யு-17 பிபா உ.கோப்பை: இந்திய அணி அருமையாக ஆடியும் துரத்தும் துரதிர்ஷ்டத் தோல்வி

By ஆர்.முத்துக்குமார்

யு-17 பிபா உலகக்கோப்பைக் கால்பந்து பிரிவு ஏ போட்டியில் கொலம்பியா அணிக்கு எதிராக இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி தழுவியது.

அருமையான கோல் கீப்பர் தீரஜ் இந்திய கால்பந்து அணிக்குக் கிடைத்துள்ளார் என்றே கூற வேண்டும், நிறைய கொலம்பிய முயற்சிகளை அவர் அபாரமாகத் தடுத்ததோடு, ஆட்டம் முடியும் தறுவாயில் கொலம்பிய வீரர் காம்பாஸ் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அடித்த  கோல் முயற்சியை வலது புறம் பாய்ந்து தீரஜ் தட்டி விட்டது, தோல்வி நிலையிலும் விழிப்புடன் செயல்படும் போராட்டக்கார ஒரு மனநிலையை எடுத்துரைப்பதாக அமைந்தது.

கொலம்பிய வீரர் யுவான் பெனலோசா இந்திய அணியின் அரிய தடுப்பாட்டக் குறைப்பாட்டுக் கணத்தைப் பயன்படுத்தி 49 மற்றும் 83-வது நிமிடங்களில் 2 கோல்களை அடிக்க இந்திய அணி சார்பில் ஜீக்சன் தவ்னோஜம் முதல் கோலை அடித்து வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்றார். 82-வது நிமிடத்தில் கார்னர் ஷாட் மிகச்சரியாக வர அதனை தலையால் முட்டி கோலுக்குள் ஜீக்சன் திணித்தது வரலாற்றுக் கணமானது. ஃபிபா உலகக்கோப்பையில் எந்த வயதினருக்கானதாக இருந்தாலும் முதல் கோலை அடித்து வரலாறு படைத்துள்ளார் ஜீக்சன்.

இந்நிலையில் இந்தியா நாக் அவுட் சுற்றுக்குச் செல்ல வேண்டுமெனில் கானாவை நல்ல கோல் இடைவெளியில் வீழ்த்தி, பிறகு கொலம்பியாவை அமெரிக்கா அணி வீழ்த்த காத்திருக்க வேண்டியதுதான்.

நேற்றைய ஆட்டத்தில் இந்தியப் பயிற்சியாளர் செய்த தவறு புரியாத புதிராக இருந்தது. வளரும் நட்சத்திரம், ஆக்ரோஷமாக ஆடும் கோமல் தாட்டல், முன்கள வீரர் அனிகெட் ஜாதவ், நடுக்கள வீர சுரேஷ் வாங்ஜான், தடுப்பாட்ட வீரர் ஜிதேந்திரா சிங் ஆகியோரை நேற்று களமிறக்காமல் பெஞ்சில் அமரவைத்தார். அமெரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சில நம்பிக்கைகளை ஊட்டிய இந்த 4 வீரர்கள், குறிப்பாக ஜாதவ், தாட்டலை உட்கார வைத்தது சர்ச்சைக்குரியதே.

இதனையடுத்து போரிஸ் தங்ஜாம் அணியில் தடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினார். ஆட்டம் தொடங்கிய போது இறுக்கமான இந்திய தடுப்பணையினால் கொலம்பிய அணி தூரத்திலிருந்தே ஷாட்களை ஆடின. பக்கவாட்டிலிருந்து த்ரோ போடும்போது பயங்கரமான த்ரோக்களை வீசி இந்திய தடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்த நினைத்த கொலம்பிய அணியின் உத்தி கை கொடுக்கவில்லை, தடுப்பாட்டம் வலுவாக அமைந்தது

இந்திய அணிக்கு ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் கோலுக்கான அருமையான வாய்ப்பு கிடைத்தது, இந்திய வீரர் அபிஜித் சர்க்கர் கோலை நோக்கி அடித்த ஷாட் கொலம்பிய கோல் கீப்பர் கெவின் மியரினால் தடுக்கப்பட்டது.

இந்திய நடுக்கள வீரர் நிந்தோய்ங்கம்பா மீட்டீ இடது புறம் அருமையாக சுறுசுறுப்பாக ஆடி ஊடுருவ முயன்ற போதெல்லாம் உடல் அளவில் வலுவாக இருக்கும் கொலம்பிய வீரர்கள் அவரை எளிதில் மடக்கினர்.

செண்டர் பேக் வீரர் அன்வர் அலி உறுதியுடன் ஆடினார். இந்திய அணி அதிக கோல்களை வாங்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம் அபார கோல் கீப்ப்ர் தீரஜ்தான் காரணம். கொலம்பியாவின் மின்னல் வீரர் காம்பாஸ் இடது புறம் பல அச்சுறுத்தல்களை தொடர்ந்து இந்திய அணிக்கு அளித்தார். அவரது 36-வது நிமிட ஷாட்டையும் பிறகு 41-வது நிமிடத்தில் கொலம்பியாவின் யாதிர் மெனெசஸ் அடித்த ஷாட்டையும் தீரஜ் அருமையாகத் தடுத்தார்.

முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் இந்திய முன்கள வீரர் ராகுல் கனோலியை கொலம்பிய வீரர்கள் மார்க் செய்யவில்லை, பந்து அவருக்கு வந்த போது 22 அடியிலிருந்து ராகுல் மேற்கொண்ட கோல் முயற்சி போஸ்டில் பட்டு துரதிர்ஷ்டமானது.

இடைவேளையின் போது இரு அணிகளும் சமபலத்துடன் ஆடி 0-0 என்றே இருந்தது. அதாவது இந்திய அணி நிச்சயம் கோல் அடிக்கும் என்ற நம்பிக்கை தெரிந்தது.

இடைவேளைக்குப் பிறகு திடீரென இந்திய ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது, அப்போதுதான் ஒரு லாங் பாஸில் பந்து கொலம்பிய நடுக்கள வீரருக்கு வர அவர் அதனை வலது புறம் பெனலோசாவுக்கு பாஸ் செய்ய, இந்திய தடுப்பாட்ட வீரர்கள் சரியான நிலையில் வரமுடியாது போக, கோல் கீப்பர் தீரஜ்ஜால் ஒன்றும் செய்ய முடியவில்லை, பெனலோசா முதல் கோலை 49-வது நிமிடத்தில் அடித்தார்.

அதன் பிறகு கொலம்பியாவின் காம்பாஸ் அதிரடிடியாக இடது புறத்திலிருந்து இந்திய கோல் பகுதிக்குள் 4 முறை நுழைந்து கோல் அடிக்கும் முயற்சியை தடுப்பாட்ட வீரர்களும், தீரஜ்ஜும் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் ஒரு அரிய வாய்ப்பாக இந்திய அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைக்க, சஞ்சீவ் ஸ்டாலின் வலது மூலையிலிருந்து கார்னர் ஷாட்டைத் துல்லியமான உயரத்தில் அடிக்க ஜீக்சன் சரியான நேரத்தில் எம்பி தலையால் முட்டி கோலுக்குள் திணித்து வரலாற்று நாயகரானார்.

ஃபிபா தொடர்களில் இந்தியா அடிக்கும் முதல் கோல் என்ற கனவுப்பிரதேசத்துக்குள் கொண்டாட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த இந்திய அணி அதிலிருந்து மீள்வதற்குள் கொலம்பிய அணி 2-வது கோலை அடித்து விட்டது. ஒரு எதிர்த்தாக்குதல் மூவில் பந்து மீண்டும் பெனலோசாவிடம் வர அவர் மீண்டும் வலது புறத்திலிருந்து கோல் அடித்தார் கொலம்பியாவின் வெற்றி கோலாக இது அமைந்தது.

கடைசியில் மிக அருமையான சமன் செய்யும் கோல் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்தது, கோல் கீப்பரும் இந்திய வீரரும் ஒன் டு ஒன்னாக இருந்த தருணம் அது ஆனால் கோல் அடிக்க முடியாமல் போனது. மொத்தத்தில் இந்திய அணி நிறைய முன்னேற்றங்களைக் காண்பித்தது,

ஆனால் கோமல் தாட்டல், அனிகெட் ஜாதவ் ஆகிய முக்கிய வீரர்களை உட்கார வைத்ததற்கான நியாயமான காரணங்களை பயிற்சியாளர் அளிக்க வேண்டிய கடமை உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்