ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர் இவரா?- ஆச்சரியமான தகவல்

By ஆர்.முத்துக்குமார்

ஐபிஎல் கிரிக்கெட் 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. எத்தனையோ வீரர்கள் வருகிறார்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறார்கள், சூப்பர் ஸ்டார்கள் மட்டும் வணிக காரணங்களுக்காக தொடர்ந்து இருந்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் முதல் சதம் எடுத்த இந்திய வீரர் மணீஷ் பாண்டே பெயருக்கு இன்னும் ஆடி வருகின்றார். பால் வல்ஹாட்டி என்ன ஆனார் என்று தெரியவில்லை, அஸ்னோட்கர், பழனி அமர்நாத், 42 வயதில் வந்து கலக்கிய ஸ்பின்னர் என்று எத்தனையோ விளிம்பு நிலை கிரிக்கெட் வீரர்கள் வந்தார்கள் சென்றார்கள்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இதுவரையிலுமே கூட அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர், அதாவது ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ புள்ளி விவரங்களின் படி குறைந்தது 500 பந்துகளையாவது ஆடியவர்கள் என்ற வகையில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர்கள் பட்டியல் நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கும்:

கிறிஸ் கெய்ல் தான் ஐபிஎல் வகை கிரிக்கெட்டின் ஆளுமை வீரர். சுற்றிச் சுற்றி செம சாத்து சாத்தியிருக்கின்றார். இவரிடம் ‘வாங்காத’ பவுலர் ஏறக்குறைய இல்லை என்றே கூறி விடலாம். அஸ்வின் இவரை அதிக முறை வீழ்த்தியிருக்கின்றார் என்று கூற முடியும். கிறிஸ் கெய்லின் ஐபிஎல் ஸ்ட்ரைக் ரேட் 148.96 என்று இருக்க அவர் ஸ்ட்ரைக் ரேட் பட்டியலில் 9-ம் இடத்தில் இருக்கிறார்.

இவருக்கு மேலே இங்கிலாந்தின் அதிரடி மன்னன், ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 148.59 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். இவருக்கும் மேலே இப்போதைய ஐபிஎல் நட்சத்திர நாயகன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 149.20 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார்.

ஆனால் டாப் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருப்பவர் யார் தெரியுமா? மே.இ.தீவுகளின், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆந்த்ரே ரஸல் என்றால் நம்ப முடிகிறதா? ரஸலின் ஸ்ட்ரைக் ரேட் 174.67. இவர்தான் நம்பர் 1. இதுவரை ஐபிஎல் தொடரில் 1291 பந்துகளைச் சந்தித்து 2,255 ரன்களைக் குவித்துள்ளார்.

இவருக்கு அடுத்த இடத்திலும் நாம் எதிர்பார்க்காத ஒரு வீரர்தான் உள்ளார், இவரும் மே.இ.தீவுகளைச் சேர்ந்தவர்தான், கொல்கத்தா அணிக்காக ஒரு சீசனில் தொடக்க வீரராக இறங்கி அனைத்து பவுலர்களையும் சாத்தி எடுத்த சுனில் நரைன் தான் அது. சுனில் நரைனின் ஐபிஎல் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 160.03.

இவருக்கு அடுத்த இடத்தில் 157.42 ஸ்ட்ரைக் ரேட் கிளென் மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரன் 156.16 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அடுத்த இடத்திலும் விரேந்திர சேவாக் 155.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை ஐபிஎல் தொடர்களில் எடுத்துள்ளார்.

ஆகவே கெய்ல் என்னதான் அச்சுறுத்தும் வீரராக இருந்தாலும் நம் விரூதான் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE