கடைசி ஓவரில் மிரட்டிய இஷாந்த்: 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது டெல்லி!

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 44-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது டெல்லி கேபிடல்ஸ். கடைசி ஓவரை அற்புதமாக வீசி ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் டெல்லி அணியின் பவுலர் இஷாந்த் சர்மா.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் டைட்டன்ஸ் அணி விரட்டியது. முதல் ஓவர் முழுவதையும் எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார் சாஹா. அவரது விக்கெட்டை கலீல் அகமது கைப்பற்றினார்.

தொடர்ந்து நான்காவது ஓவரில் சுப்மன் கில் மற்றும் ஐந்தாவது ஓவரில் விஜய் சங்கரும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். தொடர்ந்து ஏழாவது ஓவரில் டேவிட் மில்லர் விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அபினவ் மனோகர் இடையே 62 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைந்தது. அபினவ், 33 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

18-வது ஓவரை கலீல் அகமது அற்புதமாக வீசி இருந்தார். இருந்தும் 19-வது ஓவரை வீசிய நோர்க்யாவின் ஓவரில் 21 ரன்கள் எடுத்தது குஜராத். ராகுல் திவாட்டியா, ஹாட்-ட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார்.

கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட இஷாந்த் சர்மா அந்த ஓவரை வீசினார். 2, 1, 0, விக்கெட், 2 மற்றும் 1 என மொத்தம் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். அந்த ஓவரில் அதிரடி ஆட்டத்தின் மூலம் அச்சுறுத்தி வந்த திவாட்டியாவை அவர் வெளியேற்றினார். 7 பந்துகளில் 20 ரன்களை அவர் எடுத்திருந்தார். அதன் மூலம் டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா, 53 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது. டெல்லிக்கு மிகவும் மோசமான தொடக்கம் அமைந்தது. முதல் பந்திலேயே பிலிப் சால்ட் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் டேவிட் வார்னர் ரன் அவுட். 3-வது ஓவரில் ரிலீ ரோசோவ் அவுட்.

அடுத்து பிரியம் கார்க் என முதல் 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 23 ரன்களை மட்டுமே சேர்த்தது டெல்லி. அமன் ஹக்கீம் கான் மற்றும் அக்சர் படேல் இணைந்து ரன்னை கூட்டினர். ஆனாலும் அக்சர் படேல் 27 ரன்களிலும், அமன் ஹக்கீம் கான் 51 ரன்களிலும் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் சோபிக்காததால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி, 130 ரன்களை மட்டுமே சேர்த்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE