IPL 2023: CSK vs KKR | ரிங்கு சிங், நிதிஷின் பொறுப்பான ஆட்டத்தால் வீழ்ந்த சிஎஸ்கே - கேகேஆர் 6வது வெற்றி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

145 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு ஓப்பனிங் சரியாக அமையவில்லை என்றாலும் கேப்டன் நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் அதிரடியால் மீண்டது.

ஓப்பனிங் இறங்கிய ஜேசன் ராய் 16 ரன்னிலும், ரஹ்மானுல்லா 1 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த மூவர் விக்கெட்டையும் தீபக் சஹார் வீழ்த்தினார். இதன்பின் வந்த நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் சென்னையின் பவுலிங்கை திறம்பட சமாளித்து ஆடியது.

ஒருகட்டத்துக்கு பின் அதிரடியை தொடங்கிய இருவரும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ரிங்கு சிங் 39 பந்துகளில் அரைசதம் கடந்தார். நடப்பு தொடரில் இது அவருக்கு 3வது அரைசதம் ஆகும். ரிங்கு சிங் அரைசதம் கடந்த சில நிமிடங்களிலேயே நிதிஷ் ராணாவும் அரைசதம் கடந்தார். இதன்பின் வெற்றிக்கு 17 பந்துகளில் 13 ரன்கள் தேவையான நிலையில் ரிங்கு சிங் எதிராபாரத விதமாக ரன் அவுட் ஆகினார்.

அந்த சமயத்தில் பதிரானா வொயிட் மற்றும் பவுண்டரி மூலம் இலவசமாக 5 ரன்கள் வாரி வழங்கினார். இறுதியில் நிதிஷ் ஒரு பவுண்டரி அடிக்க, 4 விக்கெட் 147 ரன்கள் எடுத்த கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நிதிஷ் ராணா 57 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார்.

நடப்பு தொடரில் கொல்கத்தா பெறும் 6வது வெற்றி இதுவாகும். அதேநேரம், சென்னை ஐந்தாவது தோல்வியைச் சந்தித்தது. தோனி தலைமையிலான சிஎஸ்கே 12 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றிருந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி ஆகியிருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, வழக்கம்போல் கெய்க்வாட் - கான்வே இணை துவக்கம் கொடுத்தது. இரண்டு பவுண்டரிகளை விளாசிய கெய்க்வாட் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே 17 ரன்கள் எடுத்திருந்த கெய்க்வாடை வெளியேற்றினார். இதன்பின் வந்த 16 ரன்களில் ரஹானேவையும் சக்கரவர்த்தி தனது சுழலால் வீழ்த்த, சிறிதுநேரத்தில் கான்வேவும் 30 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.

மிடில் ஆர்டரில் வந்த அம்பதி ராயுடுவையும் (4 ரன்கள்), மொயீன் அலியையும் (1 ரன்) ஒற்றை இலக்கத்தில் சுனில் நரைன் ஒரே ஓவரில் அவுட் ஆக்கினார். இதன்பின் ஷிவம் துபே பொறுப்புடன் விளையாடினார்.

கேப்டன் கடைசி இரண்டு பந்துகளைச் சந்தித்தார். ஆனால் இம்முறை அவரால் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. ஷிவம் துபே அதிகபட்சமாக 48 ரன்களைச் சேர்த்தார்.

கொல்கத்தாவின் சுழல் கூட்டணி வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் இருவரும் சேர்ந்து சென்னை அணியை பெரிய ரன்கள் குவிக்கவிடாமல் தடுத்தது. இருவரும் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர். குறிப்பாக சுனில் நரைன் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE