மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சபலென்கா சாம்பியன்

By செய்திப்பிரிவு

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த திங்கள்கிழமை (மே 1) தொடங்கியது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரை இறுதியில் சபலென்காவும், கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியும் மோதினர். இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றுக்கு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற மற்றொரு அரை இறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கும், ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குன்டர்மெடோவாவும் மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சுற்றில் சபலென்காவும், இகா ஸ்வியாடெக்கும் மோதினர். முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் சபலென்கா கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டில் சுதாரித்து விளையாடிய ஸ்வியாடெக் 6-3 என்ற கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட்டில் சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-3 என்ற கணக்கில் வென்றார். இதையடுத்து மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை சபலென்கா வசப்படுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE