உதைத்தெழு இந்தியா.. காத்திருக்கிறது உலகம்

By பெ.மாரிமுத்து

87 வருட பிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக இந்தியா யு 17 தொடரில் கலந்து கொண்டு விளையாட உள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக இந்த உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளது. ஆனால் மற்ற 23 அணிகளும் கண்டங்கள் வாரியாக நடத்தப்பட்ட தகுதி சுற்றுப் போட்டிகளில் வெற்றிகளை குவித்தே இந்த மெகா தொடருக்குள் நுழைந்துள்ளன. நடப்பு சாம்பியனான நைஜீரியா இந்த தொடருக்கு தகுதி பெறாதது துரதிருஷ்டவசம்தான். இந்தியாவை போன்று, நைஜர், நியூ கேலிடோனியா ஆகிய அணிகளும் முதன்முறையாக அறிமுகமாகின்றன.

ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும்போது, உலக அளவில் அதிக மக்கள் தொகையை கொண்ட 2-வது நாடாக விளங்கும் நாம், கால்பந்து அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க அணிகளில் அதி சிறந்த வீரர்களின் விசிறிகளாகவும், அவர்களை ஆதரிப்பவர்களாகவுமே இருந்து வருகிறோம். ஆனால் இப்போது முதன்முறையாக இந்திய இளம் அணியை நாம் ஆதரிக்க உள்ளோம். அதிலும் நமது நாட்டில் நடைபெறும் ஆட்டங்களில் களத்தில் நேரடியாக அவர்களை உற்சாகப்படுத்த உள்ளோம்.

இந்தத் தொடரில் கால்பந்தையே உயிர் மூச்சாகவும், பாரம்பரிய விளையாட்டாகவும் கொண்டுள்ள பல்வேறு அணிகளுக்கு எதிராக இந்திய இளம் வீரர்கள் எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பது ஆட்டம் தொடங்கிய பிறகே தெரியவரும்.

உலகக் கோப்பை திருவிழாவில் கலந்து கொள்ளும் 21 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பிடித்துள்ள பெரும்பாலான வீரர்கள் ஏழ்மை பின்னணியை கொண்டவர்கள். இவர்கள் 8 பேர் மணிப்பூரை மாநிலத்தை சேர்ந்தவர்கள். 21 பேர் கொண்ட இந்திய அணியின் தேர்வு அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. இதற்காக கடந்த சில வருடங்களாகவே இந்திய கால்பந்து சம்மேளனம் கூடுதலாகவே மெனக்கெட்டுள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து இந்திய அணி வீரர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடினமான சூழ்நிலைகளில் ஆட்டத்தை எப்படி கையாள வேண்டும் என்ற நுணுக்கங்கள் குறித்து விஷேச பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் நார்டின் மடோஸின் பயிற்சியின் கீழ் இளம் இந்திய அணி பட்டைத் தீட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் சிலி அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி 1-1 என டிரா செய்திருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் விளையாடிய விதம், உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதற்கட்டமாக எப்படியும் கால் இறுதிக்கு முன்னேறும் என்ற நம்பிக்கையை விதைத்தது. அணியில் வெற்றியை தேடிக் கொடுப்பவர்களாக நடுகள வீரர் மோமல் தாடல், ஜேக்சன் சிங், அமர்ஜித் சிங் மற்றும் தடுப்பாட்ட வீரர்களான சஞ்ஜீவ் ஸ்டாலின், அன்வர் அலி ஆகியோர் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கால்பந்தாட்ட டெக்னிக்கல் டைரக்டர் சேவியோ மெடிரா கூறும்போது, “கால்பந்து போட்டிகளில் நுட்ப ரீதியாக நமது வீரர்கள் பின் தங்கியிருந்தாலும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நமது வீரர்கள் தயாராக உள்ளனர்” என்றார். அதேவேளையில் அகில இந்திய கால்பந்தாட்ட டெக்னிக்கல் துணைத் தலைவர் ஹென்ரி மெனிசெஸ் கூறும்போது, “17 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி அடுத்த தலைமுறைக்கான அணி, மக்களின் ஆதரவு மற்றும் சிறிது அதிர்ஷ்டம் இருப்பின் இந்திய கால்பந்து வரலாற்றில் ஆச்சர்யங்கள் நிகழக்கூடும்” என்றார்.

அதீத பலம், அனுபவம் ஆகியவற்றை இந்திய அணி கொண்டிருக்காவிட்டாலும் 90 நிமிடங்கள் களத்தில் போராடும் குணத்தை மூலதனமாக கொண்டு களமிறங்குகிறது. 1950-ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற 4-வது உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு பிபா அழைப்பு விடுத்தது. போட்டிக்கான டிராவில் இந்தியா இடம் பெற்ற போதும், போக்குவரத்து செலவு காரணத்தை காட்டி உலகப் புகழ் வாய்ந்த இந்த தொடரில் பங்கேற்க இந்திய கால்பந்து சங்கம் மறுத்தது. ஒரு கட்டத்தில் போக்குவரத்து செலவில் பெரும் தொகையை ஏற்றுக்கொள்ள பிபா முன்வந்தது.

ஆனால் பயிற்சிக்கான போதிய நேரம், அணித் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளாலும், ஒலிம்பிக் போட்டிக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்திலும் இந்திய அணி, பிபா உலகக் கோப்பையில் இருந்து பின் வாங்கியது. இதற்கு முன்னதாக நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டில் இந்திய கால் பந்து அணி, லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கலந்து கொண்டது. இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் ஷூ அணியால் வெறும் கால்களுடன் விளையாடினார்கள்.

இதன் பின்னர் வெறும் கால்களுடன் விளையாடக்கூடாது என விதிகள் கொண்டுவரப்பட்டது. 1950-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா புறக்கணிக்க இதுவும் ஒரு காரணம் என கூறப்பட்டது. 1960 வரை இந்திய கால்பந்து அணி தொடர்ச்சியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. அதிகபட்சமாக 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் இந்தியா 4-வது இடத்தை பிடித்திருந்தது. கால்பந்து வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச உச்சம் என்பது 1951 மற்றும் 1962-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது தான்.

தற்போது நடைபெற உள்ளது 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர்தான் என்றாலும் பிபா நடத்தும் தொடரில் முதன் முறையாக காலடி எடுத்து வைக்கிறது இந்தியா. இது நம் வீரர்களின் எதிர்காலம் மட்டும் அல்ல. இந்திய கால்பந்து மற்றும் இந்திய விளையாட்டுத் துறை ஆகியவற்றின் எதிர்கால நலனும் அடங்கி உள்ளது. ரொனால்டினோ, மெஸ்ஸி, ரொனால்டோ உள்ளிட்ட பெரும் நட்சத்திர வீரர்களும் தங்களது கனவுகளை யு 17 உலகக் கோப்பை தொடரின் வாயிலாகவே விரிவடையச் செய்தனர். இந்திய வீரர்கள் களத்தில் பந்துகளை வெற்றிக்கான வேட்கையுடன் உதைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்திய அணி:

கோல்கீப்பர்கள்: தீரஜ் சிங், பிரப்சுகன் கில், சன்னி தாலிவால்

தடுப்பாட்டம்: போரிஸ் சிங், ஜிதேந்திர சிங், அன்வர் அலி, சஞ்சீவ் ஸ்டாலின், ஹென்றி அண்டனே, நமித் தேஷ்பாண்டே

நடுக்களம்: சுரேஷ் சிங், நிந்தோன்கன்பா மீதேய், அமர்ஜித் சிங் கியாம் (கேப்டன்), அபிஜித் சர்கார், கோமல் தாடல், லலேங்மாவியா, ஜேக்சன் சிங், நோங்டம்பா நயோரம், ராகுல் கன்னோலி பிரவீன், ஷாஜகான்

முன்களம்: ரஹிம் அலி, அங்கித் ஜாதவ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்