சேதி தெரியுமா? - உலகளாவிய பசி பட்டியலில் இந்தியாவுக்கு 100வது இடம்!

By கனி

2017-ம் ஆண்டில் உலகளாவிய பசி பட்டியலில் (Global Hunger Index) இடம்பெற்ற 119 நாடுகளில் இந்தியா 100வது இடத்தில் இருக்கிறது. வாஷிங்கடனைச் சேர்ந்த சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி மையம் (IFPRI) உலக நாடுகளின் இந்தப் பசி தொடர்பான அறிக்கையை வெளியிட்டடிருக்கிறது. இந்தப் பட்டியலில், நேபாளம், மியான்மர், வங்கதேசம், வடகொரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளைவிட இந்தியா பின்தங்கியிருக்கிறது.

கடந்த ஆண்டு, 97-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு மூன்று இடங்கள் பின்னுக்குச் சென்றிருக்கிறது. குழந்தைகளின் அதிகபட்ச ஊட்டச்சத்து குறைபாடு, சமூகத் துறைகளில் தேவைப்படும் அர்ப்பணிப்பு போன்றவற்றை இந்தியாவில் நிலவும் பசி பிரச்சினைக்குக் காரணமாகச் சொல்லியிருக்கிறது சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி மையம். இந்தப் பட்டியலில், முதல் இடத்தில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு இருக்கிறது.

 

பொருளாதார ஆலோசனை குழுவின் முதல் சந்திப்பு

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் முதல் சந்திப்பு அக்டோபர் 12-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. ‘நிதி அயோக்’ உறுப்பினரான பிபேக் தேப்ராய் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், முதற்கட்டமாக பணியாற்ற வேண்டிய பத்து விஷயங்களை இந்தக் குழு பட்டியலிட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு, நிதி கொள்கை, பணக்கொள்கை, பொதுச் செலவினம், வேளாண்மை, சமூகத் துறைகள் உள்ளிட்ட பத்து விஷயங்களுக்கு அடுத்த ஆறு மாதங்களில் முன்னுரிமை அளிக்க அரசுக்கு இந்தக் குழு அறிவுறுத்தியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதம், பிபேக் தேப்ராய் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய பொருளாதார ஆலோசனை குழு நியமித்தார்.

 

மதிப்புமிக்க தேசிய பிராண்டு: இந்தியாவுக்கு 8வது இடம்

‘பிராண்டு ஃபினான்ஸ்’ என்ற நிறுவனம், ‘மதிப்புமிக்க தேசிய பிராண்ட்ஸ்(Valuable Nation Brands) 2017’ அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. 100 நாடுகள் இடம்பெற்ற இந்தப் பட்டியலில் இந்தியா 8வது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டு, இந்தப் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருந்தது. இந்த மதிப்புமிக்க தேசிய பிராண்டுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜெர்மனி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவுக்கு முன்னால் 7வது இடத்தில் கனடாவும், பின்னால் 9வது இடத்தில் இத்தாலியும் இருக்கின்றன. இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் இந்த ஆண்டு தேசிய பிராண்ட் மதிப்பு 2.04 டிரில்லியன் டாலராக இருக்கிறது. கடந்த ஆண்டைவிட இது ஒரு சதவீதம் குறைவு.

 

அணு ஆயதங்களைத் தடைசெய்ய இந்தியா மறுப்பு!

அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty) கையெழுத்திட இந்தியா மறுப்புத் தெரிவித்துள்ளது. ஐ.நா பொதுச் சபையின் ஆயுதக்குறைப்புக் குழுவிடம் இந்தியாவின் ஆயுதக் குறைப்புத் தூதர் அமன்தீப் சிங் கில் இந்தக் கருத்தை அக்டோபர் 12-ம் தேதி தெரிவித்திருக்கிறார். “அணு ஆயதங்களைத் தடை செய்திருக்கும் நாடுகளுடன் இந்தியா இணைவதற்கான கேள்வியே எழவில்லை.

ஆனால், அதே சமயத்தில் உலகளாவிய பாகுபாடில்லாத அணு ஆயுதக் குறைப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். அணு ஆயதங்களுக்கான தடை ஒப்பந்தத்தை ஐ.நா பொதுச் சபையால் 122 வாக்குகளுடன் ஜூலை மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியா உட்பட அணு சக்தி நாடுகள் இந்த ஒப்பந்தத்தைப் புறக்கணித்தன. ஆனால், வடகொரியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

 

2017- இந்தியா தண்ணீர் வாரம்!

இந்தியாவின் இந்த ஆண்டு தண்ணீர் வார நிகழ்ச்சியைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அக்டோபர் 10-ம் தேதி தொடங்கிவைத்தார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தத் தண்ணீர் வார நிகழ்ச்சியில், இந்தியாவுடன் சேர்த்து பதின்மூன்று நாடுகளைத் சேர்ந்த 1500 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

5வது ஆண்டாக நடைபெறும் இந்திய தண்ணீர் வாரத்தின் இந்த ஆண்டு கருப்பொருளாக, ‘உள்ளடங்கிய வளர்ச்சிக்காகத் தண்ணீரும் ஆற்றலும்’ என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் 2022-ம் ஆண்டுக்குள் 90 சதவீத இந்திய கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் குழாய் வசதி கிடைப்பதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

 

‘யுனெஸ்கோ’விலிருந்து விலகிய அமெரிக்கா, இஸ்ரேல்!

ஐ.நாவின் கலாச்சார, கல்வி அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்காவும் இஸ்ரேலும் அக்டோபர் 12-ம் தேதி விலகின. இஸ்ரேலுக்கு எதிரான செயல்பாடுகளுக்காக யுனெஸ்கோ அமைப்பிலிருந்து விலகுவதாக அந்த இரண்டு நாடுகளும் தெரிவித்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பப் பதவியேற்ற பிறகு, இரண்டாவது முறையாக ஒரு சர்வதேச அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியிருக்கிறது.

2015 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா, தற்போது யுனெஸ்கோ அமைப்பிலிருந்தும் வெளியேறியிருக்கிறது. 2011-ம் ஆண்டு, பாலஸ்தீனத்தை ழுழு நேர உறுப்பினராக யுனெஸ்கோ அங்கீகரித்தது. அப்போதிலிருந்து யுனெஸ்கோவுக்கு அமெரிக்காவுக்கு வழங்கிவந்த நிதியைக் குறைத்தது. டிசம்பர் 2018-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் இந்த விலகல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

 

இமாச்சல பிரதேசத்துக்கு நவம்பர் 9-ம் தேதி தேர்தல்!

இமாச்சல பிரதேசத்துக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று அக்டோபர் 12-ம் தேதி, தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஜனவரி 22-ம் தேதியுடன் சட்டமன்ற காலம் நிறைவுறும் குஜராத் மாநில தேர்தல் தேதியை இன்னும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி அறிவித்திருக்கிறார். அத்துடன், குஜராத் தேர்தல் தேதி, டிசம்பர் 18-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 68 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டமன்றம் ஜனவரி 7-ம் தேதியுடன் நிறைவுறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்