IPL | 3 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்த நூர் அகமது; 153 ரன்கள் வழங்கிய மற்ற குஜராத் பவுலர்கள்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி இருந்தார் குஜராத் டைட்டன்ஸ் வீரர் நூர் அகமது. ஒரே ஓவரில் ருதுராஜ் மற்றும் டேவன் கான்வே என சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை வெளியேற்றினார்.

18 வயதான ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர். ஆப்கன் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். ஐபிஎல் அரங்கில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மொத்தம் 44.1 ஓவர்கள் வீசி 352 ரன்கள் வழங்கியுள்ளார்.

இறுதிப் போட்டியில் தரமாக பந்து வீசிய நூர் அகமது: டிஎல்எஸ் முறையில் 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வெற்றிகரமாக விரட்டி, சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். குஜராத் அணி பவுலர்கள் அதிகபட்சமாக தலா 3 ஓவர்கள் வீசலாம் என்ற நிலை. பவர் பிளே ஓவர்களில் (4 ஓவர்கள் மட்டுமே) சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வேகவேகமாக ரன் குவித்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் மழை குறுக்கீடு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5, 7 மற்றும் 9-வது ஓவர்களை நூர் அகமது வீசினார். முறையே 6, 6 மற்றும் 5 ரன்களை மட்டுமே அவர் கொடுத்தார். இதில் 2 ஒய்டுகள் அடங்கும். 6 பந்துகளில் ரன் ஏதும் கொடுக்காமல் டாட் பந்துகளாக வீசி இருந்தார். அவர் ஆட்டத்தில் ஏற்படுத்திய அழுத்தம் காரணமாக ருதுராஜ் மற்றும் கான்வே விக்கெட்டுகளை ஒரே ஓவரில் கைப்பற்றி இருந்தார். அவர் வீசிய 3 ஓவர்களில் மொத்தம் 17 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.

மறுபக்கம் ஷமி, ரஷித் கான், பாண்டியா, லிட்டில் மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் எஞ்சிய 12 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி 153 ரன்கள் கொடுத்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE