விருத்திமான் சாஹாவின் துணிச்சலான அதிரடியும் ‘பம்மும்’ கோலியும்!

By ஆர்.முத்துக்குமார்

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் என்ற அதிரடி ஸ்கோரை எட்டிய பிறகு லக்னோவை 171 ரன்களில் முடக்கியது. இந்த இன்னிங்சில் இந்திய அணியினால் புறக்கணிக்கப்பட்ட விருத்திமான் சாஹாவின் டி20 இன்னிங்ஸ் பலவிதங்களில் ஆச்சரியமேற்படுத்தியதோடு, விராட் கோலி ஏன் இப்படி ஆட முடியவில்லை என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

43 பந்துகளை சந்தித்த விருத்திமான் சாஹா, 10 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 81 ரன்களை விளாசித் தள்ளினார். மறுமுனையில் ஷுப்மன் கில் இன்னும் ஆக்ரோஷமாக ஆடி 51 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிச்கர்களுடன் 94 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 12 ஓவர்களில் 142 ரன்களை விளாசி நல்ல அதிரடி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

சாஹாவின் ஆகச்சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸ் இதுவென்றால் மிகையாகாது. விராட் கோலி, ரோகித் சர்மா, ஷுப்மன் கில் போன்ற தொடக்க வீரர் அல்ல சாஹா. ஆனால், விராட் கோலியிடமும் ரோகித் சர்மாவிடமும் இல்லாத ஒன்று சாஹா பேட்டிங்கில் உள்ளது. இதற்குக் காரணம் ரோகித் சர்மாவுக்கு பொறுப்பு இரட்டிப்பாகிவிட்டது. விராட் கோலி மற்ற வீரர்களைக் கணக்கில் கொண்டு ஸ்லோ ஆகிறார். ஆனால், உண்மை என்னவெனில் விராட் கோலியிடம் அனைத்து விதமான ஷாட்களும் இல்லை என்பதே. சூர்யகுமார் யாதவ் ஆடும் ஒரு ஷாட்டைக் கூட கோலியினால் ஆட முடியாது. ஸ்வீப் ஷாட்டே ஆட மாட்டார் கோலி.

சாஹாவின் பேட்டிங்கில் என்ன ஆச்சரியம் எனில் புல், ஹூக் ஷாட்களில் ஐபிஎல் தொடரில் 2022 முதல் அதிக ரன்களை எடுத்த டாப் 5 வீரர்களில் சாஹா இருக்கின்றார். தரவுகளின் படி சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 49 ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஹூக், புல் ஷாட் மூலம் 155 ரன்களை எடுத்துள்ளார் இருமுறை இத்தகைய பந்துகளில் அவுட் ஆகியுள்ளார்.

ஹூக், புல் ஷாட்களில் ஐபிஎல் தொடரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 2-வது இடத்திலும், டேவிட் வார்ன்ர் 3-ம் இடத்திலும், சாஹா, 60 ஷார்ட் பிட்ச் அல்லது பவுன்சர்களில் 118 ரன்களுடன் 4-ம் இடத்திலும், கே.எல்.ராகுல் 44 பந்துகளில் 108 ரன்களுடன் 5-ம் இடத்திலும் உள்ளனர். புல், ஹூக் ஷாட்களுக்குப் பெயர் பெற்ற விராட் கோலி, ரோகித் சர்மா இந்தப் பட்டியலில் இல்லை என்பது படுஆச்சரியமானது என்பதோடு சாஹா இதில் இடம்பெற்றிருப்பதே கூடுதல் சிறப்பு.

லக்னோவுக்கு எதிரான போட்டியில் கூட சாஹா இறங்கி வருவதைப் பார்த்த ஆவேஷ் கான் பந்தை ஷார்ட் ஆகக் குத்தி எழுப்ப, அதை நொடியில் கணித்து பின்னால் சென்று ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரிக்கு அனுப்பியதைப் பார்த்தோம். பிறகு இடது கை வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான் வீசிய நல்ல ஷார்ட் பிட்ச் வேகப்பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இருந்து எடுத்து லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார் சாஹா. இடது கை வீச்சாளர் வீசும் கோணம் வலது கை வீரருக்கு கடினமானது, ஆனால் அதை வேகத்துக்கு எதிரான திசையில் சாஹா சிக்சர் அடிக்கிறார் என்றால் இவரிடம் உள்ள திறமை இந்திய அணியினால் சரிவர பயன்படுத்திக் கொள்ளப்படவில்லையோ என்ற ஆதங்கம் எழுகின்றது.

ஒரு விக்கெட் கீப்பராக உயர்மட்ட பந்து வீச்சிற்கு எதிராக இத்தகைய இன்னிங்ஸை ஆடும் சாஹாவின் பேட்டிங், கிரண் மொரேயின் தைரியத்தையும், ரிஷப் பண்ட்டின் உறுதியையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. வெறும் புல், ஹூக் வைத்து அவரை சிறந்த பேட்டர் என்று கூறவில்லை. மோசின் கானை அடித்த ஆஃப் ட்ரைவும் அற்புத வகையைச் சேர்ந்தது. சாஹாவின் பேட்டிங் ஒரு பெரிய வெளிப்பாடுதான். அவருக்குத் தெரியும் இப்படி ஆடினால்தான், தான் ஐபிஎல்-ல் நீடிக்க முடியும் என்பது. இத்தனைக்கும் குஜராத் டைட்டன்ஸ் இவரை விக்கெட் கீப்பர் இல்லாத காரணத்தினால் கடைசியாக செலக்ட் செய்தது, ஆனால் ஓப்பனர் என்ற பொறுப்பைக் கொடுத்தது கேப்டன் ஹர்திக் பாண்டியா.

வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை நடந்து வந்து அடிக்கிறார். பந்து ஆஃப் வாலியாக இல்லாத போதும் உள்வட்டத்திற்கு வெளியே தூக்கி அடிக்கிறார். புதிய ஸ்ட்ரோக்குகளையும் விருத்தி செய்துள்ளார் விருத்திமான். ஆனால், இவரையெல்லாம் கொண்டாட ஆட்கள் இல்லை. தோனி வந்து ஒரு ரன் எடுத்தால் ‘தலைவா’ என்று அலறும் கும்பல், கோலி வந்து அறுவையைப் போட்டாலும் ‘கிளாசிக்’ என்று விதந்தோதும் ரசிக மணிகளுக்கு சாஹாவின் கிரிக்கெட் எட்டிக்காய்தான்.

மாறாக விராட் கோலி அடித்து ஆடத் தொடங்குகிறார், பிற்பாடு சோர்ந்து விடுகிறார். அவரால் அடிக்க முடியவில்லை. அவரிடம் அடிப்பதற்கான தீவிரம் குறைந்து அணிக்காக ஆடும் நோக்கம் போய் தனிப்பட்ட முறையில் 50 ரன்களை அடிப்போம், ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரராக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் தெரிகின்றது. அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தோற்ற போட்டியில் விராட் கோலி 46 பந்துகளில் 55 ரன்களையே எடுக்க முடிந்தது. ஒரு நாள் போட்டிகளிலேயே இப்போதெல்லாம் இதைவிட வேகமாக ஆடுகின்றனர். டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷலிஸ்ட் ஜோ ரூட் கூட டெஸ்ட் போட்டிகளில் இதைவிட வேகமாக ரன் எடுக்கும் வீரராக மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் கூட்டணியில் உருவாகி விட்டார். ஆனால், கோலி இந்த வரிசையில் பின் தங்கி விட்டார்.

சாஹாவின் கிரிக்கெட் கரியர் திராவிடினாலும், பிசிசிஐ-யினாலும் முடித்து வைக்கப்பட்டாலும். இன்னும் உத்வேகத்துடன் அவர் ஆடுவது மற்ற வீரர்களுக்கான கிரியா ஊக்கியாக வினையாற்றும் என்பதில் ஐயமில்லை. வர்ணனையாளர்கள், சூப்பர் ஸ்டார்கள் நடந்தால் ஓடினால், நின்றால் ரசித்துப் புகழ்பாடி துதிபாடி லயிக்கும் அதே விதத்தில் இல்லாவிட்டாலும் சாஹா போன்ற தீரா முயற்சியுடையோரை இகழாமல் இருந்தால் சரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்