“உண்மையில் நடப்பது எதுவும் தெரியாது” - மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கங்குலி கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து உண்மையில் என்ன நடக்கிறது என்பது தனக்கு தெரியாது என்று சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 23-ம் தேதி முதல் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஏராளமான மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நாடு முழுவதும் பலரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆகியோர் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ அவர்கள் தங்களுடைய யுத்தத்தில் சண்டையிடட்டும். அங்கு என்ன நடக்கிறது என்பது உண்மையில் எனக்கு தெரியாது. செய்தித்தாள்களில்தான் படித்துத் தெரிந்து கொண்டேன்.

விளையாட்டு உலகத்தில், நமக்கு முழுமையான ஞானம் இல்லாத விஷயங்கள் குறித்து நாம் எதுவும் பேசக் கூடாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே, இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று நம்புகிறேன். மல்யுத்த வீரர்கள் நாட்டுக்கு ஏராளமான பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளனர். இந்த பிரச்சினை தீரும் என்று மனதார நம்புகிறேன்” என்று கங்குலி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE