IPL 2023: GT vs RR | சகா, ஹர்திக்கின் பொறுப்பான ஆட்டம் - ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது குஜராத்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எளிதில் வீழ்த்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்ய, அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

குஜராத் அணியின் துருப்பு சீட்டான ஆப்கன் பவுலர்கள் ரஷீத் கான், நூர் அகமதுவின் துல்லியமான சுழல் பந்துவீச்சில் ராஜஸ்தான் சிக்கி சிதறியது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 30 ரன்களும், டிரெண்ட் போல்ட் 15 ரன்களும் எடுத்தனர். குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய, குஜராத் அணி 13.5 ஓவரில் வெற்றியை பெற்றது. ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் விரித்திமான் சகாவும், ஷுப்மன் கில்லும் ஜொலிக்க அந்த அணி விரைவாக ரன்களை குவிக்க ஆரம்பித்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர்.

இதன்பின் ஷுப்மன் கில் 36 ரன்னில் அவுட்டாக சகாவுக்கு தோள் கொடுத்தார் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா. இருவரும் விக்கெட்டை பறிகொடுக்காமல் அதிரடியாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்தனர். சகா 41 ரன்களும், பாண்ட்யா 39 ரன்களும் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தனர். இறுதியில், குஜராத் அணி 13.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

புள்ளிப்பட்டியலிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE