சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ரிஸ்க் எடுத்தேன்: மனம் திறக்கும் விராட் கோலி

By செய்திப்பிரிவு

தரம்சாலா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு 7 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 47 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் விளாசினார். ரஜத் பட்டிதார் 46, கேமரூன் கிரீன் 46 ரன்கள் சேர்த்தனர்.

242 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் அணியானது 17 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தற்போதைக்கு தக்கவைத்துக் கொண்டுள்ளது. அந்த அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வானார். அவர், நடப்பு சீசனில் 70.44 சராசரி மற்றும் 153.5 ஸ்டிரைக் ரேட்டுடன் 643 ரன்களை வேட்டையாடி உள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் விராட் கோலி கூறியதாவது:

என்னைப்பொறுத்த வரையில் எண்ணிக்கையைவிட தரமே முக்கியமானது. எனக்கு இந்ததத்துவம் நன்றாக வேலை செய்கிறது. விளையாட்டினை புரிந்துகொண்டு விளையாடும்போது பயிற்சிகுறைவாகவே தேவைப்படுகிறது. இதற்கு முன்னர்என்ன செய்தேனோ அதையே செய்தால் போதுமானதாக இருக்கிறது. இருப்பினும் போட்டியில் சிறப்பாக செயல்பட சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. இது ஒரு படிப்படியான பரிணாமத்தைச் சார்ந்தது.

சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஸ்லாக் ஸ்வீப் ஷாட் அடித்தேன். அதற்காக தனியாக பயிற்சி எடுக்கவில்லை. ஆனால் இதற்கு முன்னர் விளையாடி இருக்கிறேன். சுழற்பந்துக்கு எதிராக அதிரடியாக விளையாட வேண்டியுள்ளது. ரிஸ்க் எடுக்க வேண்டும் என தெரியும். அதை ஒரு தீர்க்கமான முடிவுடன் எடுத்தேன். ஸ்டிரைக் ரேட்டையும் சரியாக வைத்துகொள்ள முயன்றேன். அது எனக்கும் அணிக்கும் உதவியது. உண்மையைக் கூறவேண்டுமெனில் தொடரின் முதல் பாதியில் நாங்கள் சிறப்பான இடத்தில் இல்லை. ஒரு கட்டத்தில் நாங்கள், புள்ளிகள் பட்டியலை பார்க்க வேண்டாம், சுயமரியாதைக்காக விளையாடுவோம் என்று கூறும் நிலைக்கு வந்தோம்.

எங்கள் நிலையை உயர்த்தி, ஒரு அணியாக பெருமைக்காக விளையாட வேண்டும் என முடிவு செய்தோம். இதன் பின்னர் நம்பிக்கை மீண்டும் வந்தது, இப்போது நாங்கள் ஒரு ரோலில் இருக்கிறோம். இந்த வேகம் ஒரு வாரத்திற்கு முன்பு கிடைத்திருந்தால் நாங்கள் பல காரணிகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருந்திருக்க மாட்டோம். இவ்வாறு விராட் கோலி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE