IPL Final | இறுதிப்போட்டி மழை காரணமாக நிறுத்தம்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்துள்ளது. 215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 28) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மழையின் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு 7.30 மணி அளவில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமறிங்கிய விருத்திமான் சாஹா 2-வது ஓவரில் அழகாக ஒரு கேட்ச் கொடுத்தார். ஆனால், தீபக் சாஹர் கையிலிருந்து நழுவிய அந்த பந்து சிஎஸ்கே ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு உள்ளானது. அடுத்து 4-வது ஓவரில் சாஹர் வீசிய பந்தில் நேரடியாக சாஹருக்கே சுப்மன் கில் ஒரு கேட்சை கொடுத்தார். அதிலும் கோட்டைவிட்டார் சாஹர். ஆனால், இம்முறை சிஎஸ்கே ரசிகர்களின் கோபம் பந்தின் மீதல்ல... சாஹரின் மீது.

இந்த கேட்சுகளைத் தொடர்ந்து விருத்திமான் சாஹா - சுப்மன் கில் இணை கலந்துகட்டி அடித்தனர். 32 பந்துகளில் 50 ரன்களைச் சேர்த்து பாட்னர்ஷிப்பில் பட்டையை கிளப்பினர். கிடைக்கும் கேப்புகளில் அடித்துக்கொண்டிருந்த இந்த இணைக்கு 6வது ஓவர் ஆபத்தாக அமைந்தது. 6வது ஓவரில் 2 ரன்அவுட்டுகள் மிஸ்ஸானாலும், ரவீந்திர ஜடேஜா வீசிய கடைசி பந்து சுப்மன் கில்லைத் தாண்டி தோனியின் கைக்கச் சென்றது. அடுத்த நிமிடத்தில் ஸ்டம்பின் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. நடுவருக்கு வாய்ப்பை கொடுக்காமல் ஸ்டம்பிக் செய்த வேகத்தில் நம்பிக்கையுடன் நடந்துவந்த தோனியின் அந்த நடை சுப்மன் கில்லக்கு பயத்தை கொடுத்திருக்கலாம். உண்மைதான். 20 பந்துகளில் 39 ரன்களுடன் வெளியேறினார் கில். சிஎஸ்கே ரசிகர்கள் பெருமூச்சுவிட்டனர். சாய் சுதர்ஷன் களத்திற்கு வந்தார். 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த குஜராத் 86 ரன்களைச் சேர்த்திருந்தது.

குஜராத்தின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஹாவின் விக்கெட்டும் தீபக் சாஹர் பந்தில் அரங்கேறியது. 39 பந்துகளில் 54 ரன்களைச் சேர்த்த விருதிமான் சாஹா தீபக் சாஹர் வீசிய பந்தை தூக்கி அடிக்க அது நேராக தோனியின் கைக்குள் அடைக்கலம் புகுந்தது. வெளியேறினார் சாஹா. சாஹா + கில் = சாய் சுதர்ஷன் என சொல்லும் அளவிற்கு அமைந்து அவரின் ஆட்டம். வெறித்தனமாக ஆடிய அவர், சிஎஸ்கே பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பவதிலேயே குறியாக இருந்தார்.

இதனிடையே தேவையான நேரங்களில் சிக்சர்களையும் அடித்த குஜராத் ரசிகர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தினார். குறிப்பாக 16-வது ஓவரில், 3 ஃபோர், 1 சிக்ஸ் என விளாசி துஷார் தேஷ்பாண்டே ஓவரை ஒன்றுமில்லாமல் ஆக்கினார். கூடவே ஹர்திக் பாண்டியா அடித்தால் சிக்ஸ் தான் என இரண்டு சிக்சர்களை விளாசினார்.

பத்திரனா வீசிய 19-வது ஓவரை சிக்சருடன் தொடங்கி வைத்தார் சாய் சுதர்ஷன். இரண்டாவது பந்தும் சிக்ஸ். 3-வது பந்தில் அவுட். 47 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 96 ரன்களை விளாசிய சாய் சுதர்ஷ்னின் இந்த ஆட்டம் அவரது கரியரில் முக்கியமான ஆட்டமாக அமைந்தது. அடுத்து வந்த ரஷித் கான் கடைசி பந்தில் தூக்கி அடிக்க அது கேட்ச் ஆக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 214 ரன்களை குவித்தது. இதன்மூலம் சென்னைக்கு 215 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணி தரப்பில் மதீஷா பத்திரனா 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர் ஆகியோர தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் ஷமி வீசிய முதல் ஓவரில் 3 பந்துகளை ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்து ஒரு பவுண்டரி விளாசினார். அப்போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது மழை நின்றுவிட்டது என்றாலும் மைதானத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 10.45க்கு பிறகே போட்டித் தொடங்குவது குறித்து தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE