் அனைவருக்குமே குரூப் 1 பணியிடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்பது எதார்த்தம்.

எனவே தொடர்ந்து தேர்வுகளுக்கு முயற்சித்துக் கடைசியாக மாற்று வாய்ப்பை யோசிக்கும் முன்னால் குரூப் 1 தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களும்கூட அதே காலகட்டத்தில் குரூப் 2 நிலையிலான தேர்வுகளை எழுதலாம். குறிப்பாக, நேர்காணல் பதவி இடங்களுக்கான குரூப் 2 தேர்வுகள் சரியான மாற்றாக இருக்கமுடியும்.

குரூப் 2 நேர்காணல் பணியிடங்களில் சேர்பவர்கள் பதவி உயர்வு பெற்று குரூப் 1 பணிகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வருவாய்த்துறை உதவியாளராகப் பணியைத் தொடங்குபவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி பணிவரைக்கும் பதவி உயர்வு பெற முடியும். தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராகப் பணியில் சேருபவர்கள் குறிப்பிட்ட துறைகளில் இணை செயலர் பதவிகளில் பணியாற்றும் வாய்ப்புள்ளது.

சட்டத்துறையில் வழக்கறிஞர்களும், நிதித்துறையில் பொருளாதாரம், வணிகவியல், புள்ளியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றைப் படித்தவர்களும்தான் பிரிவு அலுவலர்களாகப் பணியாற்ற முடியும் என்பதால் அவர்கள் இன்னும் கூடுதலாகப் பதவி உயர்வுகளைப் பெற முடியும். எனவே குரூப் 1 பணிகளில் சேரவேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு இது இன்னொரு வாய்ப்பு.

புதிய தேர்வு முறை

முன்பு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒரே தேர்வாக நடத்தப்பட்டன. கொள்குறி (அப்ஜெக்டிவ்) முறையிலான தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு கொண்ட பணியிடங்களுக்கும் நேர்முகத் தேர்வு இல்லாத பணியிடங்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன. தற்போது நேர்முகத் தேர்வு கொண்ட பணியிடங்களுக்கான தேர்வும் நேர்முகத் தேர்வு இல்லாத பணியிடங்களுக்கான தேர்வும் தனித்தனியாக நடத்தப்பட்டுவருகின்றன.

நேர்காணல் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு முறையில் முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய நிலைகள் உள்ளன. முதனிலைத் தேர்வு குரூப் 2 தேர்வுகளுக்கான முந்தைய வினாத்தாளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். அதன்படி, 100 வினாக்கள் மொழிப் பாடத்திலிருந்தும் 100 வினாக்கள் பொதுஅறிவு, நடப்பு சம்பவங்களிலிருந்தும் கேட்கப்படும்.

முதன்மை தேர்வு

குரூப் 2 முதன்மைத் தேர்வு கொஞ்சம் சவால்தான். ஆனால், குரூப் 1 முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அதை அணுகுவது ஒப்பீட்டளவில் கொஞ்சம் எளிமையாக இருக்கும். மொத்த மதிப்பெண்கள் 300. மூன்று மணி நேரத்தில் 4,200 வார்த்தைகள் எழுதவேண்டும் என்பதால், ஏற்கெனவே குறிப்புகளைத் தயாரிப்பதும் வேகமாக எழுதிப் பழகுவதும் தேர்வின்போது பலனளிக்கும்.

இந்திய அளவிலும் தமிழகத்திலும் அறிவியல் தொழில்நுட்பத்தின் தாக்கம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிர்வாக முறை, தேசிய மற்றும் மாநில அளவிலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள், நடப்புச் சம்பவங்கள் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

போட்டித் தேர்வுகளுக்குத் தொடர்ந்து படிக்கும் மாணவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டால் குரூப் 2 நேர்முகத் தேர்வு பணியிடங்களுக்கான தேர்வில் எளிதில் வெற்றிபெற முடியும். பயணம் எங்குத் தொடங்குகிறது என்பதைக் காட்டிலும், எந்த இலக்கை அடைகிறது என்பதுதான் முக்கியம். இலக்கை அடைவது தாமதமானாலும், நிச்சயம் அடைந்துவிட முடியும் என்கிறபோது அந்தப் பயணத்தை ஏன் தவிர்க்கவேண்டும்?

குரூப் 2 முதன்மைத் தேர்வின் கேள்வி முறை

> 35 கேள்விகளில் 30 கேள்விகளுக்கு 30 வார்த்தைகளில் பதிலளிக்க வேண்டும்.

> 18 கேள்விகளில் 15 கேள்விகளுக்கு 120 வார்த்தைகளில் பதிலளிக்க வேண்டும்.

> 3 கேள்விகளில் 2 கேள்விகளுக்கு 250 வார்த்தைகளில் பதிலளிக்க வேண்டும்.

> 4 கேள்விகளில் 2 கேள்விகளுக்கு 500 வார்த்தைகளில் பதிலளிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்