யார் இந்த சாய் சுதர்சன்?

By பெ.மாரிமுத்து

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 47 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் விளாசி அனைவரையும் மிரளச் செய்துள்ளார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்ஸ்மேனான சாய் சுதர்சன். 21 வயதான சாய் சுதர்சன், சென்னை மயிலாப்பூரை சேர்ந்தர் ஆவார். இவரது தந்தை பரத்வாஜ், தெற்கு ஆசிய போட்டிகளில் இந்திய அணிக்காக தடகளத்தில் பங்கேற்றுள்ளார். தாய் உஷா, தமிழ்நாடு வாலிபால் அணியில் விளையாடி உள்ளார். விளையாட்டு பின்னணியை கொண்ட சாய் சுதர்சன் தனது கிரிக்கெட் பயணத்தை திருவல்லிக்கேனி பிரண்ட்ஸ் அணியில் இருந்து தொடங்கினார். தொடர்ந்து தமிழகத்தின் யு-14 அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதன் பின்னர் 2019-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார் . அதே ஆண்டில் ஆழ்வார்பேட்டை சிசி அணிக்காக பாளையம்பட்டி ஷீல்ட் ராஜா என்ற தொடரில் 52 சராசரியுடன் 635 ரன்கள் குவித்தார். இங்கிருந்து சாய் சுதர்சனுக்கு கிரிக்கெட் பயணம் ஏறுமுகமானது.

2021-ல் தமிழக அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் அறிமுகமானார். தொடர்ந்து ரஞ்சி கோப்பை, சையது முஸ்டாக் அலி தொடருக்கான தமிழக அணியில் இடம் பிடித்தார். ரஞ்சி கோப்பையில் தான் அறிமுகமான முதல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 273 பந்துகளில் 18 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 179 ரன்கள் விளாசினார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் அவர், 7 ஆட்டங்களில் 63 சராசரியுடன் 572 ரன்களை விளாசி அனைவரது பார்வையையும் தன் பக்கம் இழுத்தார்.

இது ஒருபுறம் இருக்க தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 தொடரில் 2021-ம் ஆண்டு சீசனில் கோவை கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய சாய் சுதர்சன் முதல் ஆட்டத்திலேயே 5 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் விளாசி முத்திரைபதித்தார். இந்த சீசனில் அவர், 8 ஆட்டங்களில் 143.77 ஸ்டிரைக் ரேட்டுடன் 358 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தையும் பிடித்தார்.

இதன் பின்னரே குஜராத் டைட்டன்ஸ் அணியின் பார்வை சாய் சுதர்சன் மீது விழுந்தது. கடந்த சீசனில் அவரை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருந்தது. குஜராத் அணியின் ஆல்ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் அவருக்கு மாற்று வீரராக சாய் சுதர்சனை அணிக்குள் கொண்டு வந்தது குஜராத். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 31 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார்.

அந்த சீசனில் 5 ஆட்டங்களில் விளையாடி 36.25 சராசரியுடன் 145 ரன்கள் சேர்த்தார் சாய் சுதர்சன். இதில் ஒரு அரை சதமும் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 65* ஆக இருந்தது. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நடுவரிசை பேட்டிங்கில் சாய் சுதர்சன் பிரதான வீரராக திகழ்ந்தார். லீக் சுற்றின் தொடக்கத்தில் வெற்றிக்கான சில பயனுள்ள பங்களிப்புகளை வழங்கினார். முதல் 6 ஆட்டங்களில் இடம் பெற்ற அவர், 2 அரை சதங்கள் அடித்திருந்தார்.

ஆனால் அடுத்த 5 ஆட்டங்களில் சாய் சுதர்சன் களமிறக்கப்படவில்லை. இதற் கான காரணத்தையும் குஜராத் அணி தெளி வாக கூறவில்லை. எனினும் லீக் சுற்றின் இறுதிப் பகுதியில் சாய் சுதர்சன் மீண்டும் களமிறக்கப்பட்டார். ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர், 47 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து மும்பை அணிக்கு எதிரான தகுதி சுற்று 2-ல் 31 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார்.

தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட சாய் சுதர்சன், பெரிய மேடையான இறுதிப் போட்டியில் எந்த வித நெருக்கடியையும் உணராமல் மட்டையை சுழற்றிய விதம் ரசிக்கும் வகையில் இருந்தது. களத்திற்குள் இறங்கியது முதல் கடைசி ஓவர் வரை சிஎஸ்கே பந்து வீச்சாளர்களை கடும் அழுத்தத்திலேயே வைத்திருந்தது பாராட்டும் வகையில் இருந்தது. தனது சிறப்பான மட்டை வீச்சால் தேர்வுக்குழுவினரின் பார்வையை சாய் சுதர்சன் ஈர்க்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE