பும்ராவின் இடத்தை என்னால் எடுத்துக்கொள்ள முடியாது: சொல்கிறார் ஆகாஷ் மத்வால்

By செய்திப்பிரிவு

சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வேட்டையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தனது அபார பந்து வீச்சால் ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் 29 வயதான ஆகாஷ் மத்வால்.

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் மத்வால், ஒரு பொறியாளர் ஆவார். தனது கிரிக்கெட் கனவை நிறைவேற்றுவதற்காக கட்டிட பொறியாளர் பணியை துறந்துவிட்டு கையில் பந்தை எடுத்தார். மாநில அணியில் இடம் பிடித்த அவர், தனது திறனை நாளுக்கு நாள்மெருகேற்றிக்கொண்டார். இதன்பயனாக அவர், 50 ஓவர் போட்டியில் மாநில அணியை கேப்டனாக வழி நடத்தினார். அப்போது ஐபிஎல் அணிகளின் பார்வை அவர் மீது விழுந்தது. முதலில் மும்பை அணியின் வலை பயிற்சி பந்து வீச்சாளராக ஆகாஷ் மத்வால் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 2019-ம் ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வலை பயிற்சியில் பந்து வீசினார். கடந்த ஆண்டு சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக நேரிட்டது. இதனால் ஆகாஷ் மத்வால் மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். ஆனால் அந்த சீசனில் அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சீசனின் தொடக்கத்திலும் ஆகாஷ் மத்வால், மும்பை அணியின் திட்டங்களில் இல்லை.

ஏற்கெனவே ஜஸ்பிரீத் பும்ரா இல்லாத நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக அவதிப்பட்டதால் அவரிடம் இருந்து முழுமையான செயல்திறன் வெளிப்படவில்லை. ஒரு கட்டத்தில் ஆர்ச்சரும் விலகினார். மும்பை அணி 8 ஆட்டங்களை விளையாடி முடித்த பின்னர்தான் ஆகாஷ் மத்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான அறிமுக ஆட்டத்தில் 3 ஓவர்களை வீசிய மத்வால் 37 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் விக்கெட் கைப்பற்றவில்லை. அடுத்த இரு ஆட்டங்களும் அவருக்கு சரியாக அமையவில்லை. குஜராத் அணிக்கு எதிராக வான்கடேவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஷுப்மன் கில், டேவிட் மில்லர் உள்ளிட்ட 3 பேரின் விக்கெட்களை வீழ்த்தி அணியின் நம்பிக்கையை பெற்றார் ஆகாஷ் மத்வால். அங்கிருந்து அவர், ஏற்றம் கண்டார்.

வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கடைசி லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 விக்கெட்களை வேட்டையாடி ஐபிஎல்லின் சாதனை புத்தகத்தில் தனது பெயரை இடம் பெறச் செய்ததுடன் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை தொடரின் முக்கியமான கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் ஆகாஷ் மத்வால் கூறும்போது, “மும்பை அணி எனக்கு பொறுப்புகளை வழங்கி உள்ளது. நான் அதை செய்ய முயற்சிக்கிறேன். பும்ராவின் இடத்தை என்னால் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறேன். பயிற்சி ஆட்டங்களில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினேன். அதன் காரணமாகவே தற்போது இங்கே நிற்கிறேன்.

டென்னிஸ் பந்து கிரிக்கெட் மூலமாகவே யார்க்கர்களை வீசுவதற்கு கற்றுக்கொண்டேன். அதை இங்கு முயற்சி செய்து பார்க்கிறேன். ஏனெனில் யார்க்கர் பந்துகளே அதிக ரன்களை விட்டுக்கொடுப்பதில் இருந்து நம்மை பாதுகாக்கும். எனது பலமே யார்க்கர் வீசுவதுதான். எனது பலத்தை அறிந்துள்ள கேப்டன் ரோஹித் சர்மா, அணிக்கு தேவையான இடத்தில் என்னை பயன்படுத்துகிறார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்