அனல் பறந்த ஆடுகளம் | கோலியுடன் மல்லுக்கு நின்ற கம்பீர், மிஸ்ரா, நவீன்-உல்-ஹக்

By செய்திப்பிரிவு

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்தப் போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கை கொடுத்துக் கொண்ட போது ஆர்சிபி வீரர் கோலி மற்றும் எல்எஸ்ஜி அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரும் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எல்எஸ்ஜி வீரர் அமித் மிஸ்ராவும், கோலியுடன் வாக்குவாதம் செய்தார். அதற்கு முன்னதாக கோலியும், நவீன்-உல்-ஹக்கும் வாக்குவாதம் செய்தனர்.

இருந்தபோதும் இரு அணிகளை சேர்ந்த மற்ற வீரர்கள் அவர்களை விலக்கி விட்டனர். ஆட்டம் முடிந்த நிலையில் ஆடுகளத்தில் அந்த சில நிமிடங்கள் அனல் பறந்தது.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ விரட்டியது. ஆடுகளம் மிகவும் நிதானமாக இருந்தது. ஆனாலும் லக்னோ வீரர்கள் அதிரடியாக ஷார்ட் ஆட முயன்று விக்கெட்டை இழந்தனர். அதே நேரத்தில் அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக 9 விக்கெட்டுகளை இழந்த பிறகே பேட் செய்ய வந்தார். லக்னோ அணியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் லக்னோ அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தும் போதெல்லாம் அதை ஆக்ரோஷமாக கொண்டாடி தீர்த்தார் கோலி. மைதானத்தில் ஆர்சிபி அணிக்கான ஆதரவும் அமோகமாக இருந்தது. பேட்டிங்கில் 30 பந்துகளில் 31 ரன்களை எடுத்த அவர் 2 கேட்ச்களையும் பிடித்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக், பேட் செய்த போது கோலியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதுதான் ஆட்டம் முடிந்த பிறகு கம்பீர் மற்றும் கோலி இடையே வாக்குவாதம் எழ காரணம் என தெரிகிறது. ஆட்டம் முடிந்த பிறகு கோலி, நவீன்-உல்-ஹக் உடன் கை கொடுத்த போது அவர் ஏதோ கோலியிடம் கேட்டுள்ளார். அதுதான் இது அனைத்திற்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

அதன் பின்னர் பரிசளிப்பு நிகழ்விற்கு பிறகு கோலியுடன் பேசிக் கொண்டிருந்த லக்னோ வீரர் மேயர்ஸை இடைமறித்து அழைத்து சென்றார் கம்பீர். இது அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பானது.

நடப்பு சீசனில் இரு அணிகளும் இதற்கு முன்னர் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடின. அதில் லக்னோ வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் கவுதம் கம்பீர் ‘அமைதியா இருக்கணும்’ என்பதை சொல்லும் விதமாக சைகை காண்பித்திருந்தார். அவரது செயல் அப்போது விமர்சிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE