ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியுடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் விளையாடி 12 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்திலும் வரும் 21-ம் தேதி சொந்த மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்திலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது பெங்களூரு அணி.
அதேவேளையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 12 ஆட்டங்களில் 8-ல் தோல்வி அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கும் அந்த அணி எஞ்சிய ஆட்டங்களில் கணிசமான வெற்றியை பெற்று கவுரவமான முறையில் தொடரை நிறைவு செய்வதில் தீவிரம் காட்டக்கூடும்.
பெங்களூரு அணியை பொறுத்தவரையில் கேப்டன் டு பிளெஸ்ஸிஸுடன் விராட் கோலியும் ரன் வேட்டை நிகழ்த்தக் கூடியவராக திகழ்கிறார். அந்த அணி தனது கடைசி 3 ஆட்டங்களில் 2-ல் மும்பை, டெல்லி அணிகளிடம் தோல்விகளை சந்தித்திருந்தது. எனினும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது நிகர ரன்ரேட்டை கணிசமாக உயர்த்தி இருந்தது.
வெற்றி தருணத்தை இன்றைய ஆட்டத்தில் தொடரச் செய்வதில் பெங்களூரு அணி முனைப்புக்காட்டக்கூடும். 12 ஆட்டங்களில் 57.36 சராசரியுடன் 631 ரன்கள் வேட்டையாடி இந்த சீசனில் அதிகரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டு பிளெஸ்ஸியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். அவருக்கு உறுதுணையாக விராட் கோலி செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் 39.81 சராசரியுடன் 438 ரன்களை சேர்த்துள்ள விராட் கோலி 6 அரை சதங்கள் அடித்துள்ள போதிலும் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தாததும், சில நேரங்களில் ஸ்டிரைக்கை சுழற்சி செய்வதில் தடுமாற்றம் காண்பதும் அணியின் ரன் குவிப்பில் தேக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் விராட் கோலி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.
5 அரை சதங்கள் அடித்துள்ள கிளென் மேக்ஸ்வெல் மீண்டும் ஒரு முறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான பங்களிப்பை வழங்கக்கூடும். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெய்ன் பார்னல், மொகமது சிராஜ், மைக்கேல் பிரேஸ்வெல், கரண் சர்மா ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை 59 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ததில் முக்கிய பங்குவகித்தனர். இந்த பந்து வீச்சுகூட்டணி ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசைக்கும் சவால் தரக்கூடும்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில் இந்த சீசனில் பேட்டிங், பந்து வீச்சு என இரு துறையிலும் மந்தமாகவே செயல்பட்டு வந்துள்ளது. ஹெய்ன்ரிச் கிளாசன், ராகுல் திரிபாதி ஆகியோரை தவிர மற்றஎந்த பேட்ஸ்மேன்களிடம் இருந்துரன் குவிப்பு இல்லை. கேப்டன் எய்டன் மார்க்ரம் பார்மில் இல்லாதது ஒட்டுமொத்த அணியையும் பாதித்துள்ளது. ஹாரி புரூக் ஒரு ஆட்டத்தில் சதம் அடித்தார். அதன் பின்னர் மோசமான செயல்திறனால் தனது இடத்தை அணியில் இழந்தார். மயங்க் அகர்வாலும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை.
பந்து வீச்சிலும் ஹைதராபாத் அணி வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த சீசன்களில் தனது சொந்த மைதானத்தில் குறைந்த அளவிலான ரன்களை சேர்த்தாலும் பலமான பந்து வீச்சால் வெற்றியை வசப்படுத்தும் திறனை கொண்டிருந்த ஹைதராபாத் அணி இம்முறை தலை கீழாக உள்ளது. அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் 12 ஆட்டங்களில் 14 விக்கெட்களை வீழ்த்தி உள்ள போதிலும் வெற்றிக்கான பங்களிப்பு அவரிடம் இருந்து வெளிப்படவில்லை.
மயங்க் மார்க்கண்டே கவனம் ஈர்த்தாலும் மற்ற பந்து வீச்சாளர்களான மார்கோ யான்சென், நடராஜன், உம்ரன் மாலிக் ஆகியோரிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்படவில்லை.
பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணிக்கு அழுத்தம் இருக்காது. இதனால் அந்த அணி வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யக்கூடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago