IPL 2023: SRH vs KKR | கடைசி ஓவரில் ஜொலித்த வருண் சக்கரவர்த்தி - கொல்கத்தா 5 ரன்களில் வெற்றி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது கொல்கத்தா நைட் ரைட்ரஸ்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்ய, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங் நிலைக்கவில்லை. தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் டக் அவுட்டாக, வெங்கடேஷ் ஐய்யர் 7 ரன்னில் நடையைக் கட்டினார்.

ஜேசன் ராய் 20 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் நிதிஷ் ரானா அதிரடியாக விளையாடி 31 பந்தில் 42 ரன்களில் வெளியேறினார்.

ஆண்ட்ரூ ரஸ்ஸல் 24 ரன்கள், சுனில் நரைன் 1 ரன், ஷர்துல் தாக்குர் 8 ரன் என ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரிங்கு சிங் பொறுப்புடன் ஆடி 46 ரன்கள் சேர்த்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை சேர்த்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிய ஹைதராபாத் அணிக்கும் ஓப்பனிங் கைகொடுக்கவில்லை. பவுண்டரி, சிக்ஸர் என நம்பிக்கையுடன் தொடங்கிய மயங்க் அகர்வால் 18 ரன்களில் முதல் விக்கெட்டாக வீழ, அபிஷேக் ஷர்மா 9 ரன்னில் நடையைக் கட்டினார்.

ராகுல் திரிபாதி 20 ரன்களோடு பெவிலியன் திரும்ப, ஹாரி ப்ரூக் வந்த வேகத்தில் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இப்படி ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் நிலைக்காமல் இருந்தாலும், கேப்டன் எய்டன் மார்க்ரம் பொறுப்புடன் விளையாடினார். அவருக்கு பக்க பலமாக இருந்தார் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென். 36 ரன்கள் சேர்த்த கிளாசென் அவுட் ஆன பின் சிறிது நேரத்தில் 41 ரன்கள் எடுத்திருந்த மார்க்ரமும் விக்கெட்டை பறிகொடுத்தார்.

எனினும், அப்துல் சமத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்தார். ஆனால், அது கைகூடவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட, வருண் சக்கரவர்த்தியின் பந்தை சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆனார். அவர் 21 ரன்கள் எடுத்திருந்தார்.

இதன்பின் கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டாலும் வருண் சக்கரவர்த்தி திறம்பட பந்துவீசி, சிக்ஸ் அடிக்கவிடாமல் தடுத்தார். இதனால் கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா மற்றும் ஷர்துல் தாகூர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE