IPL 2023 | பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய குஜராத்: முதல் சுற்றோடு வெளியேறிய ஹைதராபாத்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 62-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதன் மூலம் நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி. கடந்த சீசனில் குஜராத் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில், 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்றொரு வீரரான சாய் சுதர்சன், 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். அந்த அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஹைதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார், 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணி 59 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் பேட்ஸ்மேன் கிளாசன், கிளாஸாக விளையாடி 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத். இந்த தோல்வியின் மூலம் முதல் சுற்றோடு நடப்பு சீசனில் இருந்து வெளியேறி உள்ளது ஹைதராபாத்.

குஜராத் அணியின் பவுலர்கள் ஷமி மற்றும் மோகித் சர்மா என இருவரும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். யஷ் தயாள், 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். நடப்பு சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளை பதிவு செய்துள்ளது குஜராத். இதன் மூலம் 18 புள்ளிகள் பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது அந்த அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE