இறுதி டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்த தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது

கொழும்புவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று தென் ஆப்பிரிக்கா 94 ஓவர்களை எதிர்கொண்டு தோல்வியடையாமல் டிரா செய்தது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 1-0 என்று கைப்பற்றியது.

2வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்து டிரா செய்தது. வெர்னன் பிலாண்டர், இம்ரான் தாஹிர் கடைசி 8 ஓவர்களை திறம்படத் தடுத்தாடி ஒரு அரிய டிராவை நிகழ்த்தினர்.

இலங்கை தரப்பில் ரங்கன்னா ஹெராத் 5 விக்கெட்டுகளையும் பெரேரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 1993ஆம் ஆண்டுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா, இலங்கையை அதன் மண்ணில் வீழ்த்தியுள்ளது.

369 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்கா இன்று 38/1 என்ற ஸ்கோரில் சுமார் 90 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் களமிறங்கியது. டீன் எல்கர் 13 ரன்களுடனும், குவிண்டன் டி காக் 21 ரன்களுடனும் இறங்கினர். ஆனால் டீன் எல்கர் ஸ்கோர் குறிப்பவரை மேலும் தொந்தரவு செய்யாமல் அதே ஸ்கோரில் பெரேராவின் அருமையான பந்தில் பவுல்டு ஆனார்.

டி காக் 37 ரன்கள் எடுத்து ரங்கன்னா ஹெராத்தின் திரும்பும் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டிவிலியர்ஸும் ஆம்லாவும் 25 ஓவர்களைக் கடத்தினர். டிவிலியர்ஸ் 67 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ரங்கன்னா ஹெராத்தின் அருமையான பந்தில் ஸ்டம்பை இழந்தார்.

ஹஷிம் ஆம்லா 159 பந்துகளைச் சந்தித்து 25 ரன்களை எடுத்திருந்த போது, பெரேராவின் பந்தில் ஜெயவர்தனேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேற 105/5 என்ற நிலையில் இலங்கைக்கு வெற்றி நம்பிக்கைப் பிறந்தது.

டூ பிளேஸி தன் பங்கிற்கு 49 பந்துகளைக் காலி செய்து 10 ரன்கள் எடுத்து ஹெராத் பந்தில் ஜெயவர்தனேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டுமினி 65 பந்துகளை சந்தித்து 3 ரன்களை எடுத்து பெரேரா பந்தில் எல்,பி.ஆகி வெளியேறினார். தென் ஆப்பிரிக்கா 130/7.

ஸ்டெய்னும் பிலாண்டரும் மேலும் ஒரு 10 ஓவரை திறம்பட தடுத்தாடினர் ஸ்டெய்ன் 6 ரன்களில் ஹெராத்திடம் அவுட் ஆக, தென் ஆப்பிரிக்கா 148/8.

அதன் பிறகு விக்கெட் விழாமல் பிலாண்டர் (27 நாட் அவுட்), தாஹிர் (4 நாட் அவுட்) ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு அரிய டிராவைச் செய்தனர்.

ஆட்ட நாயகனாக ஜெயவர்தனேயும், தொடர் நாயகனாக டேல் ஸ்டெய்னுன் தேர்வு செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE