‘இது ஆரம்பம் தான்; இனிதான் ஆட்டம்’ - நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன்!

By செய்திப்பிரிவு

காத்மாண்டு: நடப்பு ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது நேபாள கிரிக்கெட் அணி. இந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் ரோஹித் பவுடல் (Rohit Paudel) பெருமையுடன் தனது உணர்வினை பகிர்ந்துள்ளார்.

வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. அதில் ஆறாவது அணியாக நேபாளம் இணைந்துள்ளது. ‘ஏசிசி ஆடவர் ப்ரீமியர் கோப்பை’ தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஆசியக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது நேபாள அணி.

“இது மிகவும் சிறப்பான ஒன்று. ஒரு அணியாக எங்களுக்கு இது நல்லதொரு தொடக்கமாக அமைந்துள்ளது. இது எங்களுக்கு ஆரம்பம்தான். நாங்கள் மேலும் பல வெற்றிகள் பெறுவோம் என நான் நினைக்கிறேன். அருமையான அணி கிடைத்தமைக்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அணியின் பயிற்சியாளருக்கு இதில் பெரிய பங்கு உண்டு. ரசிகர்களுக்கு நன்றி” என நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் தெரிவித்துள்ளார்.

நேபாள நாட்டு மக்கள் கிரிக்கெட் விளையாட்டை அதிகம் விரும்பி பார்த்து வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை நேரில் காண ஆயிரக்கணக்கான மக்கள் மைதானத்திற்கு திரண்டனர். மைதானத்தில் இடம் இல்லாத காரணத்தால் மரத்தின் மீது ஏறி போட்டியை கண்டு ரசித்தனர். இந்த சூழலில் நேபாள கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்து வைத்துள்ள இந்த முதல் படி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE