‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ - ஃபார்முக்கு திரும்பிய சூர்யகுமார் யாதவ்

By செய்திப்பிரிவு

மொகாலி: நடப்பு ஐபிஎல் சீசனில் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை பதிவு செய்து இழந்த ஃபார்மை மீட்டெடுத்துள்ளனர் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ். இதன் மூலம் பந்து வீச்சாளர்கள் தனக்கு பந்துவீசுவது மிகவும் சவாலான காரியம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

அண்மைய நாட்களாக சர்வதேச கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் மோசமாக இருந்து வந்தது. இது நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் சில ஆட்டங்களில் பிரதிபலித்தது. ஆனால், அவரது ஃபார்மை மீட்டெடுக்க ஒரே ஒரு நல்ல இன்னிங்ஸ் மட்டும்தான் அவருக்கு தேவைப்பட்டது. அந்த இன்னிங்ஸ் பஞ்சாப் அணிக்கு எதிராக கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அன்று அவருக்கு கிடைத்தது. அதற்கு முன்பு கொல்கத்தா அணிக்கு எதிராக 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், அவர் நல்ல ரிதத்தில் தன்னை செட் செய்து கொண்டது பஞ்சாப் அணியுடனான இன்னிங்ஸிற்கு பிறகு தான். அதன் பின்னர் எதையும் கருதாமல் ‘காட்டடி’ அடித்து வருகிறார்.

26 பந்துகளில் 57 ரன்கள், 29 பந்துகளில் 55 ரன்கள், 31 பந்துகளில் 66 ரன்கள் விளாசி மாஸ் காட்டி வருகிறார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணி பவுலர்களுடன் மைண்ட் கேம் ஆடுகிறார். தனது ஷாட் மேக்கிங் கலை மூலம் அவர்களது பவுலிங் திட்டங்களை தவிடு பொடி செய்கிறார். அது பஞ்சாப் அணியுடன் நேற்று நடைபெற்ற 46-வது லீக் போட்டியிலும் பார்க்க முடிந்தது. அவரது தற்போதைய ஃபார்ம் 200+ ரன்கள் என்ற இலக்கை எளிதில் எட்டலாம் என்ற பாணியில் உள்ளது.

சூர்யகுமார் யாதவ் ரன் சேர்க்க தடுமாறியபோது அவருக்கு ஆதரவாக ரிக்கி பாண்டிங், யுவராஜ் சிங் ஆகியோர் பேசி இருந்தனர். நடப்பு ஐபிஎல் சீசனில் 9 இன்னிங்ஸ் விளையாடி உள்ள வர் 267 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 184.14. சராசரி 29.67. 3 அரைசதங்கள் பதிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE