IPL 2023: PBKS vs RR | ஜெய்ஸ்வால் - படிக்கல் கூட்டணியால் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

By செய்திப்பிரிவு

தரம்சாலா: பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. தரம்சாலாவில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பஞ்சாப்பின் ஆரம்பமே ஆட்டம் கண்டது எனலாம். 50 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து திணறியது அந்த அணி. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 2 ரன், அதர்வா தாயீட்19 ரன், ஷிகர் தவான் 17 ரன், லிவிங்ஸ்டோன் 9 ரன் என பஞ்சாப்பின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டாக்கினர்.

எனினும், 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா இருவரும் 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் எடுத்தனர். ஜிதேஷ் சர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் சாம் கர்ரன் 49 ரன்கள், ஷாருக் கான் 41 ரன்களும் எடுக்க இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்தது.

ராஜஸ்தான் தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட் எடுத்தார்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அதிரடி வீரர் ஜாஸ் பட்லரை ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக்கினார் ராபாடா. எனினும், ஜெய்ஸ்வால் - படிக்கல் கூட்டணி இந்த ஆரம்பகட்ட சரிவை சரிசெய்தது. இருவரும் நிதானமாக ஆடினர். படிக்கல் இந்த சீசனில் முதல் அரைசதத்தை பதிவு செய்த அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் சஞ்சு சாம்சனும் இரண்டு ரன்களோடு வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, சிறிதுநேரத்தில் ஜெய்ஸ்வாலும் அரைசதம் கடந்த கையோடு நடையைக் கட்டினார்.

இறுதிக்கட்டத்தில் ஹெட்மேயர் சிறப்பாக விளையாடி 46 ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் ஆகினார். அவர் அவுட் பின் 6 பந்துகளில் 9 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. துருவ் ஜூரல் இறுதியில் ஒரு சிக்ஸ் அடித்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ராபாடா 2 விக்கெட் வீழ்த்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE