வரலாற்றில் முதல்முறை | ஆசியக் கோப்பைக்கு தகுதி பெற்ற நேபாள கிரிக்கெட் அணி!

By செய்திப்பிரிவு

காத்மண்டுவில் இன்று நடைபெற்ற ஏசிசி ஆடவர் பிரீமியர் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நேபாள அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 2023 ஆசிய கோப்பை தொடரில் விளையாட நேபாள அணி தகுதி பெற்றுள்ளது.

காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் 17 வயதான குல்ஷன் குமார் ஜா 84 பந்துகளில் குவித்த 67 ரன்கள் நேபாள அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதன்மூலம் நேபாள கிரிக்கெட் அணி, செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பை போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது, மேலும் அந்த அணி குரூப் A வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது முதலே அது இந்தியாவில் கடும் விவாதத்துக்கு உள்ளானது. இரண்டு நாடுகளுக்கும் பொதுவான ஒரு இடத்தில் இத்தொடரை வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.

ஆசியக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று ஏசிசி தலைவர் ஜெய்ஷா கடந்த ஆண்டே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி, ஆசிய தொடரில் பாகிஸ்தான் அணி தனது போட்டிகளை உள்நாட்டிலும், இந்திய அணி அதன் போட்டிகளை பொதுவான ஒரு இடத்திலும் விளையாடும் என்று முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார்.

ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை, செப்டம்பர் 2 முதல் 17 வரை நடைபெறும். எனினும், போட்டி நடைபெறும் இடம் இன்னும் தேர்வு செய்யப்படாததால், போட்டிகளின் சரியான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE