சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது.
இந்த சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாடிய கடைசி லீக் ஆட்டம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்திருந்தனர். சிஎஸ்கே இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டிருந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கும். ஆனால் அவர்களின் மகிழ்ச்சிக்கு கொல்கத்தா அணி முட்டுக்கட்டை போட்டது. சிஎஸ்கேவை அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த போட்டி முடிவடைந்ததும் தோனி தனது சக அணி வீரர்களுடன் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களுக்கு நெஞ்சுருக நன்றி தெரிவித்தார். முன்னதாக மைதானம் முழுவதும் `எல்லோருக்கும் நன்றி', `மீண்டும் சந்திப்போம்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
அதேவேளையில் `எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி...' போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை சிஎஸ்கே வீரர்கள் கையில் ஏந்தி வந்தனர்.
தொடர்ந்து ரசிகர்களுக்கு சில பரிசுப் பொருள்களை வழங்கினார் தோனி. ‘எல்லோருக்கும் நன்றி' என எழுதப்பட்டிருந்த மஞ்சள் நிற டீ சர்ட் மற்றும் தனது ஆட்டோகிராப் போடப்பட்ட ஒரு டென்னிஸ் பந்தையும் தோனியிடம் பரிசாக பெற்ற ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.
இதுதவிர, ‘நாங்கள் அடித்த பெரிய பெரிய சிக்ஸர்களைவிட உங்களின் அன்பு பெரிது' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அட்டை ரசிகர்களுக்கு வழங்கப்படடது. அதில் தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் அனைவரின் ஆட்டோகிராஃப்பும் இருந்தது.
இந்த நிகழ்வுகள் சிஎஸ்கே அணிக்கும் ‘மஞ்சள் ஆர்மி’ ஆன சிஎஸ்கே ரசிகர்களுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தியது. இந்த குதூகலத்துக்கு இடையே தோனி மைதானத்தில் இருந்தவாறு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் சூழ செல்ஃபியும் எடுத்தார்.
இது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கிரிக்கெட் ஜாம்பவானும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அனைத்தையும் மறந்துவிட்டு சிஎஸ்கே ரசிகராக மாறி தான் அணிந்திருந்த சட்டையில் தோனியிடம் ஆட்டோகிராஃப் போடுமாறு அன்பு தோய்ந்த குரலில் கேட்க சட்டென தோனியும் அவரது நெஞ்சு பகுதியில் கையெழுத்திட்டார். இது மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கிலான ரசிகர்களை நெகிழ வைத்தது.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மைதானத்தில் பாதுகாப்பு பணிக்கு நின்றிருந்த போலீஸார் பலரும் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கியபடி செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.
இந்த சீசனின் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது முதலே 41 வயதான எம்எஸ் தோனிக்கு இது கடைசி தொடராக இருக்கக்கூடும் என பலராலும் கருத்து கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதுதொடர்பாக தோனியோ, சிஎஸ்கே நிர்வாகமோ இதுவரை எந்தவித பதிலும் கூறவில்லை. ஒரு முறை டாஸ் நிகழ்வின் போது கூட, நான் ஓய்வு பெறுவதாக கூறவில்லை, நீங்கள்தான் கூறி வருகிறீர்கள் என நிகழ்ச்சியாளரை ஜாலியாக கிண்டல் செய்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் எங்கு திரும்பி பார்த்தாலும் ‘மீண்டும் சந்திப்போம்’ என்கிற வாசகம் தென்பட்டது. இது தோனி அடுத்த சீசனிலும் விளையாட வேண்டும் என்ற சிஎஸ்கே ரசிகர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருந்தது.
தோல்வி ஏன்?
கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறும்போது, “இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எங்கள் பந்துவீச்சாளர்கள் யாரையும் நாங்கள் குறை சொல்ல முடியாது. ஆடுகளத்தின் சூழ்நிலை விளையாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 2வது இன்னிங்ஸில் நாங்கள் முதல் பந்தை வீசும்போதே 180 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என நினைத்தோம்.
ஆனால் இதுபோன்ற ஆடுகளத்தில் 180 ரன்களை சேர்க்க வாய்ப்பே இல்லை. ஷிவம் துபே பேட்டிங் செய்த விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் திருப்தியடையவில்லை, தொடர்ந்து முன்னேற்றம் காண்பதில் கவனம் செலுத்துகிறார்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago