IPL 2023: KKR vs LSG | 'பினிஷர்' ரிங்கு சிங்கின் போராட்டம் - ஒரு ரன்னில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதியானது லக்னோ

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்ய அதன்படி, முதலில் லக்னோ அணி களமிறங்கியது. ஆரம்பத்தில் கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சு காரணமாக லக்னோ விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 73 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த அந்த அணியை ஆயுஷ் பதோனி, நிகோலஸ் பூரன் கூட்டணி கரைசேர்ந்தது.

6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்த நிலையில் பதோனி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த நிகோலஸ் பூரன் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து 58 ரன்னில் வெளியேறினார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது. கொல்கத்தா சார்பில் ஷர்துல் தாக்குர், வைபவ் அரோரா, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு இம்முறை ஓப்பனிங் சிறப்பாக அமைந்தது. பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் - ஜேசன் ராய் கூட்டணி 61 ரன்கள் எடுத்தது. அப்போது வெங்கடேஷ் ஐயர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த கேப்டன் நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா சொதப்பினாலும் ஜேசன் ராய் 45 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

மிடில் ஆர்டரில் கொல்கத்தாவின் முக்கிய வீரர் ரஸ்ஸல் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாட தவற, சமீபகாலமாக பினிஷர் ரோலில் கெத்து காட்டும் ரிங்கு சிங் மீண்டும் ஒருமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். கடைசி 3 பந்துகளில் 18 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட, இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைத்தார். இறுதியில் 1 ரன்னில் கொல்கத்தா தோல்வியை தழுவ, அதே ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற லக்னோ, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத ரிங்கு சிங் 67 ரன்கள் சேர்த்திருந்தார். லக்னோ தரப்பில் ரவி பிஷ்னோய் மற்றும் யஷ் தாகூர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE