‘நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்’, தோனியிடம் தோற்பதில் கவலை இல்லை - ஹர்திக் பாண்டியா

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும், கேப்டன் எம்எஸ் தோனியிடம் தோற்பதில் கவலை இல்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கேவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பை ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இழந்தது. இறுதிப் போட்டிக்கு பின்னர் ஹர்திக் பாண்டியா கூறியதாவது:

நாங்கள் தேவையான அனைத்தையும் செய்து முழு மனதுடன் விளையாடினோம். நாங்கள் எப்போதும் இணைந்து நிற்கும் அணி, யாரும் கைவிடவில்லை. ஒன்றாகவே வெல்வோம், ஒன்றாகவே தோற்கிறோம். இது அந்த விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கலாம். அதாவது, சாக்குப்போக்கு சொல்பவர்களில் நான் ஒருவன் அல்ல. சாய் சுதர்சனுக்கு இந்த ஆட்டம் சிறப்பாக இருந்தது. சிஎஸ்கே எங்களைவிட சிறப்பாக விளையாடியது. சாய் சுதர்சன் தனது கிரிக்கெட் வாழ்வில் அற்புதங்களைச் செய்யப் போகிறார்.

அணி வீரர்களை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் வெற்றி அவர்களுக்கான வெற்றியாகும். மோஹித் சர்மா, மொகமது ஷமி, ரஷித் கான் என எல்லோரும் அவர்கள் கையை உயர்த்திய விதம் அபாரமானது. பயிற்சியாளர்களையும் இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும். நான் அவர்களிடம் இதற்கு மேல் எதுவும் கேட்க முடியாது. தோனிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விதி அவருக்காக இதை எழுதியிருந்தது. நான் தோற்க வேண்டும் என்றால், அதுவும் தோனியிடம் என்றால் எனக்கு கவலையில்லை. நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும். எனக்குத் தெரிந்த சிறந்த மனிதர்களில் தோனியும் ஒருவர். கடவுள் அவரிடம் கருணை காட்டினார், கடவுள் என்னிடமும் கருணை காட்டியுள்ளார். ஆனால், இன்று அவருடைய இரவு. இவ்வாறு ஹர்திக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE