மறக்குமா நெஞ்சம் | இதே நாளில் 2019-ல் உதிரம் சிந்தி ஐபிஎல் ஃபைனலில் விளையாடிய வாட்சன்

By செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் ஃபைனலில் ரத்தம் சிந்தியபடி விளையாடியவர் ஷேன் வாட்சன். 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நடந்த அந்த மறக்க முடியாத ஆட்டம் குறித்து சற்றே திரும்பிப் பார்ப்போம்.

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாத போட்டிகளில் ஒன்றாக அமைந்தது கடந்த 2019 இறுதிப் போட்டி. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதே நாளில் அந்தப் போட்டியில் விளையாடின. இதில் வாகை சூடியது மும்பை அணிதான். ஆனால், ரசிகர்களின் நெஞ்சங்களை வென்றதோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்சன். போட்டியின் போது ரன் அவுட்டிலிருந்து தப்பிக்க வாட்சன் டைவ் அடித்தார். இதனால் முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தியபடி அவர் விளையாடிய இன்னிங்ஸ் அது.

இறுதிவரை அணியின் வெற்றிக்காக களத்தில் போராடினார். 59 பந்துகளில் 80 ரன்களை எடுத்த அவர், கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார். போட்டிக்குப் பிறகு இடது காலின் மூட்டுப் பகுதியில் அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டன. போட்டியின்போது தனக்கு காயம் ஏற்பட்டதை தான் உணரவே இல்லை என பின்னாளில் ஒரு பேட்டியில் அவரே சொல்லி இருந்தார்.

ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 150 ரன்கள் என்ற இலக்கை சென்னை அணி விரட்டியது. இருந்தும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே சென்னை எடுத்தது. ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இதன் மூலம் அப்போது நான்காவது முறையாக ஐபிஎல் அரங்கில் சாம்பியன் பட்டம் வென்றது.

சிஎஸ்கே அணிக்காக வாட்சன்: 2018 முதல் 2020 ஐபிஎல் சீசன் வரை ஷேன் வாட்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். சென்னை அணிக்காக 43 ஐபிஎல் போட்டிகளில் 1,252 ரன்கள் எடுத்தார். 7 அரை சதங்கள் மற்றும் 2 சதங்கள் இதில் அடங்கும். 28 ஓவர்கள் பந்து வீசி 6 விக்கெட்டுகளையும் கைபற்றினார். தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் அங்கம் வகித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE