மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம்: பிரிஜ் பூஷனுக்கு எதிரான வழக்கில் ஆதாரங்கள் இல்லையா? - டெல்லி காவல்துறை விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று வெளியான செய்தியை டெல்லி காவல்துறை மறுத்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது செய்யக்கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப் போவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர். இதற்காக ஹரித்துவார் சென்ற இவர்களிடம் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பதக்கங்களை ஆற்றில் வீசும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே பிரிஜ் பூஷனை கைது செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை என டெல்லி காவல் துறை வட்டாரங்கள் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது. இதனை டெல்லி காவல் துறை நேற்று மறுத்துள்ளது.

இதுகுறித்து டெல்லி காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், “இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்போவதாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தச்செய்தி தவறானது. உணர்வுப்பூர்வமான இந்த வழக்கில் விசாரணை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விசாரணை முடியும் வரை காத்திருங்கள்’

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறும்போது, “அரசியல் செய்வதற்கான மேடை இது இல்லை என்று மல்யுத்த வீரர்கள் கூறியிருந்தனர். ஆனால் பின்னர் அரசியல் கட்சிகள் வந்து இந்த மேடையை பகிர்ந்து கொண்டனர். டெல்லி காவல்துறையின் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.

டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை விளையாட்டின் மதிப்பை குறைக்கும் வகையில் எந்த நடவடிக்கையையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எடுக்க வேண்டாம்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE