'அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுங்கள்' - சுப்மன் கில்லை பாராட்டிய கோலி

By செய்திப்பிரிவு

பெங்களூரு: அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுங்கள் என நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் கில்லை, விராட் கோலி மனதார பாராட்டியுள்ளார்.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் நடப்பு சீசனின் 62-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில், 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்றொரு வீரரான சாய் சுதர்சன், 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். அந்த அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஹைதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார், 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இப்போட்டியில் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் கில்லை கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தொடர்ந்து சிறப்பாக ஆடுங்கள்... அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக ..” என இளம் வீரரான கில்லை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

நடப்பு சீசனில் கில், 13 இன்னிங்ஸ் விளையாடி 574 ரன்கள் குவித்துள்ளார். இதில் தலா ஒரு சதம் மற்றும் அரைசதம் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 48.00. ஸ்ட்ரைக் ரேட் 146.19. இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பை கில் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE