சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே 2-வது இடத்துக்கு முன்னேறியது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று பிற்பகலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கவில்லை. மாறாக இஷான் கிஷனுடன், கேமரூன் கிரீன் களமிறங்கினார். ஆனால் இந்த வியூகம் மும்பை அணிக்கு கைகொடுக்கவில்லை. ஏனெனில் முதல் 3 ஓவர்களுக்கு உள்ளேயே இவர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மேகரூன் கிரீன் 6 ரன்கள் எடுத்த நிலையில் துஷார் தேஷ்பாண்டே பந்தில் போல்டானார். ரோஹித் சர்மா 3 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் தீபக் சாஹர் பந்தில் வித்தியாசமான ஷாட் விளையாட முயன்று ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இஷான் கிஷன் (7), தீபக் ஷாகர் சிறந்த நீளத்தில் வீசிய பந்தை தூக்கி அடித்தபோது தீக்சனாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 ரன்னில் நடையை கட்டினார். நெஹால் வதேரா 51 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேர்த்தார். அவரது நிதானமான ஆட்டம் காரணமாகவே மும்பை அணியால் கவுரவமான இலக்கை கொடுக்க முடிந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிம் டேவிட் 2 ரன்னில் பதிரனா பந்தில் வெளியேறினார். சிஎஸ்கே தரப்பில் பதிரனா 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். தீபக் சாஹர் , துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
» IPL 2023: RCB vs DC | பில் சால்ட்டின் ‘ஒன்மேன் ஷோ’ - டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி
» IPL 2023: RCB vs DC | கோலி, மஹிபால் பொறுப்பான ஆட்டம் - டெல்லிக்கு 182 ரன்கள் இலக்கு
140 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சிஎஸ்கே 17.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக டேவன் கான்வே 42 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சேர்த்தார். ஷிவம் துபே 18 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி 2 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட் 16 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் விளாசிய நிலையிலும், அஜிங்க்ய ரஹானே 17 பந்துகளில், 21 ரன்கள் எடுத்த நிலையிலும் பியூஸ் சாவ்லாபந்தில் ஆட்டமிழந்தனர்.
அம்பதி ராயுடு 12 ரன்களில் ஸ்டப்ஸ் பந்தில் வெளியேறினார். மதீஷா பதிரனா ஆட்ட நாயகனாக தேர்வானார்.
11 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கேவுக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 13 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. லக்னோ அணிக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டிருந்ததால் அந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்திருந்தது. மும்பை அணி 5-வது தோல்வியை சந்தித்தது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 10 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் தொடர்கிறது.
சிஎஸ்கே தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 10-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 9-ம் தேதி சொந்த மண்ணில் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது.
இறுதி ஓவர்களும் பதிரனாவும்..: 2023-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இறுதிக்கட்ட ஓவர்களில் (16 முதல் 20 ஓவர்கள்) சிஎஸ்கேவின் மதீஷா பதிரனா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இறுதிக்கட்டங்களில் இதுவரை பதிரனா 16.2 ஓவர்களை வீசி 123 ரன்கள் வழங்கி 10 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். 45 டாட் பால்கள் வீசியுள்ளார். சிஎஸ்கேவின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான துஷார் தேஷ்பாண்டவும் 10 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். எனினும் அவர், ஓவருக்கு சராசரியாக 12.97 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.
பவர்பிளேவில் மோசம்: சிஎஸ்கேவுக்கு எதிராக நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பவர்பிளேவில் (முதல் 6 ஓவர்கள்) 34 ரன்களே எடுத்தது. ஐபிஎல் தொடரில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு மும்பை அணி பவர்பிளேவில் எடுத்த குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்தது.
‘டக் அவுட் மன்னன்’: ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. சேப்பாக்கத்தில் நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித் சர்மா 3 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் தீபக் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் சர்மா டக் அவுட்டில் வெளியேறுவது இது 16-வது முறையாகும். இந்த வகையிலான மோசமான சாதனை பட்டியலில் சுனில் நரேன் 2-வது இடத்தில் உள்ளார். அவர், 15 முறை டக் அவுட்டில் நடையை கட்டியுள்ளார். மன்தீப் சிங், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் தலா 15 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர்.
‘முக்கியமான ஆட்டத்தில் வெற்றி’: வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியதாவது: இந்த ஆட்டம் எங்களுக்கு மிக முக்கியமான ஆட்டமாக அமைந்தது. புள்ளிப் பட்டியலைப் பார்த்தாலே இது தெரியும். கடந்த சில ஆட்டங்களாக நாங்கள் எதிர்பார்த்த வெற்றி எங்கள் பக்கம் வரவில்லை. முக்கியமான ஆட்டத்தில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக நிற்கிறோம். மதிஷா பதிரனா மிகவும் அருமையாக பந்துவீசினார். இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைய ஆட்டங்கள்:
குஜராத் - லக்னோ
இடம்: அகமதாபாத்; நேரம்: பிற்பகல் 3.30
ராஜஸ்தான் - ஹைதராபாத்
இடம்: ஜெய்ப்பூர்; நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோசினிமா
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago